அறம் பழகு எதிரொலி: இந்து தமிழ் வாசகர்களின் உதவியால் கல்லூரி செல்லும் கோடீஸ்வரி, சங்கீதா!

வேலூர், ரங்காபுரத்தைச் சேர்ந்த கனகவல்லி மகள்கள் கோடீஸ்வரி மற்றும் சங்கீதா இருவரின் மேற்படிப்புக்காக நிதியுதவி கோரியிருந்தார். இதுதொடர்பான செய்தி, அறம் பழகு: உடம்பு முடியாத தந்தை; வீட்டு வேலை செய்யும் தாய்- மகள்கள் 2 பேரின் கல்விக்கு உதவலாமே! என்ற தலைப்பில் 'இந்து தமிழ்' இணையத்தில் வெளியானது.

இந்தச் செய்தியைப் படித்த 'இந்து தமிழ்' வாசகர்கள், இருவருக்கும் தேவைப்பட்ட தொகையான ரூ.37 ஆயிரத்தை விட அதிகமாகவே தந்து உதவியுள்ளனர். செய்தி வெளியான நாளில் இருந்து இதுவரை ரூ.80,193 நிதி கிடைத்துள்ளது. இதன்மூலம் அக்கா கோடீஸ்வரியும் தங்கை சங்கீதாவும் உற்சாகத்துடன் கல்லூரி செல்ல உள்ளனர்.

சுரேஷ் என்னும் 'இந்து தமிழ்' வாசகர், மாதந்தோறும் 1,500 ரூபாயை சகோதரிகள் இருவரின் படிப்புச் செலவுக்கு அளிப்பதாக உறுதி அளித்துள்ளார்.

இதுகுறித்து நெகிழ்வுடன் பேசுகிறார் தாய் கனகவல்லி. ''ரொம்ப ரொம்ப நன்றிங்க மேம். இவ்வளவு உதவி கிடைக்கும்னு எதிர்பார்க்கவே இல்லை. மொத்தமா 80 ஆயிரத்து 193 ரூபாய் கிடைச்சிருக்கு. சாகற வரைக்கும் 'இந்து தமிழ்' செய்த உதவியை மறக்க மாட்டேன்'' என்று புன்னகைக்கிறார்.

கோடீஸ்வரியும் சங்கீதாவும் சந்தோஷத்துடன் இது குறித்துப் பகிர்ந்துகொள்கின்றனர். ''ஹேப்பியா இருக்கோம் மேம், கண்டிப்பா நல்லாப் படிச்சு, பெரிய வேலைக்குப் போவோம். அம்மாவைக் கஷ்டப்படாம பார்த்துப்போம். ரொம்ப நாளைக்கப்புறம் இப்போதான் அம்மா சந்தோஷமா இருக்கதறதைப் பார்க்கிறோம்'' என்கின்றனர்.

இச்செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் 'இந்து தமிழ்' பெருமை கொள்கிறது.

கோடீஸ்வரிக்கும் தங்கை சங்கீதாவுக்கும் போதுமான உதவிகள் கிடைத்துவிட்டன. இனி தேவை உள்ள பிறருக்கு வாசகர்கள் உதவலாம்.

க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE