கர்நாடகம் அணைகள் கட்டினால் தமிழகம் பாலைவனமாகும்: வைகோ எச்சரிக்கை

காவிரியின் குறுக்கே கர்நாடகம் புதிய அணைகள் கட்டினால் தமிழகம் சஹாரா பாலைவனமாக மாறிவிடும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ எச்சரித்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நேற்று செய்தியா ளர்களிடம் அவர் கூறியது: காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு என்ற இடத்தில் கர்நாடக அரசு இரு அணைகளை கட்டுவதாக அறிவித்துள்ளது. அங்கு தண்ணீரை நிரந்தரமாக தேக்கிவைக்கவும் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. இதைத் தடுக்க தமிழக அரசியல் கட்சிகள் ஒன்றுசேர வேண்டும். அணைகள் கட்டினால், தமிழகத்தில் 12 மாவட்டங்களின் விவசாயம் பாதிக்கப்படும். 3 லட்சம் விவசாயிகள், 3 கோடி மக்களுக்கு குடிநீர் பிரச்சினை ஏற்படும். விவசாயத்தை விவசாயிகள் கைவிட வேண்டிய சூழல் ஏற்படும். இதனால் தமிழகம் சஹாரா பாலைவனமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எத்தியோபியாவைவிட துயர சம்பவம் தமிழகத்தில் நடை பெறும். மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், நீர் வளத்துறை அமைச்சம் காவிரியின் குறுக்கே கர்நாடகத்தை புதிய அணைகள் கட்ட அனுமதிக்கக் கூடாது.

கேரள, கர்நாடக அரசுகள் பொறுப்பாக நடந்துகொள்வ தில்லை. மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் இந்த அரசுகள் நதி நீர் கொள்கையை மீறி அணைகள் கட்ட முயற்சி செய்கின்றன. ஒரு மாநிலத்தை தட்டிக்கேட்க முடியாத மத்திய அரசுக்கு, ஏன் தமிழகம் கட்டுப்பட்டு இருக்க வேண்டும்.

தனி நாடு கோரிக்கை வேண்டாம் என்பதற்காக ஒரு கட்சியில் இருந்து பிரிந்து அண்ணா வழியில் ஒன்றுபட்ட இந்தியாவாக இருக்க வேண்டும் என நினைக்கிறோம். பெரியார் மையத்தை இடித்த போது பிரதமராக இருந்த வாஜ்பாயியிடம் தனி நாடு கோரிக்கை வைத்தோம். கர்நாடக அரசு அணை கட்டுவதன் மூலம் மீண்டும் அதே சூழலை ஏற்படுத்தி விட வேண்டாம் என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE