அரசு அலுவலகங்களில் முதல்வர் புகைப்பட விவகாரம்: ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் மீண்டும் மறுப்பு

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் அரசு அலுவலகங் களில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அகற்றக் கோரிய வழக்கில், ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கருணாநிதி, தாக்கல் செய்த மனு விவரம்:

இந்தியாவில் அரசு அலுவலகங்களில் ஜனாதிபதி, பிரதமர், மாநில முதல்வர், மகாத்மா காந்தி, ஜவாஹர்லால் நேரு படங்களையும், தமிழ கத்தில் ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், காந்தி, நேரு மற்றும் திருவள்ளுவர், அண்ணா, காமராஜர், ராஜாஜி, பெரியார், அம்பேத்கர், முத்துராமலிங்கத் தேவர் ஆகியோரது படங்களை வைக்கலாம்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்ததையடுத்து, ஓ. பன்னீர்செல்வம் முதல்வராகப் பதவியேற்றார்.

ஆனால், தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் ஜெய லலிதாவின் படம் இன்னும் அகற்றப்படவில்லை. அரசு அலு வலகங்கள், அரசின் திட்டங்களில் உள்ள ஜெயலலிதாவின் பெயர் மற்றும் அவரது படங்களை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் வி. தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பீட்டர் ரமேஷ்குமார் வாதிடும்போது, ‘அரசு அலுவலகங்கள், அரசு வழக்கறிஞர் அலுவலகங்களில் வழக்கில் தண்டனை பெற்றவரின் படத்தை வைத்துள்ளதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.

முதல்வராக இருப்ப வரின் படத்தைத்தான் வைக்க வேண்டும் என்று உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை அமல்படுத்த உத்தரவிட வேண்டும். தருமபுரி குழந்தைகள் இறப்பு தொடர்பாக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படத்தை அனைவருக்கும் தெரியும் வகையில் வைத்துள்ளனர்’ என்று கூறி, செல்போனில் இருந்த அந்தப் படத்தை நீதிபதிகளிடம் அவர் காண்பித்தார்.

இது, முதல்வரின் தனிப்பட்ட விஷயம். அதில் தலையிட முடியாது என்று கூடுதல் அரசு வழக்கறிஞர் கே.செல்லப் பாண்டியன் கூறினார். அந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அது தனிப்பட்ட நிகழ்ச்சி அல்ல என்று மனுதாரர் வழக்கறிஞர் கூறினர்.

மேலும், இந்த வழக்கில் 7-வது எதிர் மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் நோட்டீஸ் அனுப்ப வேண்டும் என்றார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், விசாரணையை நவ. 28-க்கு ஒத்திவைத்தனர்.

முந்தைய விசாரணை யின்போதும் ஜெயலலிதாவுக்கு நோட்டீஸ் அனுப்ப மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. அப்போதும் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE