மலைவாழ் மக்கள் வாழ்க்கையை பதிவு செய்வது அவசியம்!- எழுத்தாளர் ஆட்டனத்தி

By கா.சு.வேலாயுதன்

கிராமங்களின் வாழ்வியலை பதிவு செய்யும் எழுத்தாளர்களில் காடு, கானுயிர், பழங்குடிகள் சார்ந்து எழுதும் படைப்பாளிகள் குறைவுதான். இவ்வாறு எழுதுபவர்களில் முக்கியமானவர்  ஆட்டனத்தி. 'வனம், இங்கேயும் ஓர் ஆரண்ய காண்டம்,  பசுமை வளையம்' என இவரது  நாவல், கட்டுரை, சிறுகதைகள் வன வாழ்க்கையைப் பேசுகின்றன..

கோவை வேடபட்டி அருகேயுள்ள இவரது வீட்டில் சந்தித்தோம். "நானும் எல்லோரைப்போல பள்ளி, கல்லூரிக் காலங்களில், காதல், க்ரைம், திரில்லர், சமூகம்னு கதை எழுதியவன்தான். காடு சார்ந்த வாழ்வியல் சூழல் என் வாழ்க்கையை மட்டுமல்ல, என் எழுத்தையும் வேறு தளத்துக்கு இட்டுச் சென்று விட்டது" என்று தொடங்கினார்.

"என் பேரு தண்டபாணி. அவிநாசி வேட்டுவபாளையம் கிராமம்தான் பூர்வீகம்.  வேட்டுவபாளையம், அனந்தகிரி, நம்பியாம்பாளையம், ஆலாங்காட்டுப்பாளையம்னு திண்ணைப் பள்ளிக்கூடத்துல படிச்சிருக்கேன். அப்பா ஆறுமுகம், போஸ்ட் மாஸ்டர். வீட்டிலேயே அலுவலகம்.உள்ளூர் கோயில் பூசாரியான அப்பா, ஜாதகம் கணிச்சு,  ஜோசியமும் பார்ப்பார். வீட்டுக்கு சோவியத் யூனியன், முரசொலி, புதிய ஜெர்மனி, சோவியத்நாடு புத்தகமெல்லாம் நூல் அஞ்சலில் வரும். அதை உருவி எடுத்துப் படிச்சுட்டு, அப்படியே திரும்ப வைச்சிடுவேன்.

அவிநாசி ஆர்.சி. பள்ளிக் கூடத்துல 6-ம் வகுப்பு படிக்கும்போது, ஆண்டு மலரில் `பையனும், எலியும்'னு கதை எழுதினேன். ‘இந்த வயசிலேயே கதை எழுதறியேடா'னு வாத்தியாரே கேட்டாரு. அவிநாசி முருகேசன், நா.பா எழுத்துகள் எல்லாம் எனக்கு பரிச்சயமாச்சு. திருப்பூர் சிக்கண்ணா கல்லூரியில் படிக்கும்போது பேராசிரியரா இருந்தவர் முப்பால் மணி. அவர் கற்றுக் கொடுத்த இலக்கியம்,  கதை எழுதறதுக்கு விதைபோட்டது. 1969-ல் ‘குழந்தை வேணும்’னு ஒரு கதை எழுதி மாலைமுரசுக்கு அனுப்பினேன். பிரசுரமாச்சு. அப்ப ரூ.10 அனுப்பிச்சாங்க. தொடர்ந்து கதை எழுத ஆரம்பிச்சேன்.

மகரிஷி, அடியார் கட்டுரைகள் படிச்சிட்டு, அவங்களுக்கு கடிதம் எழுதுவேன். அவங்களை சந்திக்கவும் செய்வேன். அவங்க என் எழுத்தார்வத்தைப் பாராட்டி, ஊக்கப்படுத்தினாங்க. அந்த சமயத்துல தண்டபாணிங்கிற பேர்ல  நிறைய பேர் இருந்தாங்க. அதனால, ஆட்டனத்திங்கற புனைப்பெயர் வெச்சிக்கிட்டேன்.

அதுக்கு முன்னாடியே ஆறுமுக தண்டபாணி, கலா தண்டபாணி, ஆ.தண்டபாணி, சிவப்பிரியன் என்ற பேர்ல எல்லாம் கதை எழுதியிருக்கேன். 1972-ல் வனவர் பணி கிடைக்கவே, என் வாழ்க்கை சூழலே மாறியது. காடுகளிலும், காட்டுவாசிகளோடும் திரிய வேண்டிய சூழல்.

ஆரம்பத்தில், வனவாசிகள்னா சந்தனக்கட்டை கடத்தறவன், சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவன்ங்கற கண்ணோட்டம்தான் இருந்தது. வனக் குழு, வனவாசிகள் நலன்னு அரசாங்கம் பல திட்டங்கள் உருவாக்கின பிறகு, அவங்ககூட நெருங்கிப் பழக ஆரம்பிச்சேன்.

அப்போதுதான் என் கண்ணோட்டமும் மாறுச்சு. அவங்க கஷ்டம் எல்லாம் புரிஞ்சது. கல்லூரிப் பருவத்துல எழுதிக்கிட்டிருந்த கதை,  கட்டுரைகளை சில வருஷங்கள் விட்டுட்டேன். இந்த எளிய மக்களோட வாழ்க்கையைப்  பார்த்தவுடனே, திரும்பவும் எழுத ஆரம்பிச்சேன். பணி ஓய்வுபெற்றதும் எழுத்துப் பணியில் முழுமையாக ஈடுபட்டேன். முதல்  நாவல் வனம்.

அதுக்கு முன்னரே தீக்கதிர், தாமரை, செம்மலர், ஓம்சக்தி, பேசும் புதிய சக்தி இதழ்களில் 70-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் பிரசுரமாகியுள்ளது. முதல் நாவலுக்கு தமிழ்நாடு கலை, இலக்கிய பெருமன்ற விருது, சித்தர் ஞானபீடத்தின் புதினப்போராளி விருது கிடைச்சது.

தொடர்ந்து, சிறுகதைத் தொகுப்புகளுக்காக ராஜபாளையம் மணிமேகலை மன்றம் விருது, கம்பர் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை விருது, கட்டுரை நூலுக்காக சென்னை கவிதை உறவு விருது கிடைச்சது. என் படைப்புகள் கல்லூரியில் பாடமாக வைக்கப்பட்டிருப்பதுடன், கல்லூரி மாணவர்கள் ஆய்வுக்கும் எடுத்து,  எம்.ஃபில்.  பட்டம் பெற்றுள்ளனர். சில சிறுகதைகள் கன்னடத்திலும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளன.

காடுகள், கானுயிர்கள், அதையொட்டி நகரும் பழங்குடிகள் பற்றி நிறைய எழுதப்பட வேண்டும்.  அப்போதுதான், அவர்களே காடுகளைக் காப்பாற்ற வல்லவர்கள்னு மக்கள் உணர முடியும்.

மலை மக்களின் வாழ்க்கை, நாம் கற்பனையிலும் நினைக்க முடியாதது. முதுமலை தெப்பக்காட்டில் நான் இருந்தபோது கிடைத்த அனுபவத்தைக் கொண்டு, `பால்கூடாரம்' என்ற புதிய நாவலை எழுதிக் கொண்டிருக்கிறேன். எந்த வசதியும் இல்லாத மூணுகுட்டை, எழுத்துக்கல் புதூர், குறவன்கண்டின்னு நூற்றுக்கணக்கான பழங்குடி கிராமங்கள் எல்லாம் சுத்தியிருக்கேன். மூட நம்பிக்கைகளால் பல உயிர்கள் போயிருக்கு. அதனால்தான், கானக மனிதர்களின் வாழ்க்கையை எழுத வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்" என்றார் ஆட்டனத்தி.

இவரது மனைவி நாகமணிதான், இவருக்கு முதல் வாசகி. மகன் சக்திவேல் கம்ப்யூட்டர் துறையில் பணிபுரிந்தாலும், அப்பாவைப் போலவே எழுத ஆரம்பித்திருக்கிறார்.

50 எழுத்தாளர்களின் ஜாதகம்...

ஆட்டனத்தி வீட்டின் முன் ஜோதிட அறிவிப்பு பலகை தொங்குகிறது. அப்பாவிடம் சிறு  வயதிலேயே ஜோதிடம் கற்றுக் கொண்ட இவர், ஓய்வுபெற்ற பிறகு ஜோதிடமும் பார்க்கிறார்.  மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் ஜோதிடக் கலையில் பட்டயமும்,  தஞ்சை சாஸ்தா கல்லூரியில் பி.ஏ., கற்பகம் பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி.  பட்டமும் பெற்றிருக்கிறார்.

அகிலன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், இந்திரா செளந்தரராஜன், முத்தமிழ் விரும்பி, மா.நடராசன், பெருமாள் முருகன், சிதம்பரநாதன், சக்திகனல், கோ.மா.கோதண்டம், முப்பால் மணி, சாந்தகுமாரி என தமிழகத்தின் 50 எழுத்தாளர்களின் ஜாதகங்களை கணித்து, ஆய்வு செய்து வைத்துள்ளார் ஆட்டனத்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்