ஜனவரி 9-ல் திமுக பொதுக்குழு கூடுகிறது: கட்சி நிர்வாகத்தில் மாற்றங்களை செய்ய திட்டம்
சென்னை திமுக மாநில பொதுக்குழுக் கூட்டம், ஜனவரி 9-ம் தேதி நடக்க உள்ளது. இதில் கட்சியின் நிர்வாக அமைப்பில் பல்வேறு மாற்றங்களை செய்ய திமுக தலைவர் கருணாநிதி திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திமுகவில் 14-வது உட்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் ஒரு சில மாவட்டங்கள் மற்றும் மாநில அளவிலான பொறுப்புகள் தவிர மற்ற பதவிகள் அனைத்தும் நிரப்பப்பட்டுள்ளன. புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 65 மாவட்டங்களில் 30 மாவட்டங் களுக்கான தேர்தல் சென்னையில் நடத்தி முடிக்கப்பட்டது. இந்நிலை யில், திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை ஜனவரி 9-ம் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கட்சியின் மேல்மட்ட அமைப்பில் புதிய பொறுப்புகள் உருவாக்க வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திமுக வட்டாரங்கள் தெரிவித்ததாவது:
மாவட்டச் செயலாளர்களுக்கான தேர்தல் கிட்டத்தட்ட முடிவடைந்துள்ளது. உட்கட்சி தேர்தலை பொங்கலுக்குள் முடிக்க வேண்டும் என்று கட்சித் தலைமை அறிவுறுத்தியதன் பேரில், ஒரு வாரத்துக்குள் மாவட்ட அளவிலான தேர்தல்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்படும். இதைத் தொடர்ந்து தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் போன்ற பதவிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டும். இந்தச் சூழலில் திமுகவின் பொதுக்குழுக் கூட்டத்தை நடத்த ஜனவரி 7, 8, 9 ஆகிய மூன்று தேதிகள் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது. இதில் 9-ம் தேதியை அவர் தேர்வு செய்துள்ளார். உட்கட்சி தேர்தலில் கிராமக் கிளையில் ஆரம்பித்து மாவட்டச் செயலாளர் வரை தனது ஆதரவாளர்களையே வெற்றி பெற வைத்துள்ள ஸ்டாலின், கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து, கட்சியில் உயர் பதவியை பெறுவதிலும் ஸ்டாலின் உறுதியாக உள்ளார். திமுக பொதுக்குழுவில் ஸ்டாலினின் எண்ணத்தை பொதுக்குழு உறுப்பினர்கள் பிரதிபலிப்பார்கள். மேலும், அதிருப்தியில் உள்ள சீனியர்கள் சிலர் பாஜகவுக்கு போவதாக தகவல்கள் வரவே, அவர்களை சமாதானப்படுத்த கட்சியின் தலைமை நிர்வாக பொறுப்பில் கொண்டுவரவும் ஆலோசனைகள் நடக்கின்றன.
தற்போது 3 ஆக உள்ள துணை பொதுச்செயலாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர வாய்ப்புள்ளது. ஏற்கெனவே 3 துணைப் பொதுச் செயலாளர்கள் (பொதுப்பிரிவு - துரைமுருகன், தலித் பிரிவு - வி.பி.துரைசாமி, மகளிர் - சற்குண பாண்டியன்) உள்ளனர். இந்நிலையில், கொங்கு மண்டலம் மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்த பொதுப்பிரிவினருக்கான மேலும் 2 துணை பொதுச்செயலாளர் பதவிகளை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, மு.க.அழகிரியை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வருவதற்கான வேலைகளும் நடக்கின்றன. இதற்காக செல்வி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். எம்.மணிகண்டன்