தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரம் கொள்முதல்: விசாரணைக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

தனியார் நிறுவனங்களிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடப்பாண்டில் ரூ.27,147 கோடிக்கு மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சில குறிப்பிட்ட தனியார் நிறுவனங்களிடமிருந்து மின்சாரம் வாங்குவதற்காக மின்சார வாரியம் நிர்ணயித்துள்ள விலை பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு மின்சார வாரியம் ஆண்டுக்கு ரூ.9 ஆயிரம் கோடி முதல் ரூ.12 ஆயிரம் கோடி வரை இழப்பை சந்தித்து வருகிறது. மின்வாரியத்தின் நிர்வாகத் திறமையின்மையும், மின்சாரம் கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழலும் தான் இதற்குக் காரணம் என்று தொடர்ந்து குற்றஞ்சாற்றி வருகிறேன்.

ஆனால், தமிழக ஆட்சியாளர்களோ இதைப்பற்றியெல்லாம் கவலைப்படாமல் தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி மின்வாரியத்திற்கு இழப்பை ஏற்படுத்துகின்றனர். இழப்பு அதிகரிக்கும் போதெல்லாம் மின்கட்டணத்தை பெருமளவில் உயர்த்தி மக்களை பாதிப்புக்கு உள்ளாக்குகின்றனர்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு சொந்தமான மின் நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அடக்கவிலை அலகு (யூனிட்) ஒன்றுக்கு ரூ.3.00 க்கும் குறைவு தான். நெய்வேலி அனல் மின்நிலையம் உள்ளிட்ட மத்திய அரசு மின்நிலையங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் மின்சாரத்தின் விலையும் இதே அளவில் தான் உள்ளது.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் விலை அலகு ஒன்றுக்கு ரூ.2.00க்கும் குறைவு தான். தமிழகத்தில் மின்னுற்பத்தி குறைவாக உள்ள நிலையில் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது தவிர்க்க முடியாதது. எனினும், தனியாரிடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்யும் போது, அதற்காக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வகுத்துள்ள விதிகளை மின்வாரியம் பின்பற்ற வேண்டியது அவசியமாகும்.

ஆனால், சாமல்பட்டி மின் நிறுவனம், மதுரை மின் நிறுவனம், பிள்ளைபெருமாள்நல்லூர் மின்நிறுவனம், ஜி.எம்.ஆர். மின் நிறுவனம் ஆகிய 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு ரூ.15.14 என்ற விலையில் நடப்பாண்டில் 79 கோடி அலகு மின்சாரத்தை வாங்க மின்சார வாரியம் தன்னிச்சையாக முடிவு செய்திருக்கிறது.

மத்திய மின்நிலையங்களில் இருந்து சராசரியாக ஓர் அலகு ரூ.3.00 என்ற விலையில் மின்சாரம் வாங்கப்படுகிறது. வேறு சில தனியார் நிறுவனங்களிடமிருந்து ஓர் அலகு ரூ.4.26 முதல் ரூ.5.14 வரையிலான விலையில் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. அவ்வாறு இருக்கும்போது குறிப்பிட்ட சில தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டியதன் தேவை என்ன? என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.

தனியாரிடமிருந்து மின்சாரத்தை வாங்கும்போது ஒழுங்குமுறை ஆணையத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்; ஓர் அலகு மின்சாரத்திற்கு ரூ.5.50க்கும் மேல் விலை தரக்கூடாது என்பது ஒழுங்கு முறை ஆணையத்தின் விதியாகும். இந்த விதிகளையெல்லாம் காற்றில் பறக்கவிட்டு மிக அதிக விலை கொடுத்து தனியார் நிறுவனங்களிடமிருந்து அரசு மின்சாரத்தை வாங்கிக் கொண்டிருக்கிறது.

இந்த 4 தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து வாங்கவுள்ள 79 கோடி அலகு மின்சாரத்தை மத்திய மின் நிலையங்களிடமிருந்து வாங்கினால் ரூ. 237 கோடி மட்டுமே செலவாகும்; மற்ற தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து அதிகபட்ச விலை கொடுத்து வாங்கினாலும் ரூ.406 கோடி மட்டுமே செலவாகும்.

ஆனால், 4 தனியார் நிறுவனங்களிடமிருந்து ரூ.1205 கோடி கொடுத்து தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குகிறது. இதனால் மின்வாரியத்திற்கு கண்ணுக்குத் தெரிந்து ரூ.800 கோடி முதல் ரூ.1000கோடி வரை இழப்பு ஏற்படும். தேவையே இல்லாமல் தனியார் நிறுவனங்களிடமிருந்து இவ்வளவு அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய அவசியம் என்ன? இந்த மின்சாரக் கொள்முதலின் பின்னணியில் பயனடையப் போகிறவர்கள் யார், யார்? என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும்.

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மொத்த வருமானத்தில் 55% வெளியிலிருந்து மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிடப்படுகிறது. இதேநிலை நீடித்தால் மின்வாரியத்தின் இழப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்குமே தவிர குறையாது.

தமிழகத்தை மாறிமாறி ஆட்சி செய்யும் திராவிடக் கட்சிகள் மின் தேவையை முன்கூட்டியே கணக்கிட்டு அதற்கேற்றவாறு மின்திட்டங்களை நிறைவேற்றியிருந்தால், மொத்த வருவாயில் பெரும் பகுதியை வெளியிலிருந்து மின்சாரம் வாங்குவதற்காக செலவிடும் நிலையை தவிர்த்திருந்திருக்கலாம்.

ஆனால், தனியாரிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி அதன் மூலம் லாபம் அடைவதில் காட்டிய அக்கறையை மின்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்துவதில் காட்டவில்லை என்பது தான் தமிழகத்தின் சாபக்கேடு ஆகும். தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் கடந்த 43 மாதங்களில் ஒரு மெகாவாட் அளவுக்கான மின்திட்டங்கள் கூட உருவாக்கி செயல்படுத்தப்படவில்லை என்பது தான் அதிர்ச்சியளிக்கும் கசப்பான உண்மை ஆகும்.

எனவே, வீண் பெருமைகளை பேசுவதை விடுத்து, மின்திட்டங்களைச் செயல்படுத்தி தமிழ்நாட்டை மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்