நவீன தொழிற்சாலைகள், மக்கள்தொகைப் பெருக்கம், பருவநிலை மாற்றம், மக்களிடையே தண்ணீர் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
அடுத்த ஆண்டில், நிலத்தடி நீரே இல்லாத நகரமாக சென்னை மாநகரம் இருக்கும் என்று நிதி ஆயோக் எச்சரித்துள்ளது. சென்னைக்குத் தண்ணீர் வழங்கும் நீராதாரங்களான 4 ஏரிகளும் வறண்டுவிட்டன. இந்நிலையில் மழைநீரைச் சேகரிப்பதே உடனடித் தீர்வாக இருக்க முடியும்.
இத்திட்டத்தை முன்னெடுத்து நல்லோர் வட்டமும், அவேர்னஸ் இந்தியா மூவ்மென்ட் என்ற தனியார் அமைப்பும் இணைந்து, சென்னையில் வீடுகள்தோறும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை குறைந்த செலவில் அமைத்துக் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
''கோடம்பாக்கத்தில் தெரிந்த நண்பர்களுக்குச் செய்து கொடுத்த திட்டத்துக்குக் கிடைத்த வரவேற்பால், சென்னை முழுவதும் மழைநீர் சேகரிப்புத் தொட்டியை அமைத்துக் கொடுக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. விரைவில் இத்திட்டம் கோவை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்'' என்கிறார் அவேர்னஸ் இந்தியா மூவ்மென்ட் அமைப்பின் நிறுவனர் வெற்றிவேல்.
இதுகுறித்து மேலும் அவர் பேசும்போது, ''சென்னையில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டைப் போக்க இளைஞர்கள் ஏதாவது செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டோம். விஞ்ஞானி குத்தம்பாக்கம் இளங்கோவனிடம் சென்று இளைஞர்கள் சிலர் பயிற்சி எடுத்தோம். குத்தம்பாக்கம் கிராமத்தில் மழைநீர் சேகரிப்பு மூலம் அவர் நிலத்தடி நீரை உயர்த்தியதையும் அதனால் கிணறுகளில் நீர் பொங்கி வழிந்ததையும் கண்கூடாகவே பார்த்தோம். இதே திட்டத்தை, எங்கள் அமைப்பு உள்ள கோடம்பாக்கம் பகுதியில் திட்டமிட்டு செயல்படுத்தினோம்'' என்கிறார் வெற்றிவேல்.
எந்த அளவீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கப்படுகிறது என்று கேட்டதற்கு, ''மொட்டை மாடி தளத்தின் அளவுக்கு ஏற்றவகையில் பிளாஸ்டிக் ட்ரம்மைப் பொருத்துகிறோம். உதாரணத்துக்கு 600 சதுர அடி கொண்ட மொட்டை மாடியில் சேகரமாகும் மழைநீருக்கு 200 லிட்டர் கொள்ளளவுடன் 4 அடி உயரம் கொண்ட ஒரு ட்ரம் போதும். இதுவே 2000 சதுர அடி கொண்ட மொட்டைமாடிக்கு 4 ட்ரம்கள் தேவை.
முன்பெல்லாம் தூரல் போல மழை துளித்துளியாகப் பெய்யும்போது மழைநீரை இயற்கையாகவே பூமி உள்ளிழுத்துக்கொள்ளும். ஆனால், இப்போது 3 மாத மழை, 1 மணி நேரத்திலேயே கொட்டித் தீர்த்துவிடுகிறது. அந்த நீர் சாக்கடையில் கலந்து கடலுக்குச் சென்றுவிடுகிறது. இதனால் மழைநீர் வீணாகாமல் தடுத்து, அதை நிலத்துக்கடியில் சேகரிக்க இந்தத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
முதலில் கழிவுநீர்க் குழாய், மின்சார வயர்கள், கேபிள் பாதை இல்லாத இடத்தைத் தேர்வு செய்துகொள்வோம். வீட்டில் போடப்பட்டிருக்கும் போருக்கு (ஆழ்துளைக் கிணறு) அருகில் இடமிருந்தால் இன்னும் சிறப்பு. அதையே தேர்வு செய்து, ட்ரம்மை 5 அடிக்குக் குழி தோண்டி புதைப்போம். முன்னதாக ட்ரம்மைச் சுற்றிலும் அடியிலும் துளைகள் இடப்படும். அதேபோல 1.5 அங்குலத்துக்கு ஜல்லியும் நிரப்பப்படும்.
குழி தோண்ட, ட்ரம் வாங்க, ஜல்லிக்கு, பைப்புகளுக்கு என மொத்த செலவு 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை ஆகிறது. நாங்கள் 4 அல்லது 5 வீடுகளுக்குச் சேர்த்து சேவை மனப்பான்மையில் செய்வதால், ரூ.3,500 மட்டுமே வாங்குகிறோம். ஒவ்வோர் ஆண்டும் பருவ மழைக்கு முன்னதாக, மழைநீர் சேகரிப்பு ட்ரம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்க்கவும் திட்டமிட்டுள்ளோம்'' என்கிறார் வெற்றிவேல்.
வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்துப் பேசுகிறார் நல்லோர் வட்டத்தைச் சேர்ந்த பாலு. ''இப்போது மக்களிடையே தண்ணீர் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் அதை எப்படிச் செய்வது என்று தெரிவதில்லை. தனியாளாக அதைச் செயல்படுத்துவதில் அவர்களுக்குத் தயக்கம் இருக்கிறது.
இதைப் போக்கி நிலத்தடி நீரைப் பெருக்க, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறோம். இதைக் கடந்த சனிக்கிழமை அன்று (ஜூன் 29), கோடம்பாக்கத்தில் நடிகர் ஆரி தொடங்கி வைத்தார். சென்னையில் இந்த மாதத்தில் (ஜூலை) 1000 வீடுகளில் மழைநீர் சேகரிப்புத் தொட்டியைப் பொருத்தத் திட்டமிட்டுள்ளோம்.
தற்போது பள்ளி, கல்லூரிகள் மற்றும் காவல் நிலையங்களிலும் பொருத்தித் தருமாறு அழைப்புகள் வருகின்றன. இதை தமிழகம் முழுவதும் செயல்படுத்த சமூக அமைப்புகள் முன்வர வேண்டும். இது இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பாகவும் அமையும்.
ஒவ்வொரு மாற்றத்துக்கும் அரசை எதிர்பார்த்துக் காத்திருக்காமல், மக்களே முன்வந்து இதைச் செய்யலாம்'' என்கிறார் பாலு.
*
எந்தக் குழாயும் நீரை உற்பத்தி செய்வதில்லை. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டுத் தண்ணீரையும் பூமியிடம் இருந்துதான் பெறுகிறோம். அதை மழைநீர் வழியாக மீண்டும் பூமிக்கு அளிப்பதுதான் நாம் நம் வருங்காலத் தலைமுறைக்குச் செய்கின்ற நல்லதாக இருக்க முடியும். உயிர்த்துளியான மழைத்துளியை முறையாக சேமித்துப் பயன்படுத்துவோம்.
தொடர்புக்கு: வெற்றிவேல், திட்ட பொறுப்பாளர் - 9884049288.
பாலு, நல்லோர்வட்டம் - 9791005771.
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@thehindutamil.co.in
முக்கிய செய்திகள்
தமிழகம்
52 mins ago
தமிழகம்
46 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago