மீனவர்கள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புக: அனைத்து கட்சிகளுக்கும் கருணாநிதி வேண்டுகோள்

தமிழக மீனவர்கள் 14 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் பிரச்சினையை இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மத்திய அரசின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வந்து, தீர்வு காணத்தக்க அழுத்தம் தரவேண்டுமென்று அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் திமுக தலைவர் கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக மீனவர்கள் ஐந்து பேருக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, இந்தியாவில் அனைத்துத் தரப்பினரும் எதிர்க்குரல் எழுப்பியதற்குப் பிறகு, விடுதலை செய்யப்பட்டதையொட்டி, அவர்கள் வெள்ளிக் கிழமை அன்று தாயகம் திரும்பினர்.

மரண மேடையிலிருந்து தமிழ் மீனவர்கள் ஐந்து பேரும் மீண்டு வந்ததால், லட்சோப லட்சம் மீனவர் குடும்பங்களில் பெருக்கெடுத்த மகிழ்ச்சி வெள்ளம் வடிவதற்குள், மீண்டும் இடி விழுந்ததைப் போல, கச்சத் தீவு அருகே சர்வதேசக் கடற்பரப்பில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 14 தமிழக மீனவர்களை, இலங்கைக் கடற்படையினர் நேற்று (23-11-2014) சிறைப்பிடித்து, தலைமன்னார் மற்றும் காங்கேசன் துறைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

சர்வதேசக் கடல் எல்லைப் பகுதியில் சனிக்கிழமை அன்று ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு ரோந்து வந்த இலங்கைக் கடற்படையினர், இந்தப் பகுதியில் மீன் பிடிக்கக் கூடாது என்று எச்சரித்தனர். இதையடுத்து, பத்துக்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் தங்கள் வலையினை கடலிலேயே போட்டுவிட்டுக் கரை திரும்பினர்.

டீசல் தீர்ந்து போனதால், கச்சத் தீவு அருகே நடுக்கடலில் நின்று கொண்டிருந்த படகினை ஞாயிற்றுக் கிழமை அன்று இலங்கைக் கடற்படையினர் கைப்பற்றி, அதிலிருந்த தமிழ் மீனவர்கள் நான்கு பேரைச் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர். மேலும், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த இரு விசைப்படகுகளையும் கைப்பற்றி, அதிலிருந்த பத்து மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறைப் பிடித்துச் சென்றுள்ளனர்.

சென்ற வாரம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற சந்திப்பின்போது, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், பேச்சு வார்த்தை நடைபெறும் வரையிலும் சர்வதேசக் கடல் எல்லையைக் கடக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, தாங்கள் யாரும் எல்லையைத் தாண்டவில்லை எனக் கரை திரும்பிய ராமேஸ்வரம் மீனவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் சிறைச் சாலையில் 24 தமிழக மீனவர்கள் வாடிக் கொண்டிருக்கின்றனர்; தமிழக மீனவர்களுடைய 82 படகுகள் இன்னும் இலங்கையால் விடுவிக்கப்படவில்லை. இந்த நிலையில், எல்லை தாண்டாமல் இருந்தபோதே, மேலும் 14 தமிழ் மீனவர்களைச் சிறைப் பிடித்துச் சென்றிருப்பது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்.

தொடர்ந்து சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வரும் மீனவர்களின் பிரச்சினையை, இன்று தொடங்கும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மத்திய அரசின் உடனடிக் கவனத்திற்குக் கொண்டு வந்து, தீர்வு காணத்தக்க அழுத்தம் தரவேண்டுமென்று அனைத்து அரசியல் கட்சிகளையும் கேட்டுக் கொள்கிறேன்" என கருணாநிதி கூறியுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE