மாமல்லபுரத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதிப்பு: கடற்கரைக்கு செல்லும் குறுகலான பாதையால் அவதி - பாதையை விரிவுபடுத்த பொதுமக்கள் கோரிக்கை

மாமல்லபுரத்தில் கடற்கரைக்கு செல்லும் பாதை மிகவும் குறுகியதாக உள்ளதால், நாள்தோறும் அங்கு தள்ளுமுள்ளு ஏற்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடற்கரை சாலையை அகலப்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரம் பகுதி பல்லவர் கால சிற்பக் கலைக்கு புகழ்பெற்று விளங்குகிறது. சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் அழகிய கற்கோயில் மட்டுமல்லாது கடற்கரையும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. ஆனால், இந்த கடற்கரைக்கு செல்லும் சாலை மிகவும் குறுகிய பாதையாக உள்ளது.

இந்த குறுகிய சாலையின் நுழைவாயில், கடற்கரை கோயிலில் இருந்து 300 மீ., தொலைவில் அமைந்துள்ளது. புல்வெளி வளாகத்தின் தெற்கு எல்லை மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகம் ஆகியவற்றுக்கு இடையே, 10 அடிக்கும் குறைவான அகலத்தில் குறுகலாக இந்த பாதை அமைந்துள்ளது. சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தில் அமைக்கப்பட்டுள்ள, தனியார் கடைகளின் ஆக்கிரமிப்புகளும் சாலையை தங்கள் பங்குக்கு மேலும் குறுக்கிவிட்டன.

கடற்கரைக்கு செல்லும் மக்களும், கடற்கரையிலிருந்து திரும்புவோரும் இந்த குறுகிய பாதையில் சிக்கி தவிக்கும் நிலையே உள்ளது. இதனால் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் பலர் கடற்கரைக்கு செல்லாமல், ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். கடற்கரை பாதையை விரிவுபடுத்தவும், கோவில் வளாகத்தில் இருந்து கடற்கரைக்கு செல்ல நேரடி பாதை அமைத்துத்தரவும் அப்பகுதிவாசிகள் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.

ஏதேனும் அவசரகாலம் அல்லது இயற்கை பேரிடரின்போது, இந்த பாதையில் மக்கள் வெளியேறுவது மிகவும் சிக்கலாகும். அப்போது உயிரிழப்புகள் தவிர்க்க முடியாததாகிவிடும் என அப்பகுதிவாசிகள் எச்சரிக்கின்றனர்.

சுற்றுலாப் பயணிகள் நலன் கருதி, பேரூராட்சி நிர்வாகம், பாதையை விரிவுபடுத்தி கான்கிரீட் சாலை அமைக்க முடியும். ஆனால், பாதைக்காக சுற்றுலா வளர்ச்சிக் கழக இடத்தை, பேரூராட்சியிடம் ஒப்படைத்தால் மட்டுமே, இத்திட்டம் எளிதில் நிறைவேறும். ஆனால், மாவட்ட நிர்வாகம் இதுவரை அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இதுகுறித்து, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் கூறியதாவது: மாமல்லபுரத்தில் கடற்கரைக்கு செல்லும் சாலை குறித்து நேரில் பார்வையிட்டு, சம்பந்தப்பட்ட அரசுத் துறையினரிடம் விசாரிக்கப்படும். கடற்கரை பாதையை அகலப்படுத்துவதற்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE