தமிழகத்தில் ‘லோக் அதாலத்’ மூலம் ஒரே நாளில் 15 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு: பயனாளிகளுக்கு ரூ.1,350 கோடி இழப்பீடு

நிலுவை வழக்குகளை விரைந்து முடிக்கும் விதமாக தேசிய அளவில் நேற்று மெகா லோக் அதாலத் நடத்தப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை உட்பட தமிழகம் முழுவதும் நடந்த லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 15 லட்சத்து 12 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. பயனாளிகளுக்கு ரூ.1,350 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

நாடு முழுவதும் நீதிமன்றங்கள், தீர்ப்பாயங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் நீண்டகாலமாக நிலுவையில் இருக்கின்றன. இதனால், காலவிரயத்தோடு பொருள் செலவும் ஏற்படுகிறது. இதை தவிர்த்து, நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் நோக்கில் அவ்வப்போது ‘லோக் அதாலத்’ (மக்கள் நீதிமன்றம்) நடத்தப்படுகிறது.

அந்த வகையில், நாடு முழுவதும் நேற்று ‘மெகா லோக் அதாலத்’ நடத்தப்பட்டது. தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் லோக் அதாலத் நடந்தது. தேசிய சட்டப் பணிகள் ஆணையத் தலைவரும் உச்ச நீதிமன்ற நீதிபதியுமான தாக்கூர், வீடியோ கான்பரன்ஸ் மூலம் இதை தொடங்கிவைத்தார். தமிழ்நாடு மாநில சட்டப் பணிகள் ஆணையத் தலைவர் சதீஷ்குமார் அக்னிஹோத்ரி, உறுப்பினர் செயலர் ஆர்.எம்.டி.டீக்கா ராமன், நீதிபதிகள் என்.பால்வசந்தகுமார், ஆர்.சுதாகர், என்.கிருபாகரன், டி.எஸ்.சிவஞானம், ஆர்.மாலா உள்ளிட்ட நீதிபதிகள் கலந்துகொண்டனர்.

11 நீதிபதிகள் தலைமையில் அமர்வுகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு அமர்விலும், ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி, மூத்த வழக்கறிஞர் ஆகியோர் உறுப்பினர்களாக இடம்பெற்றனர். சென்னையில் கீழ்நிலை நீதிமன்றங்களில் 30-க்கும் மேற்பட்ட அமர்வுகள் நடந்தன. இந்த அமர்வுகளில் சிவில் வழக்கு, குடும்ப வழக்கு, காசோலை மோசடி வழக்கு, வாகன விபத்து வழக்கு ஆகியவற்றுடன் முதல்முறையாக நுகர்வோர் குறைதீர்மன்ற வழக்குகள், கடன் வசூல் தீர்ப்பாயம், கடன் வசூல் மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்குகளும் விசாரிக்கப்பட்டன.

சென்னையில் மட்டுமின்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் அனைத்து மாவட்டங்களிலும் லோக் அதாலத் நடத்தப்பட்டது. இதன்மூலம், தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 15 லட்சத்து 12 ஆயிரம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு சுமார் ரூ.1,350 கோடி இழப்பீட்டுத் தொகை பெற்றுத் தரப்பட்டது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 23-ம் தேதி நடந்த தேசிய லோக் அதாலத்தில் 13 லட்சத்து 77 ஆயிரத்து 252 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.1,140 கோடி பெற்றுத் தரப்பட்டது. கடந்த ஏப்ரல் 12-ம் தேதி நடந்த தேசிய லோக் அதாலத்தில் 15 லட்சத்து 8 ஆயிரத்து 767 வழக்குகள் சமரச தீர்வு காணப்பட்டு, பயனாளிகளுக்கு ரூ.940 கோடி பெற்றுத் தரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விபத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.90 லட்சம்

சென்னை அடுத்த கூடுவாஞ்சேரியை சேர்ந்தவர் பொன்மலர் லட்சுமி (38) கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் திருச்சி அருகே சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதில் அவரது முதுகெலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, இரு கால்களும் செயலிழந்தன.

சம்பந்தப்பட்ட சோழமண்டலம் இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் நஷ்டஈடு கேட்டு பொன்மலர் வழக்கு தொடர்ந்தார். நேற்று நடந்த லோக் அதாலத்தில் இந்த வழக்குக்கும் தீர்வு காணப்பட்டது. விபத்தில் பாதிக்கப்பட்ட பொன்மலருக்கு ரூ.90 லட்சம் இழப்பீடு தர சோழ மண்டலம் நிறுவனம் முன்வந்தது. ரூ.90 லட்சத்துக்கான காசோலை அவரது கணவர் ராஜாவிடம் உடனடியாக வழங்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்