மொழி, இனம், தேச எல்லைகள் கடந்து, சப்-டைட்டில் தேவைப்படாமலேயே வரவேற்பைப் பெறும் உலகத் திரைப்படங்களை நமக்குத் தெரியும். சர்வதேசத் தன்மைகொண்ட உலக இசையாக ஒரு தமிழ்ப் பாடல் ஒலிக்க முடியுமா? ‘யாதும் ஊரே’ கீதம் வழியாக அதைச் சாதித்துக் காட்டியிருக்கிறார் திருவாரூரில் பிறந்து வளர்ந்து, தற்போது அமெரிக்காவில் இசையமைப்பாளராக அறியப்பட்டிருக்கும் ராஜன் சோமசுந்தரம்.
தமிழ், தமிழர் பண்பாடு, தமிழர் முன்னேற்றம் ஆகியவற்றை அமெரிக்க மண்ணில் பேணிக் காப்பதில் அங்கே செயல்பட்டுவரும் தமிழ்ச் சங்கங்களின் பணி அளப்பரியது. குறிப்பாக, 1969-ல் தொடங்கப்பட்ட சிகாகோ தமிழ்ச் சங்கம் பல பெரும்பணிகளைச் செய்து வருகிறது. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற கணியன் பூங்குன்றனின் பாடல் வரியை இலச்சினை வாசகமாகச் சூட்டிக்கொண்ட இச்சங்கம், தற்போது பொன்விழா ஆண்டில் நுழைந்திருக்கிறது. அதையொட்டி அமெரிக்காவின் சிகாகோ நகரில் சங்கத்தின் பொன்விழாவையும் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கங்களின் பேரவையான ஃபெட்னாவுடன் இணைந்து (FeTNA) 10-ம் உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டையும் நாளை மறுநாள் ஜூலை 3 அன்று தொடங்கி 7-ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு கோலாகலமாக நடத்துகிறது.
இந்த உலகத் தமிழ் மாநாட்டுக்கான ‘மைய நோக்குப் பாட’லாக, (Theme song) ராஜன் சோமசுந்தரம் இசையமைத்திருக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற புறநானூற்றுப் பாடல் அதிகாரபூர்வமாகத் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மாதம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது. அப்போது முதல் ‘யாதும் ஊரே’பாடல் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
13 வரிகளில் இலக்கியச் சாதனை
தமிழ்ப் பண்ணிசை, கர்னாடக சங்கீதம், இந்துஸ்தானி என இந்தியாவில் புகழ்பெற்ற பல இசை வடிவங்கள் உள்ளன. அதேபோல மேற்கத்திய இசை வடிவங்களில் செவ்வியல் இசைக்கு வெளியே, பாப், ரேப், ராக் போன்ற இசைவடிவங்கள் இன்று புகழ்பெற்று விளங்குகின்றன. இவை, இன்று உலகப் பொதுமையுடன் தேச எல்லைகள் கடந்து பரவி நிற்கின்றன. எல்லைகளைக் கடந்துசெல்லும் தன்மை இசைக்கு உண்டு. ஆனால், அதில் தவழ்ந்துசெல்ல, அதே உலகப் பொதுமையை முன்வைத்த பாடல் உண்டா என்றால், தமிழ் இலக்கியத்துக்கு மட்டுமே அந்தப் பெருமை உண்டு. 2000 ஆண்டுகளுக்கு முன்பு கணியன் பூங்குன்றன் பாடிய ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ பாடல் தமிழரின் பரந்த மனப்பான்மையையும் தொலைநோக்குப் பார்வையையும் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கிறது.
புறநானூற்றில் 192-ம் பாடலாக இடம்பெற்றிருக்கும் 13 வரிகளைக் கொண்ட இப்பாடல் தமிழ் இலக்கியத்தின் உச்ச சாதனைகளில் ஒன்று என இதை ஆங்கிலத்தில் முதன்முதலில் மொழிபெயர்த்த அறிஞரான ஜி.யு.போப் தொடங்கி, தமிழை நன்கு ஆய்ந்து அறிந்த பேராசிரியர்கள் வரை எடுத்துக்காட்டி வருகிறார்கள்.
உலக இசை வடிவங்களில் தவழும் தமிழ்
இத்தனை சிறப்புமிக்க பாடலை, அதன் உலகப் பொதுமையை எடுத்துக்காட்டும் விதமாக கர்னாடக சங்கீதம், ராப், பாப், ராக், சிம்பொனி இசைக்கோப்பு பல இசை வடிவங்களை இணைத்துக்கொண்டு இசையமைத்திருக்கிறார் ராஜன் சோமசுந்தரம்.
‘யாதும் ஊரே…’ என்று உலகுக்கே உரக்கச் சொன்னதை உணர்த்த, தெறிக்கும் ஆப்பிரிக்கக் குரலிசை வழியாகத் தொடங்குகிறது இந்தப் பாடல். பின்னர் ராக் இசைக்குத் தாவி, ராப், பாப் என்று பயணித்து, தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர் கார்த்திக்கின் தீர்க்கமும் இனிமையுமான குரலில் ‘யாதும் ஊரே…’ என முழுப்பாடலையும் அவர் பாடத் தொடங்கும்போது ஒரே நிமிடத்தில் உலகைச்சுற்றி வந்து சேர்ந்த உணர்வு ஏற்படுகிறது!
நடுவில் சீனர்களின் இசை, அரேபிய இசை, மேற்கிந்தியத் தீவுகளின் காலிப்ஸோ, ஜாஸ், கர்நாடக சங்கீதம் இவற்றுடன் நமது நாட்டுப்புற இசையும் உற்சாகமாக இணையும்போது வெவ்வேறு இசை வடிவங்களை எவ்வளவு இனிமையாக இசையமைப்பாளர் இணையவைத்திருக்கிறார் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை. மிக மிக முக்கியமான ‘யாதும் ஊரே’ பாடலின் கடைசி இரண்டு வரிகள் உணர்த்தும் ‘சிறியோரை இகழ்ந்து தூற்றியதும் இல்லை.. பெரியோரை வியந்து போற்றியதும் இல்லை'.என்ற மனித உன்னதத்தை உணர்த்தும் 'பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே' என்ற வரிகள் ஒலிக்கும் இடத்தில், எந்த இசை வடிவத்துக்கும் ஏற்றது எங்கள் தமிழ் எனும்விதமாக இசை முழுமையுடன் ஒலிக்கிறது. நம் இதயத்தையும் கண்களையும் நிறைக்கிறது.
சர்வதேசத் தயாரிப்பு
இந்த உலக இசைப் பாடலில், இந்திய, தமிழ் வாத்தியங்களுக்கு இணையாக மேற்கத்திய வாத்தியங்களைக் காதுக்கு இனிமையாகப் பயன்படுத்தியிருக்கிறார் இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம். முக்கியமாக அமெரிக்காவின் பிரபல இசை நடத்துநர், அந்நாட்டின் சிறந்த சிம்பொனி இசைக் குழுக்களை வழிநடத்தியவர் என்ற பெயர்பெற்றிருக்கும் மேஸ்ட்ரோ வில்லியம் ஹென்றி கர்ரி வழிகாட்டலில், டர்ஹாம் சிம்பொனிக் குழுவில் அங்கம் வகிக்கும் 68 வாத்தியக் கலைஞர்கள் இந்தப் பாடலுக்கான பிரம்மாண்ட இசைக்கோவையின் பெரும்பகுதியை வாசித்திருக்கிறார்கள்.
இத்தாலிய பாப் பாடகி சார்லட் கார்டினாலே, லண்டனைச் சேர்ந்த ராப் இசை பாடகர் தர்ட்டின் பீட்ஸ் இருவரும் தமிழ்ச் சொற்களைத் திறம்படக் கற்றுப் பாடியிருக்கிறார்கள். உக்ரேனைச் சேர்ந்த கிடார் இசைக் கலைஞர் ஆர்ட்டம் எபிமோவின் ராக் கிடாருடன், ராஜேஷ் வைத்யாவின் வீணையிசை, ராப் மற்றும் பறையிசை கலக்குமிடம் உங்களை ஆச்சரியப்படுத்தும். இந்தக் கலவைக்கு உச்சபட்ச மகத்துவத்தை வழங்கியிருக்கிறது பாடகர் கார்த்தியின் பங்களிப்பு. கம்பீரமும் பெருமையும் கலந்து அபாரமாகப் பாடியிருக்கிறார். தமிழரின் வாழ்வியலில் காணும் தொன்மையைப் பாடகி பாம்பே ஜெயஸ்ரீ உற்சாகப் பெருவெள்ளமாய்த் தன் குரல் வழியே கடத்தித் தந்திருக்கிறார்.
ஒரு சர்வதேசத் தயாரிப்பாக, இசையில் பல வடிவங்களை இணைத்ததைப் போல, பாடலின் மியூசிக் வீடியோவை ஈர்ப்பு மிக்கதாக மாற்றும் முயற்சியில், பாலே, ஜாஸ், டேப், ஹிப்ஹாப், ஜிப்ஸி, பரதநாட்டியம், அமெரிக்கர்கள் ஆடும் நாட்டுப்புற நடனம் என்று இப்பாடலுக்காகப் பயன்படுத்தப்பட்டிருக்கும் நடன வகைகளும் அவற்றில் பங்குபெற்ற கலைஞர்களின் பங்களிப்பும் சில நிமிடங்களில் நம்மை உலகம் சுற்றிவரச் செய்கின்றன.
மேலும் 6 பாடல்கள்
இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரத்திடம் பாடல் உருவான விதம் பற்றிக் கேட்டபோது, “இந்தப் பாடலுக்குக்கான இசைவடிவத்தை உருவாக்குவதற்கு முன்பாக, பாடலின் முழுமையை உள்வாங்கிக் கொள்வதில் எழுத்தாளர்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில் நாடன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எனக்குப் பெரும் வழிகாட்டிகளாக இருந்தார்கள்.
நமது வாழ்வியலின் உலகளாவிய மேன்மையை எடுத்துக்காட்டும் மேலும் ஆறு அற்புதமான பாடல்களைத் தேர்ந்தெடுக்கவும் எனக்கு உதவி இருக்கிறார்கள். 1.யாயும் ஞாயும் யாராகியரோ 2. யாதும் ஊரே யாவரும் கேளிர், 3. வேரல் வேலி வேர்கோட்பலவின், 4.ஞாயிறு காயாத மர நிழல் பட்டு, 5. கலம்செய் கோவே கலம்செய் கோவே, 6.முல்லை ஊர்ந்த கல்லுயர் ஏறி, 7. ஓரில் நெய்தல் கறங்க ஆகிய ஏழு பாடல்களையும் கொண்ட 7 சங்கப் பாடல்களை, டர்ஹாம் சிம்பொனியுடன் இணைந்து உலகத்தரத்தில் ஒரு இசைத்தொகுப்பாகக் கொண்டுவர முயன்றுகொண்டிருக்கிறோம்.
சில பாடல்களின் பதிவுகள் முடிந்துவிட்டன. மற்ற பாடல்களையும் பதிவுசெய்யத் தமிழ்மேல் பற்று கொண்ட புரவலர்களையும், வர்த்தக குழுமங்களையும் இந்த முயற்சியில் பங்குபெற அழைக்கிறோம்.” என்கிறார். ஒரு பாடலையே உலக சமுதாயம் கொண்டாடும் நிலையில் மற்ற பாடல்களும் வெளியானால், ஹார்வர்டு உட்பட உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்களில் தமிழ் அரியணை ஏறிவரும் இந்த நேரத்தில் தமிழின் தொன்மையும் ஆழமும் உலகினரை வியக்கவைக்கும் என்பதில் ஐயமில்லை.
பாடலைக் காண....
முக்கிய செய்திகள்
தமிழகம்
43 mins ago
தமிழகம்
53 mins ago
தமிழகம்
20 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago