நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத் தில் கடல்சார் காட்சியகம் அமைப்ப தற்கான பணிகள் சூடுபிடித்துள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்துள்ளன.
தமிழகத்துக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக, மாமல்லபுரத்தில் சர்வதேசத் தரத்தில் கடல்சார் காட்சியகம் அமைக்க அரசு முடிவெடுத்தது. இதுதொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவையில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு வெளியிட்டார். இந்த திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான பணிகளை சுற்றுலா துறை ஒத்துழைப்புடன் மீன்வளத்துறை மேற்கொண்டுவருகிறது.
தனியார் மற்றும் அரசு பங்களிப்பில் ரூ.253 கோடி செலவில் கடல்சார் காட்சியகம் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயும் பணிகள், தனியார் ஆலோசக நிறுவனத்தின் உதவியுடன் சமீபத்தில் செய்துமுடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
இதுகுறித்து கால்நடை பராமரிப்பு மற்றும் மீன்வளத்துறை வட்டாரங்கள் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
உலகப் புகழ்பெற்ற தலமான மாமல்லபுரத்தில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையிலும், வெளிநாடு மற்றும் உள்நாட்டு பயணிகளை இன்னும் அதிக எண்ணிக்கையில் கவர்ந்திழுக்கும் நோக்கிலும் உலகத் தரத்தில் கடல்சார் காட்சியகம் அமையவுள்ளது. மாமல்லபுரத்தில் இருந்து 1.5 கி.மீ. தொலைவில் உள்ள தேவனேரியில் சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான 15 ஏக்கர் நிலத்தில் இது அமைகிறது. கடல்வளம் மற்றும் அதன் பல்லுயிர் வளம் போன்றவற்றை அனைவரும் அறியும் விதத்தில், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் இந்த காட்சியகம் அமைக்கப்படும்.
கடலுக்கு அடியில் காட்சியகம்
வெளிநாடுகளில் உள்ளதுபோல, ஆழ்கடல் வாழ் உயிரினங்களை அவற்றின் வாழிடச்சூழல் பாதிக்காத வகையில், கண்ணாடித் தடுப்பு மூலம் நேரடியாக பார்த்து ரசிக்கலாம். அதற்கேற்ப, ராட்சத சுரங்கங்கள் (டனல்கள்) அமைக்கப்படும். கடலுக்கு அருகே கூரையுடன் கூடிய நீண்ட, அழகிய நடைபாதையும் (பிராமினேடு) அமைக்கப்படும்.
கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்களைப் பற்றி பார்வையாளர்கள் அறியும் வகையில் காட்சியகமும் ஏற்படுத்தப்படும். கடல் ஆமை, முதலை, சுறா போன்றவற்றை பிரம்மாண்ட தொட்டிகளில் வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடல்சார் தகவல் மையம், கடல் ஆராய்ச்சி மையமும் அமைக்கப்படும். தமிழக பாரம்பரிய உணவகங்கள், கலை மற்றும் நினைவுப்பொருட்கள் விற்பனைக் கூடமும் இடம்பெறும்.
1000 பேருக்கு வேலைவாய்ப்பு
கடலோரப் பாதுகாப்புச் சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு, அப்பகுதியின் இயற்கைச் சூழல் பாதிக்காத வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். கடல்சார் காட்சியகத்தை ஒட்டியுள்ள இடங் களில் சுற்றுலா வளர்ச்சித் தொடர்பான இதர வசதிகள் ஏற்படுத்தப்படும். இதனால் மாமல்லபுரத்துக்கு வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக அதிகரிக்கும். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பெருகும். நேரடியாக வும் மறைமுகமாகவும் சுமார் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம்
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை பார்த்து, 3 சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் தெரிவித்தன. இதுதவிர ஏராள மான நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் விருப்பம் தெரிவித் துள்ளனர். எனவே, இத்திட்டத்தை வேகமாக செயல்படுத்தமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்ட நடவடிக்கையாக விரைவில் சர்வதேச ஒப்பந்தப்புள்ளிகள் கோர முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் வேகமாக நடந்துவருகின்றன.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
31 mins ago
தமிழகம்
36 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
10 hours ago