கைதட்டல் கிடைக்காத கலைஞர்கள்!- அந்தரத்தில் தொங்குது சர்க்கஸ் கலைஞர்கள் வாழ்க்கை!

By ஆர்.கிருஷ்ணகுமார்

அந்த சர்க்கஸ் கூடாரத்தின் உள்ளே கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். முகமூடி அணிந்து வந்த கோமாளியின் நகைச்சுவைக்கு ஓரிருவர் கை தட்டினர். ஆனால், அந்த முகமூடியின் பின்னால் இருந்த கண்களில் பெருகிய கண்ணீர் யாருக்கும் தெரியாது. “வாழ்க்கைப் போராட்டம் ஒரு பக்கம் இருக்கட்டும். கைதட்டல்கூட இல்லீங்க. ஒரு கலைஞனுக்கு இதைவிட பெரிய வேதனை என்னங்க? வெளியில சிரிக்க வைக்கும் நாங்கள், உள்ளுக்குள்ள அழுதுக்கிட்டுத்தான் இருக்கோம்” என்றார் அந்தக் கோமாளி வேடமிட்டவர்.  ஆம்... அந்தரத்தில் தொங்கியும், பறந்தும் சாகசம் காட்டும் சர்க்கஸ் கலைஞர்களின் வாழ்க்கையும் அந்தரத்தில்தான் தொங்கிக் கொண்டிருக்கிறது. புறக்கணிக்கப்பட்ட கலைகளில் முதலிடத்தை வகிக்கிறது சர்க்கஸ். இதேநிலை தொடர்ந்தால், கொஞ்சம்நஞ்சம் ஒட்டியிருக்கும் உயிரும்போய், சில ஆண்டுகளிலேயே  முற்றிலுமாய் மறைந்துவிடும்நிலையில்தான் இருக்கிறது இந்த சாகசக் கலை.

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன் சேலத்தில் இரவு நேரத்தில் வானில் ஒரு நீண்ட வெளிச்சம் சுற்றிச்சுற்றி ஒளிரும். அப்பாவிடம் கேட்டபோது, “போஸ் மைதானத்தில் சர்க்கஸ் போட்டிருக்காங்க, புலி, சிங்கம், நீர்யானை எல்லாம் அங்க இருக்குது. உங்களை கூட்டிக்கிட்டுப் போகிறேன்” என்றார். சினிமாக்களில் மட்டுமே பார்த்திருந்த சிங்கம், புலியை நேரில் பார்க்கலாம் என்ற எண்ணமே, சிலிர்ப்பை உண்டாக்கியது. கூண்டுக்குள் ரிங் மாஸ்டர் சொல்வதையெல்லாம், நாய்க்குட்டிபோல சிங்கமும், புலியும் செய்துகொண்டிருந்ததைப் பார்த்தபோது, அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. என் குழந்தைகளுக்கு இதையெல்லாம் காட்ட முடியவில்லையே என்பதில் வருத்தம் அதிகம்தான். கோவை வஉசி மை தானத்தில் நடைபெற்று வரும் ‘ஜம்போ சர்க்கஸ்’  கலைஞர் களை சந்திக்கச் சென்றோம். “கலைஞர்கள் எல்லாம் வெளியில கடைக்குப் போயிருக்காங்க. பயிற்சியாளர் ரவீந்திரன் இருக்காரு. அவர்கிட்ட  பேசுங்க” என்றார்  சர்க்கஸ் மேலாளர் ரமேஷ். ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கும் மேலாக சர்க்கஸுடன் பிணைந்து வாழும் ரவீந்திரனிடம் பேசினோம்.

விதூஷகர்கள்...

“ராஜாக்கள் காலத்தில் விதூஷகர்கள் அரசரையும், சுற்றியிருந்தவர்களையும் சிரிக்க வெச்சாங்க. இப்ப இருக்கும் கோமாளிகளுக்கு இவர்கள்தான் முன்னோடி. விஜயநகரத்தை ஆண்ட கிருஷ்ணதேவராயரின் அரசவைப் புலவர்கள்ல ஒருவரான தெனாலிராமன், உலகப் புகழ்பெற்ற விதூஷகர்.

சோவியத் யூனியன் தலைவராக லெனின் இருந்தப்ப, மாஸ்கோவுல  சில கலைஞர்கள் சாகசங்களை செஞ்சிக்கிட்டிருந்தாங்க. இதைப்பற்றிக் கேள்விப்பட்ட லெனின், அந்தக் கலைஞர்களோட சாகசங்களைப் பார்த்து வியந்துபோய், அவர்களுக்குப் பெரிய அங்கீகாரம் கொடுத்தாரு. ரஷ்யாவின் உயர்ந்த விருதான `ஆர்டர் ஆஃப் லெனின்’

விருது சர்க்கஸ் கலைஞர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கு.

1880-ல் இந்தியாவில்...

பிரான்ஸ் நாட்டுல 1782-ல் ராணுவ அதிகாரி பிலிப் ஆஸ்ட்டிலே சர்க்கஸை உருவாக்கினாரு. இந்தியாவை பொறுத்தவரை, இத்தாலியை சேர்ந்த சர்க்கஸ் குழு, 1880-ல் மும்பைக்கு வந்தது. தங்களைப்போல குதிரை மீது ஏறி, யாராவது சாகசம் செஞ்சா தங்கமும், ஆயிரம் ரூபாய் பணமும் பரிசாகத் தரப்படும்னு அந்தக் கலைஞர்கள் அறிவிச்சாங்க.

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த குர்துவாடி சமஸ்தான ராஜா இதைக் கேள்விப்பட்டு, தன்னோட குதிரைக்காரன் விஷ்ணுபந்த் சாத்ரேவை கூட்டிக்கிட்டுப்போய், அவங்க கிட்ட அறிமுகம் செஞ்சிவெச்சாரு. பயிற்சி எடுத்து, உங்களைவிட சிறப்பாக சாகசம் செய்யறேன்னு சவால்விட்ட விஷ்ணுபந்த், 3 மாதங்களிலேயே பிரமாதமான குதிரைசாகச வீரராக மாறினாரு. ஆனால், அதுக்குள்ள இத்தாலி சர்க்கஸ் குழுவினர், இந்தியாவைவிட்டுப் போய்விட்டனர். அதுக்கப்புறம் `விஷ்ணுபந்த் சாத்ரே’ பெயர்லேயே சர்க்கஸ் குழுவைத் தொடங்கினாங்க. இந்த சர்க்கஸ் குழு, சென்னைக்கு வந்துட்டு, கேரள மாநிலம் கண்ணனூர் மாவட்டம் தலைச்சேரிக்குப் போனாங்க.

இந்திய சர்க்கஸ் பிதாமகன்!

அங்க ஒரு பள்ளிக்கூடத்துல தற்காப்புக் கலைகளை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் கீழேறி குஞ்சுக்கண்ணன், சர்க்கஸ் நிகழ்ச்சிகளைப் பார்த்தாரு. அந்த சமயத்துல சில ஆதிவாசி மக்கள், கயிறு மேல நடக்கறது போன்ற சில கலைகளை செஞ்சிக்கிட்டிருந்தாங்க. அவங்களையும் சேர்த்துக்கிட்டு 1912-ம் ஆண்டு ஒரு சர்க்கஸ் கம்பெனியைத் தொடங்கினாரு. இவரை இந்தியா வின் சர்க்கஸ் பிதாமனாகப் போற்றுகிறோம். அதுக்கப்புறம் ஜெமினி, ஜம்போ, கிரேட் ஓரியன்ட், ராஜ்கமல், கிரேட் ஈஸ்டர்ன், கிரேட் ரேமண்ட், பாம்பா சர்க்கஸ் குழுனு நிறைய சர்க்கஸ் கம்பெனிங்க தொடங்கப் பட்டது. ஒரு கட்டத்துல இந்தியா வுல100-க்கும் மேற்பட்ட சர்க்கஸ் கம்பெனிங்க இருந்தது. 1951-ல் சங்கரன்,  ஜெமினி சர்க்கஸை உருவாக்கினாரு. அவரே 1977-ல் ஜம்போசர்க்கஸை தொடங் கினாரு. நல்லா போய்க்கிட்டிருந்த  சர்க்கஸ் நிகழ்ச்சி களுக்கு, 1990-ம்

ஆண்டுக்குப் பிறகு பல பிரச்சினைகள் உருவானது. நாங்க பிள்ளைகளுக்கு மேலாக பாவித்து வளர்த்த மிருகங்களை, கொடுமைப்படுத்தறதாக சிலர் புகார் செஞ்சாங்க. 2003-ம் ஆண்டு சர்க்கஸ்ல இருந்த புலி, சிங்கம், சிறுத்தை, மனிதக் குரங்கு,  நீர்யானைனு எல்லா மிருகங்களையும் பிடிச்சிக்கிட்டுப்போய், சில மிருகக்காட்சி சாலைகளில் விட்டாங்க. சர்க்கஸ் நிகழ்ச்சிகளில் மிருகங்களைப் பயன்படுத்த தடை விதிச்சாங்க. சர்க்கஸ் நிறுவனங்கள்கிட்ட இருந்து பிடிச்சிக்கிட்டுப்போன மிருகங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துடுச்சு.

இங்கதான் சர்க்கஸ் தொழிலோட அழிவு தொடங்கியது.  சின்னச் சின்ன சர்க்கஸ் கம்பெனிகளை எல்லாம் மூடிட்டாங்க. இதுக்கு அப்புறம் யானையைக்கூட பயன்படுத்த முடியாதபடி தடை விதிச்சிட்டாங்க.

மோட்டார் சைக்கிள் சாகசம்!

இப்பவும் ரஷ்யா, சீனா, ஐரோப்பிய நாடுகள்ல சர்க்கஸ் பிரமாதமாக நடந்துக்கிட்டிருக்கு. சில அமைப்புகளோட செயல்பாடுகள், ஒட்டுமொத்த சர்க்கஸ் கலைஞர்களோட வாழ்க்கையைப் புரட்டிப்போட்டுவிட்டது. இப்ப ஒட்டகம், நாய், கிளினு சிலவற்றை மட்டும் வெச்சிக்கிட்டு நிகழ்ச்சி நடத்தறோம்.

அதேசமயம், ஊஞ்சல் சாகசம், அந்தரத்தில் பறப்பது, ரிங் ஆஃப் டெத், உலக உருண்டையில் மோட்டார் சைக்கிள் சாகசம்னு நிறைய செய்யறோம்.

ஒருகட்டத்துல 300, 350 பேர் இருந்தாங்க. இப்பவெல்லாம் 100, 150 பேர்தான் ஒரு சர்க்கஸ்ல இருக்காங்க. கேரளா, தமிழ்நாடு, அசாம்காரங்கதான் அதிகம் இருக்காங்க. ஒன்றிரண்டு வெளிநாட்டுக் கலைஞர்களும் எங்களோட இருக்காங்க. வித்தைகாட்ட பழக்கப்பட்ட விலங்குகளை, மிருகக்காட்சி சாலையில் அடைத்து, அதுங்களை சாகடிச்சது மட்டுமில்லாம, சர்க்கஸ் நிறுவனங்களையும் நலிவடையச் செய்ததுதான் மீதம்.

எங்க சர்க்கஸ்ல, எத்தியோபியா, ஆப்பிரிக்கா, தான்சானியா கலைஞர்கள் மற்றும் வெளிமாநிலக் கலைஞர்கள் 150 பேர் இருக்காங்க. குழந்தைகளைக் கவரும் ஜோக்கர்கள், ஜிம்னாஸ்டிக், பார் விளையாட்டு, உடம்பை வில்லாக வளைக்கும் வீராங்கனை, மண்ணெண்ணெய் மூலம் தீப்பந்த சாகசம், முன்பின் ஓட்டும் சைக்கிள்னு பல சாகசங்களை செய்துகாட்டறோம்.

உயிரைப் பணயம் வைத்தும் பயனில்லை!

இரும்பு வளையத்துக்குள் மோட்டார் சைக்கிள்  சாகசம், கயிற்றில் எவ்வித பிடியுமின்றி  முன்னும் பின்னும் நடப்பது, அந்தரத்தில் தொங்கியபடி ஊஞ்சல் விளையாட்டுனு உயிரைப் பணயம் வெச்சி நிகழ்ச்சிகள் நடத்தறோம். ஆனாலும், வார இறுதி நாட்கள்ல மட்டும்தான் கொஞ்சம் கூட்டம் வருது. மற்ற நாட்கள் சொற்ப அளவுலதான் மக்கள் வர்றாங்க.

கலைஞர்களுக்கும், இருக்கற சில பிராணி களுக்கும் உணவு, தினப்படி செலவு, டிரான்ஸ்போர்ட் செலவுனு  சர்க்கஸ் நடத்துவது சிரமமான ஒன்றாகிவிட்டது. பல பேர் சர்க்கஸை விட்டுப் போயிட்டாங்க. புதுசா யாருமே வர்றதில்லை. சின்ன வயசுல இருந்தே பழகினால்தான், உடம்பை வில்லா வளைத்து, சாகசம் செய்ய முடியும். ஆனா, குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தக்கூடாதுனு அதிகாரிகள் சொல்லறாங்க. 18 வயசுக்கப்புறம் எப்படி உடம்பை வளைக்க முடியும். அதனால, புதுசா யாருமே வர்றதில்லை. இருக்கற கலைஞர்கள்தான் நிகழ்ச்சிகளை செய்ய வேண்டியிருக்கு. சர்க்கஸ் வாழ்க்கை எங்க கண்ணு முன்னாடியே அழிஞ்சிக்கிட்டிருக்கு. இந்த கஷ்டத்துலேயும் முதலாளி சர்க்கஸ் கம்பெனியை நடத்திக்கிட்டிருக்காரு. இப்ப ஒரு 10 சர்க்கஸ் கம்பெனிங்கதான் இருக்கு. சமீபத்துலகூட ஒரு பெரிய சர்க்கஸ் கம்பெனியை மூடிட்டாங்க. இந்த நிலை தொடர்ந்தால், இன்னும் சில ஆண்டுகள்ல சர்க்கஸ்னு ஒண்ணு இல்லாமலேயே போயிடும்.

மீட்டெடுக்க உதவுமா அரசு?

அரசாங்கமும் சர்க்கஸ் கலையை கண்டுக்கறது இல்லை. ஒரு ஊர்ல இருந்து, இன்னொரு ஊருக்கு 30-க்கும் மேற்பட்ட வண்டிகள்ல பொருட்களை கொண்டுபோக, ரூ.4 லட்சம் வரைக்கும் செலவாகுது. இதுக்கு அரசு மானியம் கொடுத்து உதவலாம். வயது முதிர்ந்த சர்க்கஸ் கலைஞர்களுக்கு ஓய்வூதியம் கொடுக்கணும். பல மூத்த கலைஞர்கள் பிச்சை எடுக்கற நிலைக்குப் போயிட்டாங்க. அவங்களுக்கு எல்லாம் உதவணும். சர்க்கஸ் நிகழ்ச்சி நடத்துவதற்கு, அரசாங்க இடத்தை குறைந்த வாடகைக்கு வழங்கணும்.

நடனம், இசை, நாடகக் கலைஞர்கள், சினிமாக்காரங்களுக்கு எல்லாம் விருது கொடுக்கறாங்க. ராணுவத்துல கவுரவ பட்டம்கூட கொடுக்கறாங்க. சின்ன வயசுல இருந்து பயிற்சி எடுத்து, உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் சாகசம் செய்யும் கலைஞர்களுக்கு எந்த விருதும் கிடையாது. இந்தப் புறக்கணிப்புத்தான் எங்களால தாங்க முடியலை” என்றார் ரவீந்திரன்.

உலகமயமான தற்போதைய சூழலில், வாழ்க்கை எந்திரம்போல மாறிவிட்டது. குழந்தைகளின் உலகமோ, செல்போன், டிவி என சுருங்கிவிட்டது. பழைய அளவுக்கு பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும், இன்னமும் மக்களை மகிழ்வித்துக் கொண்டிருக்கும் சர்க்கஸ் கலைஞர்களைப் பார்க்க குழந்தைகளை அழைத்துச் சென்று, கொஞ்ச நேரமாவது செல்போன் பிடியிலிருந்து நாமும் விடுபட்டு, மழலைகளையும் மகிழ்விக்கலாமே!

70 ஆண்டுகளுக்கு மேல் சாகசங்கள் நிகழ்த்திய ரவீந்திரன்...

“நீங்கள் எப்போது  சர்க்கஸுக்கு வந்தீர்கள்?”  என்று 83 வயது ரவீந்திரனிடம் கேட்டோம். “70 வருஷத்துக்கு மேல இருக்கும். என்னோட ஊரும் தலைச்சேரிதான். அப்பா துணிக்கடை வெச்சிருந்தாரு. 8-ம் வகுப்புக்கு மேல எனக்கு படிப்பு வரலை. சித்தப்பாவோட நண்பர் என்னை `கிராண்ட் ஃபேரிசர்க்கஸ்’  கம்பெனியில சேர்த்துவிட்டாரு. அப்ப எனக்கு 13 வயசு.

ஆறு மாசம் கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டு, நிகழ்ச்சியில பங்கேற்க ஆரம்பிச்சேன். 1971-ம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் சண்டையின்போது, யுத்த நிதிக்காக டெல்லியில் சாகச நிகழ்ச்சிகள் நடத்தினோம். அப்ப ஜனாதிபதியாக இருந்த வி.வி.கிரி நேரில் அழைத்துப் பாராட்டினாரு. கிராண்ட் ஃபேரி சர்க்கஸ், பிரபாத்,

வெஸ்டர்ன், பாரத், ஜெமினி, ஜம்போனு பல சர்க்கஸ் கம்பெனி களில் வேலை செஞ்சிருக்கேன். இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், பெங்காளி, இந்தினு பல மொழிகள் தெரியும்.  1994-ம் ஆண்டுக்குப் பிறகு சாகச நிகழ்ச்சிகளைக் குறைத்துக்

கொண்டு, பயிற்சி கொடுத்துக்கிட்டு வர்றேன். இப்பவும் நான் ஆரோக்கியமாகத்தான் இருக்கேன். மனைவி சரோஜா, தலைச்சேரியில் இருக்காங்க. இரு மகன்கள், படிச்சிட்டு வேலையில் இருக்காங்க. அவங்க யாரும் சர்க்கஸ் வேலைக்கு வரலை. என்னோட மீதி காலத்தையும் சர்க்கஸ்லேயே கழிச்சிருவேன். ஏன்னா, இது எனக்கு தொழில் இல்லை, வாழ்க்கை” என்றார் நெகிழ்ச்சியுடன் ரவீந்திரன்.

கைதட்டல் ஓசைகூட இல்லை...

ஜம்போ சர்க்கஸ்-ல் கோமாளி வேடமேற்கும் ஏழுமலையிடம்(52) பேச்சுக்கொடுத்தோம். “சொந்த ஊரு திருவண்ணாமலை. அப்பா முனுசாமி சர்க்கஸ் கலைஞர். நானும் 5 வயசிலேயே சர்க்கஸ்-க்கு வந்துட்டேன். பார் விளையாட்டு, கோமாளி வேஷம் போடறதுனு எல்லாம் செஞ்சேன். 30 வருஷமா ஜெமினி சர்க்கஸ்லையும், 15 வருஷமா ஜம்போ சர்க்கஸ்லையும் வேலை செய்யறேன். எனக்கு 3 பொண்ணுங்க, ஒரு பையன். எல்லோரும் படிக்கறாங்க. ஒருத்தர்கூட சர்க்கஸ்-க்கு வரலை. நாமதான் கஷ்டப்படறோம். அவங்களும் எதுக்கு தெரிந்தே கஷ்டப்படணும்னு, அவங்களை சர்க்கஸுக்கு கூப்பிடலை.

சர்க்கஸ்ல விலங்குகள் இருந்த வரைக்கும் வாழ்க்கை சந்தோஷமா, நிம்மதியா இருந்தது. அதுக்கப்புறம் மக்கள்கிட்ட சர்க்கஸ் நிகழ்ச்சிகளுக்கான வரவேற்பு குறைஞ்சிடுச்சு. நாங்களும் புதுமையா எவ்வளவோ நிகழ்ச்சிகள் செஞ்சாலும், மக்கள்கிட்ட பெரிய வரவேற்பு இல்லை. வருமானம் குறைஞ்சது மட்டுமில்ல, கைதட்டல்கூட கிடைக்கறதில்லை. இதுதான் ரொம்ப வேதனையாக இருக்கு.  அங்கீகாரம் இல்லாத சாகச கலையை செஞ்சி என்ன பயன்? அழிஞ்சிக்கிட்டிருக்கற சர்க்கஸ் கலையை காப்பாத்த அரசு உதவணும்” என்றார் வேதனையுடன் ஏழுமலை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்