வெளி மாநில வாகனங்களுக்கு பர்மிட் வழங்க சோதனைச் சாவடிகளில் கூடுதல் கட்டணம் வசூல்: ‘தி இந்து’ உங்கள் குரல் பகுதியில் ஓட்டுநர்கள் புகார்

புதுச்சேரியில் போக்குவரத்துத் துறை மூலம் புதிதாக அமைக்கப் பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் சென்னை உட்பட வெளி மாநிலத்தில் இருந்து வரும் வாகன ஓட்டிகளிடம் பர்மிட் தர கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என, உங்கள் குரலில் பலர் புகார்கள் தெரிவித்திருந்தனர்.

புதுவை நூறடி சாலையில் போக்குவரத்துத் துறை ஆணையர், வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது. புதுவைக்கு வரும் வெளிமாநில வாகனங்கள் மோட்டார் வாகன சட்டத்தின்படி பர்மிட் இங்கு மட்டும்தான் வாங்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதனால், போக்குவரத்து துறை சார்பில் முதன்முறையாக கடந்த 2001-ம் ஆண்டு கோரிமேட்டிலும் அதைத் தொடர்ந்து 2013-ல் கனக செட்டிக்குளம், கன்னிக்கோயில், மதகடிப்பட்டு, காரைக்கால் (வாஞ்சூர்) உட்பட 5 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைக்கப் பட்டன.

சரக்கு மற்றும் பயணிகள் வாகனங்களிடம் இருந்து சாலை வரி மற்றும் நுழைவுக் கட்டணம் வசூலிக்க இச்சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டன.

தற்போது இச்சோதனைச் சாவடிகளில் வெளி மாநில வாகனங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன.

சென்னையைச் சேர்ந்த டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் உங்கள் குரலில் தெரிவித்ததாவது: சென்னையில் இருந்து புதுச்சேரிக்கு வந்தேன். இங்கு தற்காலிக பர்மிட் வாங்கும்போது ரூ. 155-க்கு ரசீது தந்தனர். ஆனால், ரூ. 250 கேட்டு கூடுதலாக வாங்கினர். இதுதொடர்பாக விளக்கம் கேட்டால், தவறாக கணக்கு எழுதி கொள்ளுங்கள் என்கிறார்கள். ரசீதில் குறிப்பிட்ட தொகையை விட கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது" என்றார்.

மேலும் பலர் கூறும்போது: ’சென்னையில் இருந்து இசிஆர் சாலை வழியாக வார இறுதி நாட்களில் புதுவைக்கு அதிக அளவில் வருபவர்களும், சிறு வியாபாரம் செய்வதற்காக வாகனங்களில் வருபவர்களும் சோதனைச் சாவடிகளில் கூடுதல் பணம் செலுத்தினால்தான் புதுவைக்குள் நுழையவே முடிகிறது’ என்று தெரிவித்தனர்.

’தி இந்து’ தமிழ் ‘உங்கள் குரல்’ பகுதியில் வந்த இந்தப் புகார் தொடர்பாக போக்குவரத்து ஆணையர் எஸ்.டி.சுந்தரேசனிடம் தகவல் தெரிவித்தோம். அவர் கூறியதாவது:

பர்மிட்டுக்கு ரசீதில் உள்ள கட்டணத்தை செலுத்தினால் போதும். கூடுதலாக செலுத்த வேண்டியதில்லை. இதுதொடர் பாக உடன் நடவடிக்கை எடுக்கப் படும். கூடுதல் கட்டணம் தர கட் டாயப்படுத்தினால், அங்கிருந்தே போக்குவரத்துத்துறைக்குப் புகார் தரலாம். கட்டண விஷயத்தில் விரைவில் புதிய நடவடிக்கையும் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

புதுவையில் ஒரு சோதனைச் சாவடி மட்டுமே இருந்தது. மேலும் புதிதாக 5 சோதனைச் சாவடிகள் கடந்த ஆண்டு திறக்கப்பட்டதின் மூலம் புதுவை அரசுக்கு இதுவரை ரூ.4.6 கோடி வரை கூடுதலாக வருவாய் கிடைத்துள்ளது என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE