ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதம்: அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு மாதம் ரூ.1000 இடைக்கால நிவாரணம் - முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு

புதிய ஊதிய ஒப்பந்தம் தாமதமாவ தால், தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணமாக மாதம் ரூ.1000 வழங்கப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

2014-15ம் ஆண்டில் அரசு திட்டங்களுக்கு கூடுதலாக ரூ.1,751.18 கோடி நிதி ஒதுக்கு வதற்கான துணை நிதிநிலை அறிக்கையை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த 4-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதன் மீது பேரவையில் நேற்று விவாதம் நடந்தது. விவாதத்தில் பேசிய இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சி உறுப்பினர்கள், போக்குவரத்து தொழிலாளர்களின் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை தாமதமாவது குறித்து கேள்வி எழுப்பினர்.

விவாதத்துக்கு பதிலளித்து முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது: இந்தியாவிலேயே தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறைதான் குறைந்த கட்டணத்தில் நிறைவான சேவைகளை பொது மக்களுக்கு வழங்கி வருகிறது. எப்போதெல்லாம் டீசல் விலை உயர்த்தப்படுகிறதோ, அப்போ தெல்லாம் அந்த விலை உயர்வு பொதுமக்களை பாதிக்காத வகையில், ரூ.1,298 கோடி அளவுக்கு மானியம் வழங்கி, போக்குவரத்து கழகத்தையும் தொழிலாளர்களையும் தமிழக அரசு பாதுகாத்து வருகிறது.

போக்குவரத்துக் கழக ஊழியர் களுக்கு உரிய நேரத்தில் ஊதிய உயர்வு வழங்குவதில் இந்த அரசுக்கு மாற்றுக்கருத்து ஏது மில்லை. எனினும், நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கையும் கருத்தில் கொண்டு, போக்கு வரத்து ஊழியர்களின் நிலை யையும் உணர்ந்து, சில முடிவு களை அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ம் தேதி முதல் போக்கு வரத்து ஊழியர்களுக்கு நடைமுறைப் படுத்தப்பட வேண்டிய ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தொடர் பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், பேச்சுவார்த்தை தாமதமாகிறது. எனவே, தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் ஜனவரி 1-ம் தேதி முதல் 1.15 லட்சம் அரசு போக்குவரத்துக் கழக தொழிலாளர்களுக்கு இடைக் கால நிவாரணமாக மாதம் ஒன்றுக்கு தலா ரூ.1,000 வழங்கப் படும். உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு, புதிய ஊதிய ஒப்பந்தம் உரியவாறு மேற்கொள்ளப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE