காங்கிரஸை விட்டுப்போனவர்கள் மரத்திலிருந்து விழுந்த கிளைகள்: ஜி.கே.வாசன் குறித்து ப.சிதம்பரம் கருத்து

காங்கிரஸ் என்பது மரம், அதை விட்டு போனவர்கள் மரத்திலிருந்து விழுந்த கிளை, அவர்கள் துளிர்க்க முடியாது என்று காங்கிரசில் இருந்து விலகிய வாசன் குறித்து பெயர் குறிப்பிடாமல் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறினார்.

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் 125-வது பிறந்த நாள் விழா தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னையில் நேற்று கொண்டாடப்பட்டது.

இதை தொடர்ந்து நேருவின் பிறந்த நாள் விழா கூட்டம் தேனாம் பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடந்தது. இதில் சிறப்பு விருந்தின ராக பங்கேற்ற முன்னாள் நிதிய மைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது:

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி சோதனையான கால கட்டத்தில் உள்ளது என்பதை மறுக்க முடியாது. தமிழகத்தில் திமுக, அதிமுக பெரிய கட்சிகளாக உள்ளன.

ஒரு அரசியல் கட்சிக்கு எழுத்து, பேச்சு, பிரச்சாரம், போராட்டம் என்பது மிக முக்கியமான ஒன்று.இவை இல்லாமல் கட்சி நடத்த முடியாது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சி இதனை கைவிட்டிருந்தது. இதை நாம் தொடர வேண்டும். தமிழகத்தில் காங்கிரஸை சீரமைக்கும் பணிகளில், இளங்கோவன் ஈடுபட வேண்டும். காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இளைஞர்களை நியமிக்க வேண்டும். காங்கிரஸ் என்பது மரம் போன்றது, நம்மை விட்டுப்போனவர்கள் (வாசன்) வெறும் கிளைதான். கிளை களுக்கு வேர் கிடையாது. எனவே, அவர்கள் துளிர்க்க முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேசுகையில், “தமிழகத்தில் 4 சதவீதம்தான் வாக்கு வங்கி உள்ளது என்பதை தொண்டர்கள் நம்பக்கூடாது. மொத்த வாக்காளர் களில் 10% பேர் தான் கட்சிகளை சார்ந்த வாக்காளர்கள். மீதமுள்ளவர்கள் பொதுமக்கள் ஆவார்கள். நேரு பிறந்த நாளில், 2016-ல் காங்கிரஸ் ஆட்சி அமைய வேண்டும், இல்லையென்றால் காங்கிரஸ் இல்லாமல் மற்றவர்கள் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று உறுதியேற்க வேண்டும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE