ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேருமாறு மிரட்டல்: போலீஸ் கமிஷனரிடம் இளைஞர் புகார்

ஐஎஸ்ஐஎஸ் என்ற தீவிரவாத அமைப்பில் சேரச்சொல்லி 2 பேர் தன்னை மிரட்டுவதாக சென்னை காவல் ஆணையரிடம் ஒருவர் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை கிழக்கு முகப்பேர் பாரி சாலையில் வசிக்கும் ஷேக் பரீத் (33) என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்து ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:

ஒரு பத்திரிகையில் நிருபராக இருக்கிறேன். கடந்த 21-ம் தேதி தி.நகர் திருப்பதி தேவஸ்தானம் எதிரே உள்ள தெய்வநாயகம் பள்ளியில் ‘புனித போராளி’ என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடந்தது. அந்த நிகழ்ச்சி குறித்த செய்தி சேகரிப்பதற்காக சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த 2 பேர் என்னிடம் நன்றாக பேசி கைகுலுக்கினர். பின்னர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று அழைத்துச் சென்றனர். ‘நாங்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு ஆள் சேர்க்கிறோம். நீங்கள் இந்த அமைப்பில் சேர வேண்டும்’ என்று என்னிடம் கூறினர்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். ‘நான் ஒரு பத்திரிகையாளன். மதங்களை கடந்து மனிதர்களை நேசிக்கக் கூடியவன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர முடியாது’ என்றேன். அதற்கு அவர்கள், ‘அப்படியானால் எங்கள் அமைப்புக்கு ரூ.1 லட்சம் தரவேண்டும். இல்லாவிட்டால் உன்னை கடத்திக் கொலை செய்துவிடுவோம்’ என மிரட்டினர்.

அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்தபோது என்னை கழுத்தைப் பிடித்து நெரித்து கத்தியைக் காட்டி மிரட்டி, பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.3,200-ஐ பறித்துக்கொண்டு விட்டுவிட்டனர்.

இவ்வாறு புகாரில் கூறப்பட்டிருந்தது.

பின்னர் நிருபர்களிடம் பேசிய ஷேக் பரீத், ‘‘என்னை மிரட்டிய இருவரில் ஒருவர் பெயர் தமீம், மற்றொருவர் தாவூத். இருவரும் எனது பேஸ்புக்கில் உள்ளனர். அதிலிருந்து அவர்களின் புகைப்படங்களை பதிவிறக்கம் செய்து, அதையும் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்திருக்கிறேன்’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE