தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அரசு மட்டுமே காரணமா..?

By எஸ்.நீலவண்ணன்

தமிழகத்திற்கு ஒரு ஆண்டில் கிடைக்கும் மழை நீரின் சராசரி அளவு 958 மி.மீ. கடந்தாண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை இயல்பை விட 14 சதவீதம் குறைவாக மழை பெய்திருக்கிறது. இதனால் 823.9 மி.மீ. மழை பொழிந்திருக்கிறது.

தமிழகத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 89 அணைகள் உள்ளன. இதைத் தாண்டி ஏராளமான ஏரி, குளங்கள் உள்ளன. 1980-ம் ஆண்டு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் குறித்த கணக்கெடுப்பு நடந்தது. அந்தப் புள்ளி விவரப்படி தமிழகத்தின் நீர்நிலைகள் 39,202. 'இவற்றில் 10 சதவீதம் அழிந்து போய்விட்டன' என்கிறது சர்வதேச நீர் மேலாண்மை மையம்.

1906-ம் ஆண்டு கணக்கீட்டின் படி ஒருங்கிணைந்த சென்னையில் 474 நீர்ப் பிடிப்பு நிலைகள் (ஏரி, குளம், குட்டை, தாங்கல் உள்பட) இருந்தன. 2013-ல் எடுத்த கணக்கீட்டில் 43 நீர் நிலைகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .இதில் "பெரும்பாலான குளங்கள் அரசுத் துறை சம்பந்தப்பட்ட அமைப்புகளால் ஆக்கிரமி ப்பு செய்யப்பட்டுள்ளது" என்று நாடாளு மன்ற நீர்வள நிலைக்குழு தனது 16-வது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

'நீர் மேலாண்மை' என்கிறபோது நீராதா ரங்களை உருவாக்குவது, அவற்றைப் பாதுகாப்பது, நீரைச் சேமிப்பது, பய னுள்ள முறையில் பயன்படுத்துவது குறித்துத் திட்டமிடுவது, நீரை விநியோகம் செய்வது, நீர் விரயத்தைக் குறைப்பது ஆகிய கொள்கைகளைக் கொண்டதாகும்.

ஆற்றில் நீரின் அளவு அதிகரிக்கும் போது, அது ஆற்றிலிருந்து ஏரிக்கு வரும். ஏரியிலிருந்து கண்மாய், கண்மாயிலிருந்து கரணை, கரணையிலிருந்து தாங்கல், தாங்கலில் இருந்து ஏந்தல், ஏந்தலில் இருந்து ஊரணி, ஊரணியிலிருந்து குளம், குளத்திலிருந்து குட்டை என ஒரு நீர்ச் சங்கிலி இருந்தது. இதை அவ்வப்போது மராமத்து செய்ய வேண்டியது அவசியம். ஒரு நகரம் வளர்ச்சியடைந்தால், முதலில் பலியாவது அங்குள்ள நீர்நிலைகள்தான்.

நீர்நிலைகள் பறிபோனதே தற்போ தைய தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு காரணம். இந்த அவலத்திற்கு அரசு மட்டுமே காரணமா..!

ஏரிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு விளை நிலங்களாகவும், குடியிருப்பு பகுதி களாக மாறியதும், முப்போகம் விளையும் நிலங்கள் வீட்டு மனைகளாக மாறி கலர் கொடிகள் பறக்க விடப்படுவதும், ஆறுக ளில் மணல் கொள்ளை நடக்கும் போது, கொள்ளையர்களை கண்டு கொள்ளாமல் இருக்க ஆற்றங்கரை கிராம மக்கள் கோயி லுக்கு என்று தனியாக பெருந்தொகை பெற்றுக் கொள்வதும் என பொறுப்பற்ற தவறுகள் நாலாபுறமும் சூழ்ந்து நீர் மேலாண்மையை சிதைத்திருக்கின்றன.

'நீர் மேலாண்மை'யில் நாம் செய்த தவறு களே இன்று நம்மைச் சுற்றி வறட்சியாக நிற்கிறது என்கிறார் நில வளம் என்கிற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிரவன்.

தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், கன்மாய்களில் சுமார் 50 சதவீதத்திற்கும் மேல் காணவில்லை. மழைப் பொழிவு காலங்களில், தேக்கி வைப்பதை கைவிட்டு ரொம்ப காலம் ஆகிவிட்டது. உதாரணத் திற்கு சென்னையை மூழ்கடித்த வெள்ளம் அடுத்த 4 மாதங்களில் சென்னைக்கு வறட்சியைத்தான் ஏற்படுத்தியது.

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட மழை நீர் சேக ரிப்பு திட்டத்தை நாம் எத்தனை வீடுகளில் இன்றளவில் செயல்படுத்தி வருகிறோம்? இன்று வயல்வெளிகளில் கினற்றின் பக்கவாட்டில் ஆழ்துளையிட்டு எடுக்கப்படும் நீரால் பக்கத்து வயல் விவசா யியையே கடும் வறட்சிக்கு உள்ளாக்கு கிறோமே? யாராவது சிந்தித்து பார்த்தது உண்டா?

'குடிமராமத்துப் பணி' என்ற பெயரில் அரசாங்கம் ஏரி, குளம், கன்மாய்கள் தூர் வாரி வருவதாகக் கூறுகிறது. இப்பணி கள் சரியாக நடக்கின்றதா என்று எப்போதா வது நமது பகுதியில் நாம் கண்காணித் திருக்கிறோமா..? அனைத்திற்கும் அரசாங் கத்தை குறை கூறிக்கொண்டிருந்தால் எதுவும் நடந்து விடப் போவதில்லை. முதலில் ஒவ்வொரு தனி மனிதனும் திருந்த வேண்டும். கிராம வாரியாக, குழுக் களாக இணைந்து மழை நீர் சேகரிப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் கழிவு நீர் சென்ற பகுதியில் சுமார் 1,300 ஏக்கர் பரப்பளவுள்ள, சுமார் 12 மதகுகள் உள்ள ஏரியை சுத்தமாக சீர் செய்து ஆழப்படுத்தியதின் விளைவால் அங்கு நீர் சேமிக்கப்பட்டு, கடந்த 70 ஆண்டுகளாக ஒரு போகம் விவசாயம் செய்த நிலை மாறி, தற்போது இரு போகம் விவசாயம் செய்கிறார்கள்.

இதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் இருக்கின்ற நீர்நிலைகளை சீர்செய்து நீரை சேமித்தாலே குடி நீருக்கோ, விவசாயத் திற்கோ பஞ்சம் ஏற்படாது என்கிறார்.

'கூவம் அடையாறு பக்கிங்காம்' நூலாசிரியர் எழுத்தாளர் கோ.செங்குட்டு வனும் இதே ஆதங்கத்தை வெளிப்படுத் துகிறார்.

"பதினென் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான சிறுபஞ்சமூலத்தின் ஆசிரியர் காரியாசான் சொல்கிறார் “குளம் அமைத்தல். அதன் மிகைநீர் வழிய கலிங்கு அமைத்தல். கலிங்கில் இருந்து நீர் வெளியேறும் பாதை அமைத்தல். பாசனம் பெரும் நிலப்பகுதியை உழு வயலாக்குதல். நீர் பற்றாக்குறையை சமாளிக்கக் கிணறு வெட்டுதல் ஆகிய ஐந்தையும் செய்பவன் 'சொர்க்கத்துக்குப் போவான்' என்கிறார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே ஓங்கூரில் உள்ள பல்லவர் கால ஏரிக் கல்வெட்டு, 'ஏரியைக் காப்பவர்களின் காலடியைத் தலை மீது சுமப்பேன் - இது காத்தான் என் முடி மேலன' என்கிறது. ஏரி, குளங்களை உருவாக்குவதிலும் அவற்றைப் பாதுகாப்பதிலும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம் முன்னோர் எவ்வளவு அக்கறைக் காட்டினார்கள்! நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கி னார்கள். இந்தக் குடி மராமத்துப் பணிகள் வெள்ளையர் ஆட்சியிலும் கூட தொடர்ந் தது. இடையில் அதை விட்டதால் தான் இந்த இழிநிலை.

சென்னையின் தியாகராயர் நகர் வளர்ந்து நிற்பதும், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அரசு மருத்துவக் கல்லூரியும் எழுந்து நிற்பதும் ஏரிகளின் மீதுதானே? நாம் பார்த்துக் கொண்டு இருக்கும் போதே, நம் கண் முன்னே இந்த வளங்கள் களவாடப்பட்டன. இந்தக் களவாடலுக்கு அரசு நிர்வாகம், அரசியல் கட்சியினர் மட்டுமல்ல... நாம் அனைவ ருமே ஒட்டு மொத்தப் பொறுப்பாளிகள்.

நம் கிராமத்தின் ஊடாக ஆற்று மணலை அள்ளிச் சென்ற போது, ஊர்ப் பஞ்சா யத்தின் பேரால் பணம் வாங்கிக் கொண்டு மவுனமாக வேடிக்கைப் பார்த்தவர்கள் தானே நாம்! வளைத்துப் போட்டவர் களையும் சுரண்டல் பேர்வழிகளையும் தட்டிக் கேட்கத் தவறி விட்டோம். ஒரு வகையில் நாமும் அவர்களுக்குத் துணை நின்றோம்; நிற்கிறோம். மொத்த இயற்கை வளமும் சூறையாடப்பட்டப் பின்பு, தவித்த வாய்க்குத் தண்ணீர் தேடி அலைகிறோம்'' என்று ஆதங்கப்படுகிறார்.

சிறுபஞ்சமூல ஆசிரியர் காரியாசான் சொல்வது போல மறுமையில் நாமெல்லாம் சொர்க்கத்துக்குப் போகா விட்டாலும், வாழும் காலத்தில் நரகத்தில் நம்மை நாமே தள்ளாமல் இருக்க 'நீர் வழிப் பேணல்' அவசியம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

17 hours ago

மேலும்