காஞ்சிபுரத்தில் விரைவில் பட்டு பூங்கா: கைத்தறித்துறை அமைச்சர் கோகுல இந்திரா தகவல்

காஞ்சிபுரத்தில் விரைவில் பட்டுப்பூங்கா அமைக்கப்பட வுள்ளதாக கைத்தறி துணிநூல் துறை அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்தார்.

காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் தமிழ்நாடு சரிகை உற்பத்தி தொழிற்சாலை அமைந்துள்ளது. இதில், 87 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு காலணிகள் மற்றும் மழைக் கோட்டுகள் வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.

இதில், துறை அமைச்சர் கோகுல இந்திரா கலந்து கொண்டார். தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசும்போது, ‘தொழிலாளர்களின் கோரிக்கையை ஏற்று அரசு சார்பில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சரிகை மற்ற சாதரண சரிகைபோல் இல்லாமல் தனித்துவம் பெற்றது. இந்த சரிகையினால் நெய்யப்பட்ட பட்டு சேலைகள் பல ஆண்டுகள் கடந்தாலும் விலை மதிப்புடையது’ என்று குறிப்பிட்டார். விழாவில் ரூ.1.1 லட்சம் மதிப்பில் காஞ்சிபுரம் நெசவாளர் ஒருவர் நெய்த சேலையை அறிமுகப்படுத்தினார்.

பின்னர், ‘தி இந்து’-விடம் அமைச்சர் கூறியதாவது: ‘காஞ்சிபுரத்தில் பட்டு பூங்கா அமைப்பதற்கான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அது செயல்பாட்டுக்கு வரும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 10 ஆயிரம் பசுமை வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், பயனாளிகள் அதிகம் இருப்பதால், பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரத்தில் தற்போது, கிராமப்பகுதியில் வசிக்கும் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது. நகரப்பகுதியில் வசிக்கும் நெசவாளர்களுக்கு பசுமை வீடுகள் அளிக்கும் வகையில், குழுமங்கள் ஏற்படுத்தி திட்ட மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அறிவிப்புகள் வெளியிடப்படும்.

மேலும், தமிழ்நாடு சரிகை உற்பத்தி தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களின், சம்பள உயர்வு தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு கைத்தறி துணி நூல்துறை இயக்குநர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் சின்னையா, கைத்தறி மற்றும் துணிநூல்துறை, கைவினை மற்றும் கதர்துறை முதன்மை செயலர் ஹர்மேந்தர்சிங், காஞ்சிபுரம் எம்.பி., மரகதம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், கைத்தறி துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

புறகணிப்பு?

தொழிற்சாலையில் பணிபுரியும் 87 தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படாமல், 59 பேருக்கு மட்டுமே வழங்கப்பட்டன. சம்பள உயர்வு மற்றும் பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்பதால் 28 தொழிலாளர்கள் அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து தராமல் புறக்கணித்ததாக தொழிற்சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE