முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்துகிறது மத்திய அரசு: தமிழக முதல்வர் பன்னீர்செல்வம் பாராட்டு

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெகுவாக பாராட்டினார்.

மேலும், தமிழகத்தில் நதிகள் இணைப்பு, மெட்ரோ ரயில் விரிவாக்கத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி, நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

மத்திய பட்ஜெட்டுக்கு முந்தைய மாநில நிதியமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் புதுடெல்லியில் நடைபெற்றது.

இதில் தமிழக நிதித்துறையை தனது பொறுப்பில் வைத்துள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்றுப் பேசும்போது, பொருளாதார வளர்ச்சியை முடுக்கும் வகையில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மத்திய அரசு வலுப்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டார்.

இந்தக் கூட்டத்தில் அவர் முன்வைத்த வலியுறுத்தல்களின் விவரம்:

"நகரமைப்பு, அடிப்படைக் கட்டமைப்பு தொடர்பான மத்திய அரசின் ஜவஹர்லால் நேரு நகர்ப்புறத் திட்டத்தில் மாநில அரசுக்கான 10 சதவிகித நிதியை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.

நீர்த் தட்டுப்பாட்டை சமாளிக்க சென்னை - மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் தொடங்கப்பட்டுள்ள கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தில் 1,371.86 கோடி மதிப்பிலான கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்துக்கு, மத்திய அரசு நிதியுதவி தர வேண்டும்.

மாநில நதிகளான மஹாநதி, கோதாவரி, கிருஷ்ணா, பெண்ணார், காவிரி மற்றும் குண்டாரை இணைக்க, ரூ.100 கோடி மதிப்பில் திட்ட அறிக்கை தயாரிக்க, கடந்த நிதியாண்டில் உத்தரவிடப்பட்டது. தமிழகத்தில் ரூ.5,166 கோடி மதிப்பிலான காவிரி, வைகை மற்றும் குண்டாறு இணைப்புத் திட்டத்துக்கு இன்னும் மத்திய அரசு அனுமதி அளிக்கவில்லை. எனவே, விரைந்து அனுமதி வழங்க வேண்டும்.

மத்திய அரசின் 100 நவீன நகரம் உருவாக்கும் திட்டத்தில் தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை தவிர, சேலம், திருச்சி, தூத்துக்குடி, கடலூர், ஈரோடு உள்ளிட்ட 10 நகரங்களை பரிசீலிக்க வேண்டும்.

அனைவருக்கும் வீடு திட்டத்தில் விரிவான திட்டங்களை கொண்டு வர வேண்டும். சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை திருவொற்றியூர், விம்கோ நகர் வரை விரிவாக்கும் ரூ.3,253 கோடித் திட்டத்துக்கு அனுமதி வழங்க வேண்டும்.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் ஒருங்கிணைந்த திட்டத்துக்கு சிறப்பு கடன் வழங்கும் திட்டம் அறிவிக்க வேண்டும். மத்திய அரசின் சுகாதாரக் காப்பீடுத் திட்டம், மகப்பேறு நிதியுதவித் திட்டம் போன்றவற்றை ஏற்கெனவே தமிழகத்திலுள்ள முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவித் திட்டம், முதல்வரின் காப்பீடுத் திட்டத்தின் மூலம் ஒரே திட்டமாக்க வேண்டும்.

வீடுகளில் சூரியசக்தி அமைப்புகள் பொருத்துவோருக்கு வருமான வரிக் கணக்கீட்டில் ரூ.10 ஆயிரம் சலுகை அளிக்க வேண்டும்.

நீண்டகாலத் திட்டத்துக்காக உள்கட்டமைப்பு நிதி உருவாக்க வேண்டியது அவசியமாகும். உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்களில் மீன்வளத்துறை, வீட்டுவசதி மற்றும் குடிசை அகற்றுத் துறைகளை சேர்க்க வேண்டும்.

திட்டங்களை முழுமையாக அமல்படுத்துவதில் சிக்கல் ஏற்படுத்தும் வகையில், நிதியாண்டின் மத்தியில் திட்டங்கள், நிதி ரத்து செய்வதைத் தவிர்க்க வேண்டும்.

வெள்ள சேத மேலாண்மைத் திட்டத்துக்கான நிதி, ரூ.388 கோடி மத்திய அரசில் இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ளதை உடனே வழங்க வேண்டும். ஆதி திராவிட மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு தேவையான நிதி வேண்டும்.

மத்திய பட்ஜெட்டில் மாநிலங்களுக்கு நிதி ஒதுக்குவதில் தெளிவான, வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும்.

சமூகப் பாதுகாப்புத் திட்டத்தில் ஓய்வூதியத்தை 1,000 ரூபாயாக உயர்த்தி, பயனாளிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும். இந்திரா வீடுகள் கட்டும் திட்டத்தில் வீடு கட்டும் நிதியுதவியை 70 ஆயிரம் ரூபாயிலிருந்து, 1.5 லட்சமாக உயர்த்த வேண்டும்.

சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பான மசோதா, மாநிலங்களின் ஒப்புதலின்றி அறிமுகப்படுத்தியிருப்பது நியாயமற்றதாகும். இச்சட்டத்தை அமல்படுத்தும் முன், உரிய மாற்றங்கள் செய்ய மாநில நிதியமைச்சர்களின் அதிகாரக் குழுவுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.

மத்திய விற்பனை வரிக் குறைவு மூலம், தமிழக அரசுக்கு வரவேண்டிய 7,098.88 கோடி கடந்த இரண்டாண்டுகளாக மத்திய அரசில் நிலுவையில் உள்ளது. எனவே, சரக்கு மற்றும் சேவை வரி புதிய மசோதாவின் படி மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட தேவையான நிதி அளிக்க வேண்டும்.

வருமான வரி கணக்கீட்டில், மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக்கு விலக்கு அளித்து, மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும் உரிமக்கட்டணம், காப்புரிமை நிதி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் விதிப்பது பாரபட்சமானதாகும். எனவே, மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு, அதன்படி உரிய முறையில் நிதி மற்றும் திட்ட ஒதுக்கீடு செய்து, நிதிநிலை அறிக்கையைத் தயாரிக்க வேண்டும்" என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE