‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘உங்கள் குரல்’ சேவை மூலம் வந்த தகவலை உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதுடன், அவர் தனது படிப்பைத் தொடரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழநி அருகே தொப்பம்பட்டி ஒன்றியம் அப்பிபாளையத்தைச் சேர்ந்தவர் அழகம்மாள். அப்பகுதியில் உள்ள தனியார் கோழி இறைச்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது 14 வயது மகள் தொப்பம்பட்டியில் உள்ள அரசுப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்தார். படிப்பைப் பாதியில் நிறுத்திய தாயார் அழகம்மாள், சிறுமியை தான் பணிபுரியும் நிறுவனத்திலேயே வேலைக்கு அழைத்துச் சென்றார்.
உங்கள் குரலில் வாசகர் தகவல்
இந்நிலையில், சிறுமிக்கு திருமணம் நடத்த அழகம்மாள் முடிவு செய்துள்ளார். அருகில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஒருவருடன் சிறுமிக்கு திருமணம் நடத்துவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
இதற்கிடையே, சிறுமியின் படிப்பை பாதியில் நிறுத்தி, அவரை வேலைக்கு அனுப்பியதுடன், அவருக்கு திருமணம் செய்துவைக்கும் ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும், அதை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் ‘இந்து தமிழ்’ நாளிதழ் வாசகர் ஒருவர், ‘உங்கள் குரல்’ சேவை பகுதியில் தொடர்பு கொண்டு தெரிவித்தார்.
இதுகுறித்த தகவல் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியராக இருந்த டி.ஜி. வினய்க்கு (தற்போது அரியலூர் மாவட்ட ஆட்சியர்) ‘இந்து தமிழ்’ செய்தியாளர் மூலம் உடனடியாக தெரிவிக்கப்பட்டது. அவர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் மீனாட்சிக்கு உத்தரவிட்டார்.
உடனடியாக அப்பிபாளையம் கிராமத்துக்குச் சென்று அலுவலர்கள் விசாரித்தனர். சம்பந்தப்பட்ட சிறுமியின் தாயார் அழகம்மாளை குழந்தைகள் பாதுகாப்பு குழுவினர் முன்பு நேரில் ஆஜராக அறிவுறுத்தினர். அதன்படி ஆஜரான அழகம்மாளிடம், சிறுமிக்கு திருமணம் செய்வது சட்டப்படி குற்றம், இதனால் சிறுமிக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அலுவலர்கள் எடுத்துக் கூறினர்.
இதையடுத்து, குழந்தைக்கு திருமணம் செய்யும் ஏற்பாடுகளை நிறுத்திவிடுவதாகவும், சிறுமியை மீண்டும் பள்ளிக்கு அனுப்புவதாகவும் குழந்தைகள் நல பாதுகாப்பு குழுவினரிடம் உறுதியளித்து அழகம்மாள் எழுதிக்கொடுத்தார்.
சிறுமி ஏற்கெனவே படித்து வந்த அரசு பள்ளியிலேயே அவரை மீண்டும் சேர்க்க தலைமையாசிரியரிடம் பேசி குழந்தைகள் நல குழுவினர் ஏற்பாடுகளை செய்தனர். தற்போது 9-ம் வகுப்பில் சேர்ந்துள்ள சிறுமி, தினமும் பள்ளிக்குச் சென்று வருகிறார்.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ உங்கள் குரல் பகுதிக்கு தகவல் தெரிவித்த பெயர் வெளியிட விரும்பாத வாசகர் கூறியதாவது:
சிறுமியின் படிப்பு தடைபட்டு, குழந்தைத் தொழிலாளியாக வேலைக்குச் சென்ற நிலையில், திருமண ஏற்பாடுகளும் நடைபெறுவதாக அறிந்து கவலையடைந்தேன். அதைத் தடுத்து நிறுத்த வேண்டும் எனக்கோரி ‘இந்து தமிழ்’ நாளிதழின் உதவியைநாடினேன். உரிய நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கையால் தற்போது சிறுமியின் திருமணம் நிறுத்தப்பட்டு உள்ளது, சிறுமியின் வாழ்க்கையை காப்பாற்றிய திருப்தி ஏற்பட்டு உள்ளது.
சிறுமியின் திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு மட்டுமின்றி பள்ளிப் படிப்பையும் தொடர முயற்சி மேற்கொண்ட ‘இந்து தமிழ்’ நாளிதழுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago