உழவர்களை பாதிக்கும் நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நிலங்களைக் கையகப்படுத்துவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான அவசரச் சட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. கோடிக்கணக்கான உழவர்களை பாதிக்கும் இந்த சட்டத்தைக் கொள்ளைப்புறமாக கொண்டு வரும் மத்திய அரசின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது.
நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் முடிவடைந்ததற்கு அடுத்த நாளே அமைச்சரவையை அவசரமாக கூட்டி காப்பீட்டுத்துறையில் நேரடி அந்நிய முதலீட்டு உச்சவரம்பை 49% ஆக உயர்த்தவும், நிலக்கரி வயல்களை ஏலத்தில் விடுவதற்கும் வகை செய்யும் அவசர சட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.
அந்த அதிர்ச்சி மறைவதற்கு முன்பாகவே நிலங்களை கையகப்படுத்துவதற்கான சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான அவசர சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. நிலங்களை கையகப்படுத்துவதற்கோ அல்லது அவசரமாக நிலங்களை கையகப்படுத்தி தொழிற்சாலைக் கட்டவோ எந்த அவசரமும் இல்லாத நிலையில், இப்படி ஒரு அவசர சட்டம் ஏன்? எனப் புரியவில்லை.
மக்களவைத் தேர்தலையொட்டி பரப்புரை செய்த பாரதிய ஜனதா தலைவர்கள், ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும்; தொடர்வண்டிக் கட்டணம் குறைக்கப்படும்; வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் 100 நாட்களில் மீட்டு வரப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும்’’ என்றெல்லாம் வாக்குறுதி அளித்தார்கள். நேரடியாக மக்களுக்கு அளித்த இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நரேந்திர மோடி அரசு, தொழிலதிபர்களுக்கு மறைமுகமாக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் துடிப்பதன் விளைவுகள் தான் இந்த அவசரச் சட்டங்கள்.
நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். இது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாகும். முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கொண்டுவரப்பட்ட, ‘நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை, நியாயமான இழப்பீடு பெறும் உரிமை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்தல் சட்டத்தின்’படி அரசு&தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, நிலங்களை பெரிய அளவில் கையகப்படுத்தும் போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் அவசர சட்டத்தில் அகற்றப்பட்டிருக்கிறது.
இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாக சொன்னால் மத்திய அரசு நினைத்தால் எந்த நிலத்தையும் எதிர்ப்பின்றி கைப்பற்றிக் கொள்ள முடியும்.
தேசப் பாதுகாப்பு, ராணுவம், ஊரக கட்டமைப்பு வசதிகள், சமூகக் கட்டமைப்புகள், தொழில்துறை தாழ்வாரங்கள் ஆகிய 5 தேவைகளுக்காக மட்டும் தான் விதிகள் தளர்த்தப்பட்டிருப்பதாகவும், மற்ற தேவைகளுக்கு நிலம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்படவில்லை என்று அமைச்சர் கூறியிருக்கிறார். மேற்கண்ட 5 தேவைகளுக்காக மட்டும் தான் 99% நிலங்கள் கையகப்படுத்தப்படுகின்றன என்பது தான் உண்மை.
இவற்றில் ராணுவத்திடம் மற்ற துறைகளின் வளர்ச்சிப் பணிகளுக்கு கொடுக்கும் அளவுக்கு தேவைக்கு அதிகமாக நிலம் இருப்பதால் முதல் இரு அம்சங்களுக்கும் நிலம் தேவைப்படாது. மீதமுள்ள 3 அம்சங்களும் தனியார் நிறுவனங்கள் நுழைந்து கோலோச்சக்கூடியவை. இந்த உண்மையை உணர்ந்தால் அவசர சட்டம் கொண்டு வரப்படுவதன் உண்மையாக காரணத்தை புரிந்து கொள்ளலாம்.
இந்திய மக்களில் மூன்றில் இரு பங்கினருக்கு விவசாயம் தான் வாழ்வாதாரமாக விளங்குகிறது. அவ்வாறு இருக்கும் போது தொழில்வளத்தைப் பெருக்கப் போகிறோம் என்று கூறி வேளாண்மையை நசுக்க முயல்வது கண்களை விற்று சித்திரம் வாங்குவதற்கு ஒப்பானதாகும்.
இப்போக்கு தொடர்ந்தால், உணவுக்காக உலக நாடுகளிடம் இந்தியா கையேந்தி நிற்கும் காலம் விரைவிலேயே வந்து விடும். இதையெல்லாம் உணர்ந்து நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தை மட்டுமல்ல... வேளாண் விளை நிலங்களை கையகப்படுத்தும் எண்ணத்தையே மத்திய அரசு அடியோடு கைவிட வேண்டும்" என அவர் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago