விற்பனைப் பிரதிநிதி போல வந்து நோட்டம்: கொள்ளையருக்கு துப்பு கொடுத்த பெண்கள் உட்பட 6 பேர் கைது

By செய்திப்பிரிவு

வில்லிவாக்கத்தில் வீடு புகுந்து பெண்ணைக் கட்டிப்போட்டு கொள்ளையடித்த கொள்ளையர்கள், அவர்களுக்கு துப்பு கொடுத்த 2 பெண்கள் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். விற்பனைப் பிரதிநிதிகள் போல நடித்த 2 பெண்கள், வீட்டில் பெண் தனியே இருக்கும் விஷயத்தை கொள்ளையர்களிடம் கூறி வரவழைத்தது தெரியவந்துள்ளது.

சென்னை வில்லிவாக்கம் திரு நகர் சீனிவாசா அவென்யூவில் வசிப்பவர் சுரேஷ் (36). தனியார் வங்கி மேலாளர். கடந்த 22-ம் தேதி வீட்டில் இவரது மனைவி சவுந்தர்யா (30) தனியாக இருந்தார். அப்போது, முகவரி கேட்பதுபோல 4 பேர் உள்ளே புகுந்துள்ளனர். அவரை கட்டிப்போட்டு 20 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். வில்லிவாக்கம் காவல் உதவி ஆணையர் முருகேசன், ஆய்வாளர் கல்யாண சுந்தரம் நடத்திய விசாரணையில், வியாசர்பாடியை சேர்ந்த கும்பல் இந்த கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

வியாசர்பாடியை சேர்ந்த ராஜேஷ் (25), ஜெகன் (26), மதுரை வீரன் (25), தாட்சாயிணி, ஷீலா, கார் ஓட்டுநர் ராஜ்குமார் (28) ஆகிய 6 பேரை போலீஸார் நேற்று காலை கைது செய்தனர். வங்கி அதிகாரியின் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்ட 20 பவுன் நகைகள், கொள்ளையடிக்கப் பயன்படுத்தப்பட்ட கார், செல்போன்கள் அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

கொள்ளை நடப்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு, விற்பனைப் பிரதிநிதிகள் போல இருந்த 2 பெண்கள் அப்பகுதியில் சுற்றியுள்ளனர். சோப்பு விற்பனை செய்வதாக கூறிய அவர்கள், வீட்டில் சவுந்தர்யா மட்டும் இருப்பதை நோட்டமிட்டுள்ளனர். இதுபற்றி தங்களது கூட்டாளிகளான கொள்ளையர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். சிறிது நேரத்தில், முகவரி கேட்பதுபோல நடித்து அவர்கள் கொள்ளை அடித்தனர் என்பதும் தெரியவந்தது.

வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் பாதுகாப்பாக இருப்பது குறித்து காவல் உதவி ஆணையர் முருகேசன் கூறியதாவது:

அறிமுகம் இல்லாதவர்கள் வந்தால் வீட்டுக்குள் அனுமதிக்கக் கூடாது. வாசல்கேட்டுக்கு வெளியில் வைத்தே பேசி அனுப்பிவிட வேண்டும். விற்பனையாளர்கள் என்ற பெயரில் வருபவர்களை கேட்டுக்கு உள்ளே எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக்கூடாது.

பெண் விற்பனையாளர்கள் என்றால் இரக்கம் காட்டி உள்ளே அனுமதிப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, வீடுகளை நோட்டும் போடுவதற்காக பெண்களை அந்த கொள்ளைக் கும்பல் பயன்படுத்தியுள்ளது. நாம் சற்று முன்னெச்சரிக்கையாக இருந்தால் 90 சதவீத குற்றங்களை தடுத்துவிடலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE