கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு: 9 பேர் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு; பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் ஒன்பது பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகேயுள்ள தொட்டகஜனூரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் தங்கியிருந்த கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000-ம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி, சந்தனக் கடத்தல்  வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார். 108 நாட்கள் பிணைக் கைதியாக ராஜ்குமார் வைக்கப்பட்டிருந்த பின்னர் விடுவிக்கப்பட்டார்.

ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திரகவுடா, கோவிந்தராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டிராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் உள்பட 14 பேர் மீது தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் 2004 அக்டோபரில் என்கவுன்ட்டர் மூலம் கொல்லப்பட்டனர்.

மீதமுள்ளவர்கள் மீதான வழக்கு கோபிசெட்டிப்பாளையம் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. வழக்கு விசாரணையில் இருந்தபோது, மல்லு என்பவர் இறந்து போனார். ரமேஷ் என்பவர் தலைமறைவானார்.

மீதமிருந்த கோவிந்த ராஜ், அன்றில், பசுவண்ணா, புட்டுச்சாமி, கல்மண்டி ராமன், மாறன், செல்வம், அமிர்தலிங்கம், நாகராஜ் ஆகிய 9 பேர் மீதான வழக்கை விசாரித்த கோபி நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட 9 பேரையும் விடுதலை செய்து 2018-ல் தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து கோவை சிபிசிஐடி துணை கண்காணிப்பாளர் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதிகள்  சுந்தரேஷ், நிர்மல்குமார் அமர்வில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதாகவும், அதை கீழமை நீதிமன்றம் கவனிக்கத் தவறிவிட்டதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்கும்படி 9 பேருக்கும் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்