கூட்டணி பேச நேரம் இதுவல்ல: கிறிஸ்துமஸ் விழாவில் விஜயகாந்த் பேச்சு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் கூட்டணி குறித்து பேச இது நேரமல்ல கூட்டணி குறித்து பின்னர் தெரிவிக்கிறேன் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியுள்ளார்.

சென்னை கோயம்பேடில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நேற்று கிறிஸ்துமஸ் விழா நடந்தது. கட்சித் தலைவர் விஜயகாந்த், கேக் வெட்டி விழாவை தொடங்கி வைத்தார். பின்னர், ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு பிரியாணி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

விழாவில் பங்கேற்ற பேராயர் எஸ்றா சற்குணம் பேசும்போது, ‘‘சாதி பேதமற்ற ஒரே தலைவர் விஜயகாந்த. அவர் எல்லா பண்டிகைகளையும் கொண்டாடி வருகிறார். நானும் கடந்த 3 வருடங்களாக கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொள்ளும் போதெல்லாம் வேண்டுகோள் வைத்து வருகிறேன். இந்த முறையாவது பழம் பழுக்குமா? இது இலவம்பழமா அல்லது இலந்தைப்பழமா என்று தெரியவில்லை. ஆனால், பழுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. வரும் நாட்களில் நீங்கள் ஒருங்கிணைந்து, கூட வேண்டிய இடத்தில் ஒன்று கூடி நல்லதை செய்யவேண்டும். மக்களுக்கு நல்லது செய்ய, கூடவேண்டியவர்களோடு கூடி, சமூக நீதியை வலுப்படுத்த வேண்டும்’’ என்றார்.

இதையடுத்து விஜயகாந்த் பேசியதாவது:

சாதி, மதம் கடந்து எல்லா விழாக்களையும் கொண்டாடி வருகிறேன். பழம் பழுக்குமா? என்று பேராயர் கேட்டது திமுக தலைவர் கருணாநிதியை குறிப்பிட்டுதான் என்பது எனக்கு தெரியும் (சிரிப்புடன்). இது அதற்கான நேரம் அல்ல. அரசியல் பேசும் இடமும் இது அல்ல. இது கிறிஸ்துமஸ் விழா. பேராயர் கேட்ட கேள்விக்கு நான் பிறகு பதில் அளிக்கிறேன்.

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ‘கொசுத் தொல்லை அதிகமாக இருக்கிறது. கொசுகளை ஒழிக்க 30 இயந்திரங்கள் வாங்கப்படும், நீர்நிலைகளில் 5 லட்சம் நொச்சி செடிகள் வளர்க்க நிதி ஒதுக்கப்படும், 6 லட்சம் பேருக்கு கொசு வலைகள் வழங்கப்படும்’ என்று சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.

தமிழகத்தில் பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட 19 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு ரோடு போட ரூ.60 கோடி ஒதுக்கி இருப்பதாக அறிவித்தார்கள். இது போதுமா? மக்களின் முதல்வர் என்று சொல்லிக்கொண்டு கையை அசைத்தபடி வீட்டுக்குள் சென்றவர் இதுவரை வெளியே வந்து மக்களை சந்திக்கவில்லை. அது ஏன்? இங்கே எல்லா துறைகளிலும் தொடர்ந்து ஊழல் நடக்கிறது. பால் விலை, மின் கட்டண உயர்வு தமிழக மக்கள் தலையில் விழுகிறது. டாஸ்மாக் நிறுவனத்தில் மட்டும் ஏன் நஷ்டம் வருவதில்லை?

தேசியத் தலைவர் பிரபாகரன் இருந்தது வரை மீனவர்கள் பிரச்சினை வரவில்லை. அவர் இல்லாததால்தான் மீனவர் பிரச்சினை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மிக மோசமான ஆட்சி நடக்கிறது. இந்த ஆட்சிக்கு முடிவு கட்ட நல்ல நேரம் பாருங்கள். இந்த ஆட்சிக்கு முடிவு கட்டும் காலம் வரும்.

இவ்வாறு விஜயகாந்த் பேசினார்.

விழாவில் எல்.கே.சுதீஷ், பிரேமலதா விஜயகாந்த், எம்எல்ஏக்கள் பார்த்தசாரதி, சந்திரகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்