வண்டலூர் பூங்காவுக்குள் மறைந்திருந்த பெண் புலி பிடிபட்டது

By செய்திப்பிரிவு

வண்டலூர் பூங்காவின் வாழிடப் பகுதியில் நடமாடி, புதரில் மறைந்திருந்த பெண் புலி நேத்ரா செவ்வாய்க்கிழமை அதிகாலை பிடிபட்டது.

சென்னை வண்டலூர் பூங்காவில் உள்ள புலிகள் இருப்பிடத்தில் வழக்கம்போல, கடந்த 14-ம் தேதி காலையில் கூண்டுகள் திறக்கப்பட்டன. அதில் இருந்து வெளியேறிய புலிகள், அகழிக்குள் இருக்கும் பாதுகாப்பான காட்டுப் பகுதிக்குள் சென்றன.

அப்போது, எதிர்பாராதவிதமாக அகழியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. அதன் வழியாக புலிகள் வெளியேறக்கூடிய ஆபத்து இருந்ததால், புலிகளை உடனடியாக கூண்டில் அடைக்கும் நடவடிக்கையில் பூங்கா ஊழியர்கள் இறங்கினர்.

சிறிது நேரத்தில், 4 புலிகளைப் பிடித்து கூண்டில் அடைத்தனர். நேத்ரா என்ற 2 வயது புலியை மட்டும் பிடிக்க முடியவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், புலி வெளியேறியதாக அச்சம் எழுந்தது.

இதையடுத்து, இரவிலும் படம் பிடிக்கும் 3 நவீன சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கண்காணித்தனர். அதில் இரவு நேரத்தில் பூங்காவின் வாழிடப் பகுதியிலேயே நேத்ரா புலி நடமாடுவது உறுதிசெய்யப்பட்டது.

மக்களின் அச்சத்தை போக்கும் விதமாக வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் பூங்காவுக்கு நேற்று வந்து, புலி இருப்பிடத்தை ஆய்வு செய்தார். வாழிடத்தின் ஒரு பகுதியில் இரவு நேரத்தில் நேத்ரா புலி சுற்றி வருகிற சிசிடிவி கேமரா காட்சிகளை பார்வையிட்டார்.

இந்த நிலையில், புதரில் மறைந்திருந்த பெண் புலி நேத்ராவை செவ்வாய்க்கிழமை அதிகாலை பத்திரமாக பிடித்து அடைத்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE