கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கிடைக்குமா?- திருநங்கைகள் எதிர்பார்ப்பு

திருநங்கையர் தினம் இன்று கடை பிடிக்கப்படுகிறது. சமுதாயத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை கிடைத்தால் சாதிக்க காத்திருக்கிறோம் என்று திருநங்கைகள் உறுதியுடன் கூறுகின்றனர்.

இன்று திருநங்கைகள் தினம்

திருநங்கைகளுக்கான நலவாரி யம், நாட்டிலேயே முதன் முதலாக தமிழகத்தில் 2008 ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கப்பட்டது. இதை நினைவுகூரும் விதமாக தமிழகத் தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15-ம் தேதி திருநங்கைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. வாரியம் அறிவிக்கும் நலத்திட்ட உதவிகள் ஒரு பக்கம் இருந்தாலும், அதை எதிர்பார்க்காமல் தங் களது முன்னேற் றத்தினாலும் மன உறுதியாலும் சமூகத் தில் மரியாதையாக, கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் திருநங்கைகள் உள்ளனர்.

சாதிக்கும் திருநங்கைகள்

திருநங்கைகள் என்றாலே பிச்சை எடுப்பதும் பாலியல் தொழில் செய்வதும்தான் வேலை என்ற கருத்தை உடைத்தெறியும் விதமாக சென்னையின் சிறந்த மருத்துவராக விளங்குகிறார் இயன்முறை மருத்துவர் (Physiotherapist) திருமதி செல்வி சந்தோஷ். திருநங்கைகள் தினத்தையொட்டி அவர் கூறியதாவது:

என் சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி. பள்ளியில் படிக்கும்போது எனக்குப் பாலின மாற்றம் ஏற்பட்டது. கல்லூரி படித்து முடித்த பிறகு, பெண்ணாக மாறும் அறுவை சிகிச்சை செய்துகொண்டேன். சென்னை வேல்ஸ் கல்லூரியில் இளங்கலை இயன்முறை மருத்துவம் படித்தேன்.

கல்லூரி ஆசிரியர்கள் தந்த ஊக்கம், உற்சாகத்தால் அதன் பிறகு இயன் முறை மருத்துவம் சார்ந்த பட்டயப் படிப்பும் முடித்தேன். தற்போது சென்னையில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பல்வேறு துறையில் உள்ளவர்களுக்கு நேரடியாகச் சென்று இயன்முறை மருத்துவம் செய்துவருகிறேன்.

சமூகத்தில் எங்களைப் போன்றவர்களுக்குத் தனித்திறமை இருந்தாலும் திருநங்கை என்பதால் பெரும்பாலான பொதுத் தளங்களில் வேலைவாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநங்கைகளுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க அரசும் மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அலுவலகத்தில் பாரபட்சம்

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பானு சென்னையில் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார். பணியில் இருந்தபோது பெண்ணாக மாற அறுவை சிகிச்சை செய்துகொண்டதால் அலுவலகத்தில் பாகுபாட்டுடன் நடத்தியுள்ளனர். இதனால் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, தற்போது தோழியுடன் சேர்ந்து வீட்டிலேயே புடவை வியாபாரம் செய்கிறார்.

அவர் கூறுகையில், ‘‘சமூகம்தான் திருநங்கைகளைப் பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் தள்ளுகிறது. கல்வி, வேலைவாய்ப்பில் அரசு 3 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் சிறு கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆற்றைக் கடப்பதுபோல வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE