அனைத்து கனிமவள முறைகேடுகள் குறித்தும் சகாயம் குழு விசாரிக்க உத்தரவிட வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் பசுமை தாயகம் வழக்கு

தமிழ்நாட்டில் அனைத்து விதமான கனிமவள முறைகேடுகள் குறித்தும் ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தலைமையிலான குழு விசாரிக்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பசுமை தாயகம் செயலாளர் அருள் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் சட்ட விரோதமாக பல கனிமவள குவாரிகள் செயல்படுகின்றன. பல்வேறு புகார்களின் அடிப்படையில் ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கனிமவள குவாரிகளில் மட்டும் ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கில், தமிழ்நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் நடப்பதாகக் கூறப்படும் கனிமவள முறை கேடுகள்குறித்து விசாரிக்க ஐஏஎஸ் அதிகாரி சகாயத்தை சிறப்பு அதிகாரியாக நியமிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், மதுரை மாவட்டத்தில் உள்ள கிரானைட் குவாரிகளின் முறைகேடுகளை மட்டும் விசாரிப்பதற்காக சகாயம் தலை மையில் குழு அமைத்து தமிழக அரசின் தொழில்துறைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பொதுப் பணித்துறை உதவியுடன் தனியார் நிறுவனங்கள் சட்ட விரோதமாக கனிம வளங்களை வெட்டி எடுத்து வருகின்றன.

எனவே தமிழகத்தில் உள்ள ஆற்று மணல், செம்மண், கல் குவாரிகள், தாது மணல், கிரானைட் உள்ளிட்ட அனைத்து வகையான கனிமவள குவாரிகளில் நடக்கும் முறைகேடுகள் குறித்தும் சகாயம் குழு விசாரிக்க உத்தர விட வேண்டும்.

இதன்மூலம் தமிழ் நாட்டில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமாக சுரண்டப் படுவதைத் தடுக்க முடியும் என்று மனுவில் கூறப்பட்டிருக்கிறது. இந்த வழக்கு, விரைவில் விசார ணைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE