மீன்வளத்துறை சார்பில் ரூ.242 கோடியில் ஆண்டுக்கு 69 ஆயிரம் டன் மீன்களை கையாளும் திறன் கொண்ட சூரை மீன்பிடி துறைமுகம் திருவொற்றியூர் குப்பத்தில் அமைக்கப்பட உள்ளது.
நாட்டின் மொத்த மீன் உற்பத்தியில் தமிழ்நாடு 5-வது இடத்தில் உள்ளது. மொத்த மீன் உற்பத்தி 7 லட்சம் டன். இதில் கடல் நீரில் இருந்து 4 லட்சத்து 57 ஆயிரம் டன் கிடைக்கிறது. தமிழகத்தில் இருந்து ஆண்டுக்கு 93,477 டன் கடல் உணவுப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அதன் மூலம் ரூ.5,308 கோடி அந்நிய செலாவணியை ஈட்டியுள்ளது.
தமிழகத்தில் 1,076 கிமீ நீள கடற்கரை பகுதியில் 609 மீனவ கிராமங்கள் உள்ளன. அவற்றில் 11 லட்சம் மீனவர்கள் வசித்து வருகின்றனர். வடசென்னையில் மட்டும் 1 லட்சத்துக்கும் அதிகமான மீனவர்கள் உள்ளனர். இங்குள்ள காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட இயந்திரப் படகுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மோட்டார் பொருத்தப்பட்ட பைபர் படகுகள் மற்றும் கட்டுமரங்கள் இயக்கப்படுகின்றன. அதனால் காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இடப்பற்றாக்குறை நிலவுகிறது.
இந்நிலையில் திருவொற்றியூர் குப்பம் பகுதியில் சூரை மீன்பிடி துறைமுகம் அமைக்க மீன்வளத் துறை திட்டமிட்டுள்ளது. இதன்மூலம் காசிமேடு மீன்பிடி துறைமுக மீன்பிடி பணிகளை எளிதாக்க முடியும். மாதந்தோறும் 1000 டன் சூரை மீன்கள் காசிமேட்டுக்கு கொண்டு வரப்படுகின்றன. இதனால் சூரை மீன்களுக்கு வெளிநாடுகளில் உள்ள சந்தை வாய்ப்புகளை பயன்படுத்தும் வகையில் இந்த புதிய மீன்பிடி துறைமுகம் அமைகிறது.
ஜப்பான் உள்ளிட்ட வெளிநாடுகளில் சூரை மீன் விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால், அங்கு இந்த வகை மீன்கள் கிடைப்பதில்லை. அதேநேரம் சென்னையில் சூரை மீன் அதிக அளவில் கிடைக்கிறது. அதனால் சூரை மீனை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் காசிமேடு துறைமுகத்தில் நிலவும் இட நெருக்கடிக்கு தீர்வு காணவும் இந்த சூரை மீன்பிடி துறைமுகம் திருவொற்றியூரில் அமைய உள்ளது.
இதன் நீர் பரப்பு 30.87 ஹெக்டேர் அளவிலும் நிலப்பரப்பில் 15.63 ஹெக்டேர் பரப்பிலும் ரூ.242 கோடி செலவிலும் அமைய உள்ளது. மீன்களை கையாளுதல் மற்றும் ஏலம் விடும் கூடம், மீன்களை பதப்படுத்தும் கூடம், மீனவர் நிர்வாக அலுவலகம், மீன்பிடி உபகரணங்கள் கூடம், எரிபொருள் நிரப்பும் நிலையம், வலை பின்னும் கூடம், மீனவர் ஓய்வு கூடம், படகு பழுது பார்க்கும் நிலையம், உணவகம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்டவை அமைய உள்ளன.
இதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திடம் மீன்வளத் துறை விண்ணப்பித்துள்ளது. அது தொடர்பாக பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம், திருவொற்றியூரில் வரும் ஜூலை 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இத்திட்டம் தொடர்பாக அகில இந்திய மீனவர் சங்க தேசிய செயல் தலைவர் நாஞ்சில் ரவி கூறும்போது, “அனைத்து மீனவர்களும் காசிமேடுபகுதியில் வீடுகளையும் கிடங்குகளையும் வைத்துள்ளனர். அதனால் புதிய துறைமுகம் அமைப்பதற்கு பதிலாக, காசிமேடு துறைமுகத்தை மேம்படுத்தி, மீன் வளப்பூங்காவாக அறிவிக்க வேண்டும்” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago