காமராஜ் அரங்கம் அருகில் குடிசைகள் அகற்றம்: ஒக்கியம் துரைப்பாக்கத்தில் மாற்று இடம்

தேனாம்பேட்டை காமராஜ் அரங்கத்துக்கு பின்புறம், மாம்பலம் கால்வாய் அருகில் உள்ள சுமார் 1500 குடிசைகளை அகற்றும் பணி மாநகராட்சி அதிகாரிகளால் நடைபெற்று வருகிறது.

மாம்பலம் கால்வாய் ஓரமாக 113-வது வார்டில் 280 குடிசைகளும், 117-வது வார்டில் 1015 குடிசைகளும், 122-வது வார்டில் 240 குடிசைகளும் உள்ளன. இவற்றுள் 113-வது வார்டுக்கு உட்பட்ட திரு.வி.க.புரம் உள்ளிட்ட குடிசைப் பகுதிகள், கடந்த சில வாரங்களுக்கு முன் அகற்றப்பட்டு விட்டன. 117-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் அரங்கத்துக்கு பின்புறம் உள்ள கே.கே.ராதா நகர் எஸ்.எஸ்.புரம், கிரியப்பா சாலை ஆகிய இடங்களில் உள்ள குடிசைகள் அகற்றும் பணி கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதுவரை 400 குடிசைகள் அகற்றப்பட்டுள்ளன. அகற்றப்படும் குடும்பங்களுக்கு ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள எழில் நகரில் மாற்று வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அட்டையில்லாதவர்கள் வீடுகள் இடிப்பு?

குடிசைப் பகுதிகளில் உள்ளவர் களை கணக்கெடுத்து, அவர் களுக்கு எழில் நகரில் வீடு ஒதுக்கப் படுவதற்கான அட்டை வழங்கப் பட்டுள்ளது. ஆனால், சில குடும்பங்களுக்கு இந்த அட்டை வழங்கப்படவில்லை.

எனினும், அவர்களுடைய வீடுகளையும் இடிக்கப்போவதாக அதிகாரிகள் தெரிவித்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இது குறித்து அங்கு வசிக்கும் சத்யா கூறுகையில், “கணக்கெடுப்பு நடத்தும்போது நாங்கள் எல்லா தகவல்களையும் அளித்தோம். ஆனால் எங்களுக்கு ஏன் அட்டை கொடுக்கப்படவில்லை என்று தெரியவில்லை. அட்டை கொடுக்காமல் வீடுகளை இடித்தால், எழில் நகரில் வீடு ஒதுக்கப்படும் என்ற உத்தரவாதம் எப்படி கிடைக்கும்?” என்றார்.

இது குறித்து 117-வது வார்டு கவுன்சிலர் கூறுகையில், “கணக்கெடுப்பு நடத்தும்போது முறையான ஆவணங்கள் சமர்ப்பிக்காததால், சிலருக்கு அட்டை வழங்கப்படவில்லை. இப்போது சரியான ஆவணங்கள் இருந்தால், அவர்களுக்கு அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கு முன்பாக வீடு ஒதுக்கப்படுவதற்கான ரசீதும் இப்போதே வழங்கப்படும்” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE