அரசியல் மாற்றத்துக்கு அடித்தளமாக புதிய இயக்க தொடக்க விழா அமையும்: திருச்சியில் ஜி.கே.வாசன் பேட்டி

அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்து வதற்கு அடித்தளமாக எங்களின் புதிய கட்சி தொடக்க விழா அமையும் என்றார் ஜி.கே.வாசன்.

திருச்சியில் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ள புதிய கட்சி தொடக்க விழாவுக்கான பொதுக் கூட்ட மேடை அமைக்கும் பணிக்கு கால்கோல் விழா நேற்று பொன்மலை ஜி கார்னர் மைதா னத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்வதற்காக திருச்சி வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கும், வாழ் வாதாரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சியில் வரும் 28-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டம் தமிழக அரசியல் வரலாற்றில் திருப்புமுனையை ஏற்படுத்தும். எங்களது இயக்கத்தின் கொடி, சின்னம் ஆகியவற்றை அறிவிக்கும் முன்பே சில கட்சிகள், இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் எதிர்காலத்தில் எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர்.

28-ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்துக்கு கூடும் கூட்டம், கட்சி பிளவுபட்டதால் காங்கிரஸுக்கு பாதிப்பு இல்லை என்று இளங்கோவன் சொல்வதற்கு பதிலாக அமையும்.

தமிழகத்தில் பால் விலை, மின் கட்டண உயர்வு, பொதுமக்களை பெரிதும் பாதித்து உள்ளது. தருமபுரியில் 12 குழந்தைகள் இறந்ததற்கு அரசு சொல்லும் காரணம் ஏற்புடையதல்ல என்றார்.

முன்னதாக பலர் ஜி.கே.வாசனை சந்தித்து அவர் தொடங்க உள்ள இயக்கத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE