வீட்டில் தனியாக இருந்த 8-ம் வகுப்பு மாணவி கொலை: சேலத்தில் இரு இளைஞர்கள் வெறிச்செயல்

By செய்திப்பிரிவு

சேலத்தில் நேற்றுமுன் தினம் இரவு வீட்டில் தனியாக இருந்த எட்டாம் வகுப்பு மாணவி கழுத்து அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். புதிய மோட்டார் சைக்கிளில், ஹெல்மெட்டும், மங்கி குல்லாவும் அணிந்தபடி வந்து மாணவியை கொலை செய்த இரு இளைஞர்களையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.

சேலம், அழகாபுரம் அருகே உள்ள பெரியப்புதூர் வன்னியர் நகரைச் சேர்ந்தவர் துரைராஜ் (45). இவர் சேலம் சீலநாயக்கன் பட்டியில் உள்ள தனியார் கிரானைட் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (38).

இவர்களது இரண்டாவது மகள் தேஜாஸ்ரீ, அழகாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வந்தார். சென்னையில் வேலை பார்க்கும் மூத்த மகள் ஹரிணிக்கு உடல் நலம் சரியில்லை என்பதால் கஸ்தூரி சென்னைக்கு சென்று விட்டார். துரைராஜும் வேலைக்கு சென்று இருந்தார்.

நேற்று முன் தினம் மாலை பள்ளியில் இருந்து வந்த தேஜாஸ்ரீ டியூஷனுக்கு செல் லாமல் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது, இரண்டு இளைஞர்கள் புதிய மோட்டார் சைக்கிளில் வந்துள்ளனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று ஷோபாவில் அமர்ந்து மாணவி தேஜாஸ்ரீயிடம் பேசிக் கொண்டு இருந்தனர். மாலையில் அந்த இளைஞர்கள் வேகமாக சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மாணவியின் தந்தை துரைராஜ் வீட்டுக்கு வந்தார். அவர் வந்து பார்த்தபோது, மாணவி தேஜாஸ்ரீ கழுத்து அறுக்கப்பட்டு ரத்தம் கொட்டிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவசர போலீஸ் எண் 100 க்கு துரைராஜ் போன் செய்துள்ளார். சம்பவ இடத்துக்கு போலீஸார் விரைந்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே மாணவி இறந்து விட்டார். தகவலறிந்த சேலம் மாநகர போலீஸ் ஆணையர் அமல்ராஜ், துணை காவல் ஆணையர்கள் பாபு, பிரபாகரன், உதவி காவல் ஆணையர் விவேகானந்தன் உள்பட போலீஸார் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். வீட்டுக்குள் பீரோ திறந்து கிடந்தது. பீரோவில் இருந்த துணிகள் கலைந்து சிதறிக் கிடந்தன. நகை, பணம் அப்படியே இருந்தது. தேஜாஸ்ரீயின் அலைபேசி மட்டும் திருடு போயிருந்தது.

புதிய பைக்கில் வந்த இளைஞர்கள்

அருகில் உள்ளவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 2 பேர் வந்தனர். 20 முதல் 30 வயதுக்குள் இருக்கலாம். இளைஞர்கள் புதிய பைக்கில் வந்தனர். அதில் ஒருவர் ஹெல்மெட்டும், இன்னொருவர் மங்கி குல்லாவும் அணிந்து இருந்தார். இவர்களில் மங்கி குல்லா அணிந்திருந்த இளைஞர் ஏற்கெனவே இந்த வீட்டுக்கு வந்துள்ளதை அந்தப் பகுதி மக்கள் பார்த்து உள்ளதும் தெரியவந்தது.

இது தொடர்பாக துரைராஜ், கஸ்தூரி மற்றும் பக்கத்து வீட்டில் உள்ளவர்கள் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியை சேர்ந்த ஒருவரிடம் தனிப்படை போலீஸார் விசாரித்து வருகின்றனர். அவரது நண்பர் தலைமறைவாகி விட்டார். தேஜாஸ்ரீ சென்று வந்த பள்ளி வேன் டிரைவரிடமும் போலீஸார் விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் தேஜாஸ்ரீயின் பெற்றோர் நேற்று காலை சேலம் ஆட்சியர் மகரபூஷணத்தை சந்தித்து, கொலையாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும். கொலையாளிகளை கைது செய்தால்தான் மாலையில் பிரேதத்தை வாங்குவோம் என்று முறையிட்டனர். இதுசம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் மகரபூஷணம் போலீஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE