கோயில் திருவிழாவில் மிரண்டு ஓடிய யானைகள்: மார்த்தாண்டம் அருகே பக்தர்கள் அச்சம்

மார்த்தாண்டம் அருகே கோயில் திருவிழாவில், யானைகள் மிரண்டு ஓடியதால், பக்தர்கள் அச்சம் அடைந்தனர். 4 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் யானைகளுக்கு மயக்க ஊசிகள் செலுத்தி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

மார்த்தாண்டத்தை அடுத்த மேல்புறம் அளப்பங்கோடு ஈஸ்வர காள பூதத்தான் கோயிலில் மண்டல பூஜை விழா நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு நடந்த யானைகள் ஊர்வலத்தில் அலங்கரிக்கப்பட்ட 25 யானைகள் பங்கேற்றன. இதில், ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஈந்திக்காளகாவு பகுதியில் இருந்து தொடங்கிய ஊர்வலம் அண்டுகோடு, மேல்புறம் சந்தை, மேல்புறம் சந்திப்பு வழியாக கோயிலை நோக்கி வந்தது. இரவு 12 மணியளவில் ஊர்வலத்தில் முன்னால் சென்ற யானை மீது மற்றொரு யானை மோதியது. இதனால், இரு யானைகளும் ஆவேசத்தில் ஒன்றோடு ஒன்று மோதியது. இரு யானைகளும் மிரண்டு ஊரவலத்தை விட்டு வெளியேறி ஓடியது.

இதை பார்த்த மற்றொரு யானையும் ஊர்வலத்தில் இருந்து ஓடத்தொடங்கியது. அச்சமும், அதிர்ச்சியும் அடைந்த பக்தர்கள் அங்கிருந்து சிதறி ஓடினர். மிரண்டு ஓடிய யானைகள் அங்கிருந்த வீட்டு மதில்சுவரைச் சேதப்படுத்தியது. ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்து அங்கிருந்த மரங்களை முறித்தது.

அதிர்ச்சியடைந்த பாகன்கள் 3 யானைகளையும் அடக்க முயன்றும் பலன்கொடுக்கவில்லை. யானைகள் மீது ஏற முயன்ற பாகன்களை யானைகள் உதறி தள்ளியதால், கீழே விழுந்தனர்.

கேரள மாநிலத்தில் இருந்து வந்த யானைகள் பாதுகாப்பு குழுவினர் துப்பாக்கி மூலம் யானைகளுக்கு மயக்க ஊசி செலுத்தினர். நேற்று அதிகாலை 4 மணிக்கு யானைகள் கட்டுக்குள் வந்தது. பின்னர் 3 யானைகளும் கேரள மாநிலத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. மிரண்ட யானைகள் ரப்பர் தோட்டத்துக்குள் புகுந்ததால், பாதிப்புகள் தவிர்க்கப்பட்டன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE