ஏப்ரல் 10-ம் தேதி ஜெயலலிதா தவறாமல் ஆஜராக வேண்டும்: எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதது தொடர்பான வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா ஆகியோர் வரும் 10-ம் தேதி தவறாமல் ஆஜராக வேண்டும் என்று எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 1991 92 மற்றும் 1992 93 ஆகிய நிதியாண்டுகளில் சசி எண்டர்பிரைசஸ் நிறுவனம் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யவில்லை என்று கூறி அதன் பங்குதாரர்களான ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோருக்கு எதிராக வருமான வரித் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக் கோரி ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் கடந்த ஜனவரி மாதம் தள்ளுபடியானது. மேலும், வருமான வரித் துறை தொடர்ந்த இந்த வழக்கை சென்னை பெருநகர குற்றவியல் நீதிமன்றம் 4 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் இந்த வழக்கு எழும்பூரில் உள்ள சென்னை பெருநகர குற்றவியல் கூடுதல் தலைமை நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயலலிதா, சசிகலா இருவரும் ஏப்ரல் 3-ம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில் நீதிபதி ஆர்.தட்சிணாமூர்த்தி முன்னிலையில் இந்த வழக்கு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. எனினும் ஜெயலலிதா, சசிகலா ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. நீதிமன்றத்தில் நேரில் ஆஜர் ஆவதிலிருந்து தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி அவர்கள் இருவர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

தன் சார்பில் ஆஜராகி பதிலளிக்க தனது வழக்கறிஞரை அனுமதிக்குமாறு ஜெயலலிதா தனது மனுவில் கூறியிருந்தார். தனக்கு உடல் நிலை சரியில்லாததால் வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்குமாறு சசிகலா கோரியிருந்தார்.

இந்த மனுக்களை ஏற்கக் கூடாது என்று வருமான வரித் துறை சார்பில் ஆஜரான மூத்த சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் கே.ராமசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். வழக்கின் விசாரணைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்ய வேண்டும். சட்ட ரீதியான அடுத்தகட்ட நடவடிக்கைகளை நீதிமன்றம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வாதிட்டார்.

இதனையடுத்து ஜெய லலிதாவின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவ தாகவும், அப்போது ஜெயலலிதா, சசிகலா இருவரும் தவறாமல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கை 4 மாத காலத்துக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE