வைகுண்ட ஏகாதசிக்கு முன்பு பயன்பாட்டுக்கு வருகிறது ஸ்ரீரங்கம் யாத்திரீகர் விடுதி

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், 108 திவ்ய தேசங்களில் முதன்மையான தலமாகவும், பூலோக வைகுண்டம் என்ற பெருமையையும் கொண்டது. இங்கு தமிழகம் மட்டுமன்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் உற்சவங்களைக் கொண்ட பெருமையை உடையது ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில்.

ஸ்ரீரங்கம் அருகிலேயே புகழ் பெற்ற திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி உடனாய ஜம்புகேஸ்வரர் கோயில் மற்றும் தமிழகத்தில் உள்ள அம்மன் திருத்தலங்களில் முதன்மையான தலமாக விளங்கும் சமயபுரம் மாரியம்மன் கோயில் ஆகியவற்றுக்கும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

வெளியூர்களில் இருந்து இந்த தலங்களைத் தரிசிக்க வரும் பக்தர்கள் தங்குவதற்கு போதுமான அளவில் தங்கும் விடுதிகள் இந்த பகுதியில் இல்லாததால் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனைப் போக்கும் வகையில் 6.40 ஏக்கர் பரப்பளவில் கொள்ளிடக் கரையில் உள்ள பஞ்சக்கரை சாலையில் யாத்திரீகர்கள் தங்கும் விடுதியைக் கட்ட ஜூன் 2011-ல் அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

இதைத் தொடர்ந்து, ஒரே நேரத்தில் 1,000 பக்தர்கள் தங்கும் அளவுக்கு வசதிகொண்ட தங்குமிடங்கள் பல்வேறு பிரிவுகளாக நவீன வசதிகளைக் கொண்டு கட்டப்பட்டுள்ளன.

இந்த தங்கும் விடுதியை ஸ்ரீரங்கத்தில் கடந்த ஜூன் 30-ம் தேதி நடைபெற்ற அரசு விழாவில், அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா திறந்து வைத்தார். ஆனாலும், பணிகள் முழு அளவில் முடிவடையாததால், பக்தர்களின் பயன்பாட்டுக்கு இதுவரையில் கொண்டுவரப்படவில்லை.

இந்த நிலையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் வைகுண்ட ஏகாதசி விழா இம்மாதம் 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு ஜன.1-ம் தேதி நடைபெறவுள்ளது.

எனவே, இந்த விழாவுக்கு முன்பாக அதாவது இம்மாதம் 21-ம் தேதிக்கு முன்பாக இந்த விடுதியைத் திறக்க இறுதிக்கட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. தங்கும் விடுதிக்கான அறைக் கட்டணங்களும் இறுதி செய்யப்பட்டுவிட்டன. ஆனாலும் மேலிட உத்தரவுக்காக அறநிலையத் துறை காத்திருப்பதாகக் கூறப்படுகி றது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE