புதுச்சேரி மாநில காங்கிரஸில் பிளவா? - கண்ணன் எம்.பி. ஆதரவாளர்கள் புதிய கொடிகளுடன் போராட்டம்

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியில் தனி அணியாக செயல்படும் கண்ணன் எம்.பி. தலைமையில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் புதிய கொடியுடன் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

புதுச்சேரியில் மாநிலங்களவை எம்பியாக உள்ளார் கண்ணன். மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமிக்கு கண்ணன் ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், தேர்தல் பிரச்சாரத்தில் கண்ணன் ஈடுபடவில்லை. தேர்தலுக்கு பிறகு, கண்ணன் மீது காங்கிரஸ் நிர்வாகிகள் புகார் அளித்தும் இதுவரை கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், புதுச்சேரியில் நான்தான் காங்கிரஸ் என்று கண்ணன் அறிவித்ததோடு, ஆளும் என்ஆர் காங்கிரஸ் அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். மக்கள் ஆர்ப்பாட்டக் குழு என்ற பெயரில் போராட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில், போலீஸார் அனுமதி மறுத்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவித்ததால் நேற்று முன்தினம் இரவில் போலீஸார் அனுமதி அளித்தனர்.

போராட்டத்தை முன்னிட்டு புதுச்சேரியின் பல்வேறு இடங் களிலும் கண்ணன் ஆதரவாளர்கள் சுவர் விளம்பரங்கள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். மேலும், காங்கிரஸ் கட்சிக் கொடிக்கு பதிலாக, கண்ணன் உருவம் பொதித்த மூவர்ண கொடியை ஏந்தி இருந்தனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திலும் சோனியா, ராகுல் என காங்கிரஸ் தலைவர்கள் படங்கள் எதுவும் இல்லை. காமராஜர் மற்றும் கண்ணன் படங்கள் மட்டுமே இருந்தன. தொண்டர்கள் அணிந்திருந்த பேட்ஜிலும் மூவர்ணத்தின் நடுவே கண்ணன் உருவப்படம் மட்டுமே பதிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக கண்ணன் ஆதரவாளர்கள் கூறும்போது, “காங்கிரஸ் கட்சியில்தான் எம்பி கண்ணன் உள்ளார். அவர், மீண்டும் மாநில அரசியலில் தீவிரமாக செயல்பட வேண்டும் என்பது பலரின் விருப்பம். நீண்ட நாட்களுக்கு பிறகு மாநில அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளார். அடுத்த சட்டப்பேரவையில் எங்கள் ஆதரவாளர்கள் இடம் பெறுவார்கள் என்றும் எங்கள் ஆட்சியில் மேம்பாலங்கள் அமையும் என்றும் கண்ணன் கூறி இருப்பதால் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவர் களம் இறங்குவது உறுதியாகி விட்டது. தனி அணியா, கூட்டணியா என்பதை விரைவில் அவர்தான் முடிவு செய்வார். கண்டிப்பாக, புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் முக்கிய சக்தியாக நாங்கள் இருப்போம். காங்கிரஸ் தலைவர்கள் படம் வைக்காமல் தலைமைக்கு இதை சுட்டிக்காட்டி இருக்கிறோம்” என்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE