கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை இறப்பு: ஜன்னல் கண்ணாடிகள் உடைப்பு; போலீஸ் தடியடி

சேத்துப்பட்டு பிருந்தாவனம் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (30). இவரது மனைவி சொப்னா (24). நிறைமாத கர்ப்பிணியான சொப்னா பிரசவத்துக்காக, அமைந்தகரை புல்லா அவென்யூவில் உள்ள மாநகராட்சி மருத்துவமனையில் கடந்த 21-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். சுகப்பிரவத்துக்கு வழி இல்லை என்பதால், நேற்று முன்தினம் சிசேரியன் நடைபெற்றது.

இதில் சொப்னாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை 3 கிலோ 750 கிராம் எடையுடன் ஆரோக்கியமாக இருந்தது. ஆனால் தாய் சொப்னாவுக்கு ரத்த சோகை இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சொப்னாவும், குழந்தையும் அனுமதிக்கப்பட்டனர். இருவருக்கும் டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்து நிலையில், நேற்று காலை 11 மணி அளவில் சொப்னா குழந்தைக்கு பால் கொடுத்துள்ளார். ஆனால் சிறிது நேரத்தில் குழந்தை உயிரிழந்தது.

குழந்தை மூச்சுத் திணறல் ஏற்பட்டு இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதை அறிந்த சொப்னாவின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு டாக்டர்கள், நர்ஸ்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பின் மருத்துவ மனை ஜன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த 50-க்கும் மேற்பட்ட போலீஸார் தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர்.

அதன்பின் உறவினர்கள் இறந்த குழந்தையை பெற்றுக் கொண்டு வீட்டுக்கு கொண்டு சென்றனர். இதனால் கீழ்பாக்கம் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து, சொப்னாவின் தாய் அகிலா கூறுகையில், ‘சொப்னாவுக்கு உடல்நிலை சரியில்லை என்றுதான் மருத்துவமனையில் அனுமதித்தோம். குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தது. உடல்நிலை சரியில்லாத சொப்னாவை குழந்தைக்கு பால் கொடுக்கும்படி கட்டாயப் படுத்தினர்’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE