தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் (டிஎன்பிஎல்) போட்டியில் சாதிக்கத் தயாராகி வருகின்றனர் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள். தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 4-ம் ஆண்டு டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டி வரும் 19-ம் தேதி முதல் ஆகஸ்ட் மாதம் 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
கோவை, திண்டுக்கல், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், சேப்பாக்கம், காரைக்குடி ஆகிய 8 அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் 32 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. சென்னை, நெல்லை, திண்டுக்கல்லில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
ஐபிஎல், உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ந்து, டிஎன்பிஎல் போட்டியும் நடைபெற உள்ளது கிரிக்கெட் ரசிகர்களை உற்சாகப்படுத்துவதாக அமைகிறது. டிஎன்பிஎல் தொடரில் இடம் பெற்றுள்ள உள்ளூர் வீரர்கள், தேசிய, சர்வதேச வீரர்களைப்போல ஊடகங்களில் காட்சியளிப்பதுடன், தங்கள் திறமைகளை நிரூபித்து, அடுத்த நிலை போட்டிகளுக்குத் தேர்வாகும் வாய்ப்பையும் உருவாக்கிக்கொள்ள முடியும்.
கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள், டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்க உள்ளனர். கோவையில் மட்டும் 20 வீரர்கள் டிஎன்பிஎல் போட்டியில் பங்கேற்கத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் பலர் ஏற்கெனவே டிஎன்பிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் பெற்றவர்கள். சிலர் மட்டும் இந்த ஆண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவையைச் சேர்ந்த சுரேஷ்குமார், முகமது ஆஷிக் ஆகியோர் கோவை அணிக்கு, ஹரி நிஷாந்த், அபிநவ், ஜெகதீசன், சுஜய், அன்பு ஆகியோர் திண்டுக்கல் அணிக்கும், மணிபாரதி, சரவணக்குமார் ஆகியோர் திருச்சி அணிக்கும், கௌசிக், மிதுன், வீரமணி ஆகியோர் மதுரை அணிக்கும், ஷுபம் மேத்தா, கார்த்திகேயன் ஆகியோர் தூத்துக்குடி அணிக்கும், ஆஷிக் ஸ்ரீனிவாஸ், சுதேஷ், கௌதம் தாமரைக்கண்ணன் ஆகியோர் காஞ்சிபுரம் அணிக்கும், மோகன் பிரசாத், ஷாஜகான், கருப்பசாமி ஆகியோர் காரைக்குடி அணிக்கும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கோவை அணியில் இடம்பெற்றுள்ள அபிநவ் முகுந்த், அந்தோணி தாஸ், நடராஜன், திண்டுக்கல் அணியில் ரவிச்சந்திரன் அஸ்வின், திருச்சி அணியில் பாபா இந்திரஜித், கணபதி, தூத்துக்குடி அணியில் வாஷிங்டன் சுந்தர், காரைக்குடி அணியில் இடம் பெற்றுள்ள தினேஷ் கார்த்திக், அனிருதா, யோமகேஷ் ஆகியோர் மிகுந்த அனுபவம் வாய்ந்த, சிறந்த வீரர்கள். தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், அபிநவ் முகுந்த் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுபோன்ற சர்வதேச அளவிலான வீரர்களுடன் விளையாடுவது, கொங்கு மண்டல வீரர்களுக்கு மிகச் சிறந்த அனுபவத்தை வழங்கும். மேலும், திறமையை நிரூபிப்பவர்கள், அடுத்தடுத்த வாய்ப்புகளைப் பெறவும் உதவும்.
டிஎன்பிஎல் போட்டியில் திண்டுக்கல் அணிக்காக விளையாடும் கோவை வீரர் ஜெகதீசன் கூறும்போது, “நான் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். மாவட்ட, மாநிலப் போட்டிகள், ரஞ்சிக்கோப்பை போட்டி என பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். ஐபிஎல் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ளேன். தற்போது டிஎன்பிஎல் போட்டிக்குத் தேர்வாகியுள்ளது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.
காரைக்குடி அணியில் விளையாடும் கருப்பசாமி கூறும்போது, “கோவை, சென்னையில் நடைபெற்ற பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடியுள்ளேன். மித வேகப் பந்து வீச்சு மற்றும் பேட்டிங் செய்வதில் அனுபவமிக்க நான் இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்” என்றார்.
மதுரை அணிக்காக விளையாடும் வீரமணி கூறும்போது, “மாவட்ட அளவில் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளேன். பேட்டிங் மற்றும் சுழற்பந்து வீசும் திறன் பெற்றுள்ள நான், டிஎன்பிஎல் போட்டிக்கு முதல்முறையாக தேர்வாகியுள்ளேன். அடுத்தடுத்த போட்டிகளுக்குத் தேர்வாகும் வகையில் இப்போட்டியில் சிறப்பாக விளையாடுவேன்” என்றார். திண்டுக்கல் அணியில் இடம் பெற்றுள்ள சுஜய் கூறும்போது, “மாவட்ட, மாநிலப் போட்டிகளில் விளையாடியுள்ள நான், ஏற்கெனவே டிஎன்பிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளேன். பேட்ஸ்மேனாகிய நான் இம்முறையும் சிறப்பாக விளையாடுவேன்” என்றார்.
கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலர் கௌதமன் கூறும்போது, “டிஎன்பிஎல் போட்டி, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நல்ல முயற்சியாகும். உள்ளூர் வீரர்கள் பலர், தங்கள் திறமையை நிரூபிக்க சிறப்பான வாய்ப்பு இப்போட்டியின் மூலம் கிடைக்கிறது. வீரர்கள் அடுத்த கட்டத்துக்குச் செல்ல இது உதவியாக உள்ளது. இப்போட்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாவதும், வீரர்களைப் பெரிதும் உற்சாகப்படுத்துகிறது. கோவையைச் சேர்ந்த வீரர்கள் டிஎன்பிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இந்திய அணியில் கோவை வீரர்கள் இடம்பெறும் காலம் வெகுதொலைவில் இல்லை” என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
11 hours ago