பொள்ளாச்சி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு இரட்டை ஆயுள், 44 ஆண்டுகள் சிறை தண்டனை- கோவை மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

பொள்ளாச்சி டி.இ.எல்.சி. தேவாலய விடுதியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் 44 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது.

கோவை மாவட்டம், பொள் ளாச்சி பழைய பேருந்து நிலையம் அருகே டி.இ.எல்.சி. தேவாலயம் சார்பில் மாணவ - மாணவிகள் தங்கும் விடுதி செயல்பட்டு வந்தது.

அந்த விடுதியில் தூங்கிக் கொண்டிருந்த 10 மற்றும் 11 வயது சிறுமிகள், கடந்த ஜூன் 11-ம் தேதி நள்ளிரவு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக் கப்பட்டது மறுநாள் காலையில் தெரிய வந்தது. அந்த இரு சிறுமிகளையும் போலீஸார் மீட்டு மருத்துவமனைக்கு அனுப் பினர். தமிழகம் முழுவதும் அதிர் வலைகளை ஏற்படுத்திய இந்த பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில், 6 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து வால்பாறையை சேர்ந்த குரு (எ) வீராசாமியை(23) போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது அத்துமீறி நுழைதல், கடத்தல், பாலியல் பலாத்காரம், கொலை மிரட்டல் மற்றும் குழந்தைகள் வன்கொடுமைக்கு எதிரான பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தண்டனை விவரம்

இந்த வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பு வழக்கறிஞரான ஆர்.சரோஜினி ஆஜராகி வாதிட்டு வந்தார். இவ்வழக்கில் மகளிர் நீதிமன்ற நீதிபதி எம்.பி.சுப்பிரமணியன் நேற்று தீர்ப்பு வழங்கினார்.

வழக்கில் எவ்வித சந்தேகத் துக்கும் இடமின்றி வீராசாமி மீது ஆதாரத்துடன் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, வீராசாமி குற்றவாளி என நீதிபதி, முதலில் அறிவித்தார்.

பின்னர், ஒவ்வொரு குற்றத் துக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார். அதன்படி, அத்துமீறி நுழைதல் என்ற குற்றத்துக்காக 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்தார். சிறுமிகளை கடத்தியதற்காக தலா 10 ஆண்டுகள் என மொத்தம் 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தார்.

கொலை மிரட்டல் குற்றத்துக்காக தலா 7 ஆண்டுகள் வீதம் மொத்தம் 14 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்தார்.

பாலியல் பலாத்கார குற்றத்தின் கீழ் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தார். இதன்படி, மொத்தம் 44 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் இரட்டை ஆயுள் தண்டனை விதிப்பதாகவும், தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

டிஇஎல்சி நிர்வாகத்துக்கு அபராதம்

மேலும், உரிய பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இன்றி செயல்பட்டு வந்த டி.இ.எல்.சி தேவாலய விடுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்படுவதற்கு வித்திட்டுள்ளதாக கூறிய நீதிபதி, மாணவிகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விடுதி நிர்வாகமே முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும். இதன்படி, இரு மாணவிகளுக்கும் தலா ரூ.2.5 லட்சம் வீதம் மொத்தம் ரூ.5 லட்சம் இழப்பீடாக, 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு ஏற்கெனவே தமிழக அரசு நிவாரண நிதி வழங்கி இருந்தாலும், கூடுத லாக இரு மாணவிகளின் கல்விச் செலவையும் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்காலத்தில் அவர் களின் கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசுப் பணி வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப் படுகிறதா என்பதை உறுதிப்படுத்த கண்காணிப்பு ஆணையரையும் நீதிபதி நியமித்தார்.

கண்காணிப்பு ஆணையர்

இதன்படி, வழக்கறிஞர் சண்முக நாதன் என்பவரை ஆணையராக நியமிப்பதாக அறிவித்தார். சிறுமிகளுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் வரை ஒவ்வொரு ஆண்டும் கண்காணித்து மார்ச் 31- ம் தேதி அன்று அறிக்கையை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நீதி உத்தரவின்படி, அவர்களுக்கு கிடைக்க வேண்டிய இழப்பீடு உரிய முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சட்ட உதவிகள் மையத்தின் சட்டத்துக்கு உட்பட்டு ஆண்டுதோறும் கண்கா ணிப்பு ஆணையராக நியமிக் கப்பட்டுள்ளவருக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE