பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வில் கல்லூரிகள், பாடப்பிரிவுகளை தேர்வு செய்வதில் மாணவர்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என்று தொழில்நுட்ப கல்வி இயக்குநரக அதிகாரி அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு 2018-ம்ஆண்டு முதல் இணையதளம் வழியாக நடத்தப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 479 பொறியியல் கல்லூரிகளில் 1.72 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த ஆண்டு பொறியியல் சேர்க்கை கலந்தாய்வை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்துகிறது. கலந்தாய்வில் பங்கேற்க சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 1.03 லட்சம் பேர் தகுதி பெற்றனர். அதில் சிறப்பு மற்றும் தொழிற்பிரிவு கலந்தாய்வில் நிரம்பியவை போக இன்னும் 1.67 லட்சம் இடங்கள் உள்ளன. இதை நிரப்புவதற்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு 3-ம் தேதி தொடங்குகிறது. இதில் 1.01 லட்சம் பேர் மட்டுமே பங்கேற்க உள்ளனர். கலந்தாய்வில் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும்போது சிறு தவறுகளால் நல்வாய்ப்புகளை இழக்க நேரிடும். எனவே, மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தொழில்நுட்பக் கல்வி இயக்குநரக செயலாளர் டி.புருஷோத்தமன் கூறியதாவது:
ஆன்லைன் கலந்தாய்வு குறித்து மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. அனைத்து செயல்பாடுகளையும் எளிதான முறையில்மேற்கொள்ளும் வகையில்இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் என 2 மொழிகளில் விவரம் இடம்பெற்றிருக்கும். மொத்தம் 4 நிலைகளாக கலந்தாய்வு நடைபெறும். முதல் நிலையில் முன்பதிவு கட்டணமாக எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.1,000, இதர பிரிவினர் ரூ.5,000 செலுத்த வேண்டும்.
இணைய வசதி இல்லாதவர்கள் கட்டணத்தை ‘செயலாளர், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை’ என்ற பெயரில் தேசியவங்கியில் சென்னையில் செல்லத்தக்க டிடியாக எடுத்து உதவி மையங்கள் மூலம் செலுத்தலாம்.
இரண்டாம் நிலையாக இணையதளம் மூலம் விருப்பப் பாடப்பிரிவு, கல்லூரியை தேர்வு செய்யும் பணி தொடங்கும். இதற்கு 3 நாட்கள் அவகாசம் தரப்படும். உங்கள் கட்ஆஃப் மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்களை கடந்த ஆண்டு நிலவரத்துடன் ஒப்பிட்டு பார்த்து விருப்பப் பட்டியலை தயார் செய்யலாம். அதில் எவ்வளவு விருப்பங்களை வேண்டுமானாலும் பதிவு செய்யலாம். எனவே, கூடுமானவரை வாய்ப்புள்ள அதிக விருப்பங்களை மாணவர்கள் பதிவு செய்து நல்லது.
மாவட்டம், பாடம், கல்லூரியின்பெயர் அல்லது எண் அடிப்படையில் விருப்பப் பட்டியலை தயாரிக்கலாம். அதேநேரம் விருப்பப் பதிவில் வரிசைப்படுத்துவதில் முதன்மையாக எந்த கல்லூரியை குறிப்பிடுகிறோமோ, அதுவே ஒதுக்கப்படும். எனவே, வரிசைப்படுத் தும்போது மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.
மூன்றாம் நிலையாக 3 நாட்களுக்குள் பட்டியலில் உள்ள கல்லூரி வரிசையை மாற்றியமைத்துஉறுதிசெய்ய வேண்டும். இல்லையெனில் விருப்பப் பட்டியலை கணினி தானாகவே இறுதி செய்துவிடும். அதன்பின் தரவரிசையின்படி மாணவர்களுக்கு தற்காலிகமாக இடங்கள் ஒதுக்கப்படும். பெரும்பாலான மாணவர்கள் இங்குதவறு இழைக்கின்றனர். இது தற்காலிக ஒதுக்கீடு மட்டும்தான். எனவே, மாணவர்கள் ஒதுக்கீடை உறுதி செய்வது மிகவும் அவசியம்.
இதையடுத்து 4-ம் நிலையாக தற்காலிக ஒதுக்கீட்டில் ‘முதல் விருப்பம் ஒதுக்கப்பட்டது, வேறுவிருப்பம் வழங்கப்பட்டது, ஒதுக்கீடு செய்யப்படவில்லை’ என 3 விதமான முடிவுகள் கிடைக்கும். அதாவது முதலாவது விருப்பம் கிடைத்தால் ‘இப்போதைய ஒதுக்கீடை ஏற்கிறேன், அடுத்த சுற்றுக்கு செல்கிறேன், கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 3 பிரிவுகள் இருக்கும். அதில் ஒன்றை உறுதி செய்ய வேண்டும்.
2-வது வேறு விருப்பம் ஒதுக்கப்பட்டால், ‘இந்த ஒதுக்கீடை ஏற்கிறேன், இப்போதைய ஒதுக்கீடை ஏற்கிறேன். ஆனால், முந்தைய விருப்பங்களுக்கு முன்னேறவழி இருந்தால் அதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும், இந்த ஒதுக்கீடை ஏற்கவில்லை. முந்தைய விருப்பங்களுக்கு முன்னேற விரும்புகிறேன், அடுத்த சுற்றுக்கு செல்கிறேன், கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 5 பிரிவுகள் இருக்கும்.
இதில் ஒன்றை உறுதி செய்ய வேண்டும். இந்த வாய்ப்பில் ஒதுக்கீடை ஏற்பவர்கள் முன்னேறுவதற்கான வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிக்கலாம். ஏனெனில், முந்தைய நிலையில் காலியிடம் இருந்தால் அவை மாணவர்களுக்கு ஒதுக்கப்படும்.
3-வதாக எந்த இடமும் ஒதுக்கப்படவில்லை எனில், ‘முந்தைய விருப்பப் பதிவுக்கு முன்னேற வாய்ப்பு இருந்தால் அதை ஏற்கிறேன். இல்லையெனில் அடுத்த சுற்றில் பங்கேற்கிறேன், அடுத்தகட்ட கலந்தாய்வுக்கு செல்கிறேன்,கலந்தாய்வில் இருந்து வெளியேறுகிறேன்’ என 3 பிரிவுகள் இருக்கும். இவற்றில் ஒன்றை தேர்வு செய்து உறுதிமொழி அளித்து ஒப்புதல் தர வேண்டும். இல்லையெனில் இடம் ஒதுக்கீடு செய்ததற்கான சேர்க்கை கடிதம் கிடைக்காது. எனவே, அனைத்தையும் முழுமையாக படித்துவிட்டு பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜந்தாம் நிலையாக மாணவர்களுக்கு இறுதி ஒதுக்கீடு வழங்கப்படும். அதைக் கொண்டு மாணவர்கள் கல்லுாரியில் சேரலாம்.
கடந்த 3 ஆண்டுகளில் கல்லூரிகள் பெற்ற தேர்ச்சி, நாக் அங்கீகாரம் உட்பட அனைத்து விவரங்களும் www.tndte.gov.in www.tneaonline.in இணையதளங்களில் தரப்பட்டுள்ளன. உங்கள் பதிவு எண் மற்றும் கடவுச்சொல் தவறவிடுதல் உட்பட ஏதேனும் சந்தேகங்கள், குறைகள் இருந்தால் புகார் மையத்தை உடனே தொடர்பு கொள்ளலாம். இணையதள வசதி இல்லாதவர்களுக்காக மாநிலம் முழுவதும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் அருகே உள்ள மையத்துக்கு சென்று கலந்தாய்வு பணிகளை மேற்கொள்ளலாம். அவர்களுக்கு வழிகாட்ட பேராசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கலந்தாய்வில் அதிக அளவு இடங்கள் இருப்பதால் எல்லாருக்கும் இந்த ஆண்டு சேர்க்கை கிடைக்கும். எனவே, அச்சமின்றி கலந்தாய்வை எதிர்கொள்ளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago