விழிப்புணர்வால் குறைந்த விபத்துகள்!

By டி.ஜி.ரகுபதி

மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் பல்வேறு விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை களால் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக பெருமிதம் தெரிவிக்கின்றனர் மேற்கு மண்டல போலீஸார்.

கோவையை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மேற்கு மண்டல காவல் துறையின் கீழ், கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, சேலம், தருமபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் வருகின்றன. ஒவ்வொரு மாவட்டத்திலும் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீஸார் செயல்படுகின்றனர். மேற்கு மண்டல காவல் துறையின் தலைவராக (ஐ.ஜி.) கே.பெரியய்யா பொறுப்பு வகிக்கிறார். கடந்த ஆண்டைக் காட்டிலும், நடப்பாண்டில்  சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக தெரிவிக்கிறார்  கே.பெரியய்யா.

“சாலை விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேற்கு மண்டல காவல் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. விதிகளைப் பின்பற்றாத வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அதேசமயத்தில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதன் மூலம் விபத்துகளைக் குறைக்கவும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேற்கு மண்டல காவல் துறையில் கடந்த ஆண்டு ஜனவரி முதல்  ஜூலை வரை மொத்தம் 7,510 சாலை விபத்துகள் நேரிட்டுள்ளன. அதேசமயம், நடப்பாண்டில் 6,598 விபத்துகளே நேரிட்டுள்ளன. அதேபோல, உயிரிழப்புகளை ஏற்படுத்திய விபத்துகளின் எண்ணிக்கையும்  1,436-லிருந்து 1,163-ஆக குறைந்துள்ளது.

மேலும், கோவை சரகத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில் கடந்த ஆண்டில் 3,599 விபத்துகளும், சேலம் சரகத்தில் 3,911 விபத்துகளும் நேரிட்டன. நடப்பாண்டு இதே காலகட்டத்தில் கோவை சரகத்தில் 3,060, சேலம் சரகத்தில் 3,538 என விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. குறிப்பாக, நீலகிரி மாவட்டத்தில் விபத்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

`பிளாக் ஸ்பாட்’ இடங்கள்!

 மாவட்டம் வாரியாக விபத்துகள் அதிகம் நடக்கும் பகுதிகளை ‘பிளாக் ஸ்பாட் ’  இடங்களாக வரையறுத்துள்ளோம். அந்தப் பகுதிகளில் விபத்துகள் அதிகம் நடக்க என்ன காரணம் என்று காவல் துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. மேலும், அப்பகுதிகளில் சாலை தடுப்புகளை அதிகப்படுத்தல், வேகத்தடை அமைத்தல், கூடுதல் போலீஸாரை பணியில் அமர்த்துவது, ஆக்கிர மிப்புகளை அகற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

நடப்பாண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை மேற்கு மண்டலத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற 4,60,949 இருசக்கர வாகன ஓட்டுநர்களுக்கும், சீட் பெல்ட் அணியாமல் சென்ற 1,03,579 வாகன ஓட்டுநர்களுக்கும்  அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாலை விதிமீறல் தொடர்பாக மொத்தம் 7,89,362 வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 26,962 விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டுள்ளன. 

இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மேற்கு மண்டல காவல்துறையில் ‘நோ ஹெல்மெட் நோ என்ட்ரி’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளோம். அதாவது, ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டுநர்கள், முக்கியமான சாலைகளில் செல்ல தடை விதிப்பதே இந்த திட்டத்தின் நோக்கம். முதல்கட்டமாக ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் மற்ற மாவட்டங்களிலும் அமல்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்படுத்தப்படும் சாலையின்  இருபுறமும் காவலர்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு, ஹெல்மெட் அணிந்தவர்களை மட்டும்  அனுமதிப்பர். ஹெல்மெட் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இதன் மூலம் விபத்துகள் மேலும் குறையும்” என்றார் நம்பிக்கையுடன்  கே.பெரியய்யா.

டிடிவி தினகரனின் அரசியல் எதிர்காலம்? - பத்திரிகையாளர் எஸ்.பி.லக்‌ஷ்மணன் பேட்டி

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE