கலப்பு மண தம்பதிகளை பாதுகாக்க தனிச் சட்டம் வேண்டும்: புதிய தமிழகம் தலைவர் வலியுறுத்தல்

கலப்புத் திருமண தம்பதிகளை பாதுகாக்க தனிச் சட்டம் இயற்ற அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி.

திருவாரூர் மாவட்டம், கோட்டூர் அருகே கலப்புத் திருமணம் செய்துகொண்ட மாற்றுத்திறனாளி அமிர்தவள்ளி - பழனியப்பன் தம்பதிகள் மற்றும் பச்சிளம் ஆண் குழந்தை ஆகியோர் கொலை செய்யப்பட்டதைக் கண்டித்து புதிய தமிழகம் கட்சி சார்பில் திருவாரூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை வகித்த கிருஷ்ணசாமி பேசியதாவது:

அண்மைக் காலமாக கலப்புத் திருமணம் செய்பவர்களை கவுரவக் கொலை என்ற பெயரில் கொலை செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. தருமபுரியில் இளவரசன் - திவ்யா கலப்புத் திருமணம் தற்கொலையில் முடிந்தது. கலப்புத் திருமணங்களுக்கு எதிரான உணர்வை தூண்டும் வகையில் ஒரு சில அமைப்பினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளனர். இது கண்டிக்கத்தக்கது.

கலப்புத் திருமணங்கள் அதிகரித்தால்தான் நாட்டில் சாதி பேதம், தீண்டாமை, சமூக ஏற்றத்தாழ்வு ஒழியும். எனவே, கலப்புத் திருமணங்களைப் பாதுகாக்கும் வகையில் புதிய சட்டத்தை அரசு இயற்ற வேண்டும் என்றார். ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலர் உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE