கூடங்குளத்திலிருந்து 100 மெ.வா. மின்சாரம் தமிழகத்துக்கு வழங்க வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் ஓ.பி.எஸ். கடிதம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் இரண்டாவது உலையில் உற்பத்தி செய்யப்படுவதில் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு வழங்க வேண்டும் என்று கோரி தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மேற்கொண்ட முயற்சியால் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் அணு உலையில் உற்பத்தியான 150 மெகாவாட் மின்சாரத்தில் 100 மெகாவாட் மின்சாரம் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டது.

இந்நிலையில், இரண்டாவது உலையில் 150 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாகவும், அதில் 50 மெகாவாட் மின்சாரம் தெலங்கானாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு தெரியவந்துள்ளது.

எனவே, இன்னமும் ஒதுக்கப்படாமல் இருக்கும் அந்த 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

கடந்த ஜூன் மாதம் தங்களை நேரில சந்தித்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் மற்றும் இரண்டாவது உலைகளில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் 15% மின்சாரம் தமிழகத்துக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று ஏற்கனவே வலியுறுத்தியிருந்ததையும் இங்கே நினைவுகூர்கிறேன்.

இந்த விவகாரத்தில் தாங்கள் மத்திய மின்சாரத் துறைக்கு அறிவுறுத்தி, கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 2-வது உலையில் உற்பத்தியாகும் 100 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE