‘நடமாடும் மதுக்கடை’ நான் சீரியசாக வைத்த கோரிக்கை, நகைச்சுவைக்காக அல்ல: தனியரசு எம்.எல்.ஏ பேட்டி

By மு.அப்துல் முத்தலீஃப்

மதுப்பிரியர்கள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக நடமாடும் மதுக்கடைகளை கொண்டுவரவேண்டும் என்பதை நான் சீரியசாகத்தான் பேசினேன், நகைச்சுவைக்காக அல்ல என தனியரசு எம்.எல்.ஏ தெரிவித்தார்.

தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும். கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர். நடமாடும் மதுக்கடைகளை கொண்டுவரவேண்டும் என கொங்கு இளைஞர் பேரவைத்தலைவர் தனியரசு சட்டப்பேரவையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

திடீர் என்று ஏன் நடமாடும் டாஸ்மாக் கோரிக்கை வைத்தீர்கள்?

பல கோரிக்கைகளை சுட்டிக்காட்டும்போது இந்த கோரிக்கையும் வைத்தேன். சேப்பாக்கம் வாலாஜா சாலையில் வாக்கிங் போகும்போது மது வாங்க இளைஞர்கள் 50, 100 பேர் கேட்டை பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டு படாதபாடு படுவதை பார்த்திருக்கிறேன்.

அப்படியே கிராமபுறத்தில் பல நிகழ்ச்சிகளை பார்த்திருக்கிறேன். 15, 20 கிலோமீட்டர் சென்று குடித்துவிட்டு வந்து கீழே விழுந்து அடிபடுகிறார்கள், போலீஸ்கிட்ட சிக்கிக்கொள்கிறார்கள், உயிரே போய் இழவு விழுவதையும் பார்க்கிறேன்.

அதற்காக சட்டப்பேரவையில் உறுப்பினர் இப்படி கேட்கலாமா?

அனைத்தையும் கணக்கிட்டுத்தான் பேசினேன், மதுபானம் அரசு விற்கும்போது அது மக்களுக்கு கிடைக்கும் வகையில் இருக்கணும் அல்லவா? வசதி இருக்கிறவன் கார்லபோய் குடிச்சுட்டு வந்துடுவான், ஏழை என்ன செய்வான். 50 ரூபாய்க்கு குடிக்க 25 ரூபாய் பெட்ரோல் செலவு செய்வதும், வழியில் போலீஸ் மடக்கினால் அதுக்கு செலவுதானே, அதனால ஒழுங்குப்படுத்த மதுபான கடைகளை அவங்க இடத்துக்கே நடமாடும் கடைகளாக கொண்டுவந்தால் குடித்துவிட்டு ஓரமா படுத்துக்குவான் அல்லவா?

நீங்கள் ஜெயலலிதாவின் அபிமானி, அவர் மதுக்கடை நேரத்தை குறைத்தார், படிப்படியாக குறைக்கும் திட்டத்தை கொண்டுவந்தார், ஆனால் அவரது அபிமானியான நீங்கள் இப்படி கோரிக்கை வைக்கலாமா?

நேரத்தை குறைத்ததாலோ, கடைகளின் எண்ணிக்கையை குறைத்ததாலோ மதுபானங்களில் விற்பனை குறைந்துள்ளதா? என்று பார்த்தால் கூடித்தானே இருக்கிறது. 20 ஆயிரம் கோடி, 25 ஆயிரம் கோடி என்று இந்த ஆண்டு 30 ஆயிரம் கோடியை தாண்டியுள்ளது. அப்படியானால் நேரத்தை குறைத்து, கடைகளின் எண்ணிக்கையை குறைத்து என்ன மாற்றம் வந்தது.

அப்படியானால் அதை குறைக்கும் கோரிக்கையைத்தானே வைக்கணும், கொங்கு இளைஞர் பேரவை என்று இயக்கம் நடத்தும் உங்கள் கோரிக்கை இளைஞர்களை மது அருந்த தூண்டுவதாக அமையாதா?

எங்கக்கட்சியில் யாரும் குடிக்கக்கூடாது. ஒரு சொட்டு அருந்தக்கூடாது, மதுபானம் விற்கவோ, வாங்கவோ, குடிக்கவோ கூடாது. ஹன்ஸ், குட்கா, சிகரெட் பீடி கூடாதுன்னு சொல்லும் கட்சி எங்கள் கட்சி. பூரண மதுவிலக்குத்தான் எங்கள் கட்சியின் கோரிக்கை.

அப்படியானால் உங்கள் கட்சி இளைஞர்கள் தலைவர் இப்படி பேசுகிறாரே என்று யோசிப்பார்களே?

கட்சிக்கொள்கையில் மது கூடாதுன்னு உறுதியாக இருக்கிறோம், ஆனால் சாமானிய மக்கள் கஷ்டப்படும்போது நாம் இந்த கோரிக்கையை வைக்கிறோம். எதார்த்தத்தில் இருப்பவன் உண்மையை பேசுகிறேன்.

இதை எப்படி கஷ்டம் என்று சொல்வீர்கள்? மதுவால்தானே குடும்பங்கள் சீரழிந்து கஷ்டப்படுது?

அப்படியானால் நீங்கள் மதுவை முழுதாக தடை செய்யவேண்டும்.

ஆமாம் அப்படித்தானே உங்கள் கோரிக்கை இருக்கணும்?

மதுக்கடைகளை குறைத்துள்ளார்கள், அரசு அதை செய்துவருகிறது. 6000 கடை இருந்த இடத்தில் இப்போது 3500 கடை இருக்குது. ஆனால் விற்பனை மட்டும் ஏன் குறையவில்லை? 100 பேர் வரிசையா நின்னவன் இன்று 500 பேர் வரிசையில் நின்று வாங்குகிறான்.

முன்பு 5 கி.மீ சென்று மது வாங்கியவன், 15 கி.மீ சென்று வாங்குகிறான். அங்கேயே குடிச்சுட்டு திரும்புறான், விபத்தில் சிக்கி உயிரிழக்கிறான் அதைப்பார்க்கும் போதுதான் நான் இந்த கோரிக்கை வைக்கிறேன்.

அனைத்து சீரழிவுக்கும் மதுதானே காரணம்? அனைத்துக் குற்றச்செயல்களுக்கும் மதுதானே காரணம்?

ஆமாம் அதில் சந்தேகமே இல்லை. மதுவை ஒழிக்கணும், தடை செய்யணும் மாற்று கருத்தில்லை.

தமிழகத்தில் குடிதண்ணீர் பிரச்சினை இருக்கும்போது நீங்கள் வேறு தண்ணீர் பிரச்சினை பற்றி பேசலாமா?

குடி தண்ணீர் பிரச்சினை குறித்து 30 நிமிடம் பேசினேன். குடிதண்ணீர் பிரச்சினையை ஜோலார் பேட்டையிலிருந்து போர்க்கால அடிப்படையில் தீர்த்த அரசு என்று பேசி இருக்கிறேன். பால்விலை உயர்வு, பால் உற்பத்தியாளர் பிரச்சினைப்பற்றி பேசியிருக்கிறேன், விவசாயிகள் பிரச்சினைப்பற்றி பேசினேன். எளியம்மக்கள் போக வாகனம் இல்லை, ஷேர் ஆட்டோ, ஆம்னி பஸ் பற்றி பேசினேன். ஆனால் அதை யாரும் வெளிப்படுத்தவில்லை. இதை பேசுகிறார்கள்.

வெள்ளைச்சட்டையில் கருப்பு மை இருந்தால் அதுதானே வெளியே தெரியும்?

ஆமாம் நான் என்ன சொல்கிறேன் என்றால், கடைகளை முழுதும் மூடி முழுதும் மதுவிலக்கு அமல்படுத்து, ஆனால் மது விற்பனை செய்துக்கொண்டே இப்படி கிடைக்காமல் செய்வதைத்தான் நான் கேட்கிறேன்.

உங்கள் உள்ளார்ந்த கோரிக்கை மது வேண்டுமா? வேண்டாமா?

என் உயிர் கோரிக்கை ஒரு சொட்டு போதை வஸ்துகள் மது உட்பட அனுமதிக்கக்கூடாது என்பதில் மாற்றமில்லை. ஆனால் அதை விற்கும்போது, அதுவும் அரசே விற்கும்போது தடையில்லாமல் கொடுங்க என்றுத்தான் கேட்கிறேன். ஏனென்றால் மது வாங்க பல கிலோமீட்டர் பயணம் செய்து விபத்தில் சிக்கிய குடும்பத்தை நான் பார்த்துள்ளேன்.

அரசாங்கம் ரேஷன் கடைப்பொருட்களை தடையின்றி கொடுக்கலாம் என்று கோரிக்கை வைக்கவேண்டியவர் இப்படிப்பட்ட கோரிக்கை வைக்கலாமா?

மக்களுக்கு தேவையான அடிப்படை ரேஷன் பொருட்கள் தடையின்றி கிடைக்கவேண்டும் என்பது பற்றி ஆரம்பத்திலேயே கோரிக்கை வைத்தவன்நான். விஜயகாந்துக்கு முன்னரே வீடுதோறும் ரேஷன் பொருள் பற்றி பேசியவன் நான்.

மதுக்கடைகளை மூடச்சொன்னதிலும் பாமக ராமதாஸுக்கு முன்னரே கோரிக்கை வைத்தவன் நான். நான் யதார்த்தமாக பேசுகிறேன். இதை நகைச்சுவையாக பார்க்கிறார்கள், ஆனால் நான் சீரியசாகத்தான் பேசினேன். எனக்கு மக்களின் பாதிப்பு தெரியும்.

உங்கள் வீட்டில் இந்த கோரிக்கையை எப்படி பார்க்கிறார்கள்?

அவங்களுக்கு என்னைப்பற்றி நன்றாக தெரியும், மது கூடாது என்பதில் என்னுடைய உறுதியை என் வீட்டிலும், பிள்ளைகளும் நன்றாக அறிந்து வைத்துள்ளார்கள்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்