வனிதா விஜயகுமார் தனது குழந்தையைக் கடத்தி விட்டதாக அவரது இரண்டாவது கணவர் புகார் அளித்தார். அதன் பேரில் வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்த பிக் பாஸ் வீட்டிற்கு தெலங்கானா போலீஸாரும் சென்னை போலீஸாரும் சென்றுள்ளனர்.
பரபரப்புக்குப் பெயர் போனவர் நடிகை வனிதா விஜயகுமார். சீரியல் நடிகர் ஆகாஷ் என்பவரைத் திருமணம் செய்த வனிதா விஜயகுமார் ஒரு மகன் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்து விட்டு நியூஸிலாந்தில் தொழில் அதிபராக இருந்த ஆந்திராவைச் சேர்ந்த ஆனந்தராஜ் என்பவரைத் திருமணம் செய்தார். இவர்களுக்கு 2012 ஆம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து சென்றார் வனிதா விஜயகுமார். தன் குழந்தையையும் அவர் அழைத்துச் சென்றார். இருவருக்குமிடையே விவாகரத்து வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
வனிதா வேறு ஒரு நபருடன் வாழ முடிவெடுத்ததால் தனது குழந்தையை தன்னிடம் தரவேண்டும் என விவாகரத்து வழக்கில் ஆனந்தராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்த வழக்கில் வனிதா விஜயகுமார் குழந்தையை அவரிடம் ஒப்படைத்தார். பின்னர் விவாகரத்து பெற்று இருவரும் பிரிந்து சென்றனர்.
விவாகரத்து பெற்ற பின் தனது பெண் குழந்தையுடன் தனது சொந்த மாநிலமான தெலங்கானாவில் உள்ள சைபராபாத் மாவட்டத்தில் வாழ்ந்து வருகிறார் ஆனந்தராஜ். சென்னையில் வசித்து வந்த வனிதா விஜயகுமார் சமீபத்தில் தனது தந்தையுடன் தனது பூர்வீக வீட்டுக்காக சண்டையிட்டு போலீஸாரால் அப்புறப்படுத்தப்பட்டார். இந்த வழக்கும் நீதிமன்றத்தில் உள்ளது.
இந்நிலையில் தனது மகளை வனிதா விஜயகுமார் கடத்தி வந்து விட்டதாக ஆனந்தராஜ் புகார் அளித்து, சைபராபாத் போலீஸாருடன் சென்னை வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரி மாதம் 6-ம் தேதி பள்ளிக்குச் சென்றிருந்த ஆனந்தராஜின் 8 வயது மகளை வனிதா விஜயகுமார் தன்னுடன் சென்னைக்கு அழைத்து வந்துவிட்டார். தங்களுக்குப் பொதுவான ஒருவருக்கு இது குறித்து மெசேஜ் அனுப்பி இருந்த வனிதா விஜயகுமார், ஒன்றும் டென்ஷனாக வேண்டாம் நான் தான் அழைத்துச் சென்றுள்ளேன் என்று மெசேஜ் அனுப்பிவிட்டு மகளை சென்னைக்கு அழைத்துவந்துவிட்டார்.
இதனால் பதற்றமடைந்த ஆனந்தராஜ், தன் மகளை வனிதா விஜயகுமார் கடத்திச் சென்றதாக சைபராபாத் காவல் நிலையத்திலும், சென்னை காவல் துறையிலும் கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தார். பல இடங்களிலும் தேடிக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், வனிதா விஜயகுமாரிடமிருந்து தன்னுடைய மகளை மீட்டுத் தரும்படி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
அந்தப் புகார் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஆனாலும் வனிதா விஜயகுமார் எங்கிருக்கிறார் என்பது சென்னை போலீஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனிடையே சமீபத்தில் பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பமானது. அதில் 15 போட்டியாளர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் பங்கேற்றார்.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் கமல்ஹாசனிடம் முதல் நாள் சந்திப்பில் பேசிய வனிதா விஜயகுமார் தனது இரு பெண் குழந்தைகளை மேடையில் ஏற்றி கமலிடம் ஆசிர்வாதம் வாங்கினார். தொலைக்காட்சியில் இதைப் பார்த்த ஆனந்தராஜ் அதிர்ந்து போனார். காணாமல் போன தனது மகளுடன் வனிதா விஜயகுமார் பிக் பாஸ் மேடையில் கமலிடம் ஆசிர்வாதம் வாங்குவது கண்டு வனிதா விஜயகுமாரின் இருப்பிடம் தெரிந்ததை அடுத்து உடனடியாக சைபராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைப் பெற்ற சைபராபாத் போலீஸார் வனிதா விஜயகுமார்மீது ஐபிசி பிரிவு 363-ன் கீழ் கடத்தல் வழக்குப் பதிவு செய்து வாரண்ட்டுடன் சென்னை வந்தனர். சென்னை காவல் உயர் அதிகாரிகள் ஆணையின்படி, மதுரவாயல் போலீஸாரை கடந்த 2 நாட்களுக்கு முன் சந்தித்த தெலங்கானா போலீஸார் சென்னை போலீஸார் உதவியுடன் நேற்று இரவு பூந்தமல்லியில் உள்ள பிக் பாஸ் வீட்டிற்கு வனிதா விஜயகுமாரிடம் விசாரணை நடத்தச் சென்றனர்.
அப்போது அங்கே வனிதா விஜயகுமாரின் வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதன் பேரில் இரவு நேரம் என்பதால் காலையில் விசாரிப்பதற்காக திரும்பி வந்தனர். இந்நிலையில் இன்று காலை மீண்டும் தெலங்கானா போலீஸார் மற்றும் சென்னை போலீஸார் பிக் பாஸ் வீட்டிற்கு விசாரணைக்குச் சென்றுள்ளனர்.
இதுகுறித்து வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் ஆனந்தராஜிடம் பேசிய போது அவர் கூறியதாவது:
''எனது குழந்தையை நீதிமன்ற உத்தரவுப்படி நான் வளர்த்து வருகிறேன். வனிதா விஜயகுமார் வேறு ஒருவரைத் திருமணம் செய்து சென்றுவிட்டார். குழந்தைக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. அமைதியாக வாழ்ந்து வரும் என் வாழ்க்கையின் நிம்மதியைக் கெடுக்கும் விதத்தில் என் குழந்தையை கடந்த பிப்ரவரி 6-ம் தேதி பள்ளியிலிருந்து வனிதா விஜயகுமார் கடத்திச் சென்றுவிட்டார்.
கடந்த நான்கு மாதங்களாக அவர் எங்கு இருக்கிறார், என் குழந்தை எங்கே இருக்கிறது என்று தேடித்தேடி அலுத்து விட்டேன். குழந்தையின் படிப்பு போய்விட்டது. சென்னை போலீஸிலும் ஏற்கெனவே புகார் அளித்தும் கண்டு பிடிக்கமுடியவில்லை
கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவர் என் குழந்தையுடன் வருவதைப் பார்த்து அதிர்ந்து போனேன். அன்றே சைபராபாத் போலீஸில் புகார் அளித்து இன்று அவர் அவர்களுடன் சென்னை வந்தேன். இன்று பிக் பாஸ் வீட் டிற்குச் செல்கிறோம். என் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டால் அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வைத்து விட்டு குழந்தையுடன் திரும்பிவிடுவோம்.
அவ்வாறு குழந்தையை ஒப்படைக்காவிட்டால் வனிதா விஜயகுமாரை நீதிமன்ற உத்தரவு பெற்று கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபடுவோம்''.
இவ்வாறு ஆனந்தராஜ் தெரிவித்தார்.
இன்று பிக் பாஸ் வீட்டில் அளிக்கும் பதிலைப் பொறுத்தே போலீஸாரின் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும் எனத் தெரிகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
23 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
52 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago