தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் விரைவில் இடிப்பு: 57 ஆண்டு பழமையான நூலகத்தின் கதி என்ன? - மாற்று இடம் ஒதுக்க வாசகர்கள் வலியுறுத்தல்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு நவீன பேருந்து நிலையம் அமைக்கப் படவுள்ளதைத் தொடர்ந்து, அங்குள்ள 57 ஆண்டுகள் பழமையான நூலகத்தின் கதி என்னவாகும் என்ற கவலை வாசகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் (அண்ணா பேருந்து நிலையம்) ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், ரூ.51 கோடியில் மேம் படுத்தப்படவுள்ளது. இதற்காக பேருந்து நிலைய கட்டிடம் முழுமையாக இடித்து அகற்றப்பட்டு, அதிநவீனமாக அமைக்கப்படவுள்ளது. பேருந்து நிலைய கட்டிடம் மற்றும் வளாகத்தில் உள்ள கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. சில கடைகள் ஏற்கெனவே காலி செய்யப்பட்டுள்ள நிலையில், மற்ற கடைகளையும் காலி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

முழுநேர நூலகம்

இந்த பேருந்து நிலைய கட்டிடத்தின் 2-வது மாடியில் மேலூர் கிளை நூலகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 1962-ம் ஆண்டு தூத்துக்குடி மேலூரில் தொடங்கப்பட்ட இந்த கிளை நூலகம், 2005-ம் ஆண்டு முதல் பழைய பேருந்து நிலைய கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

கடந்த 14 ஆண்டுகளாக பேருந்து நிலைய கட்டிடத்தில் செயல்படும் இந்த நூலகம், பொது நூலகத்துறையின் முழுநேர நூலகமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் 43 ஆயிரம் புத்தகங்கள் உள்ளன. 5,000 உறுப்பினர்கள் உள்ளனர். தினமும் 200-க்கும் அதிகமானோர் இந்த நூலகத்தை பயன்படுத்துகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக விளங்குகிறது. பேருந்து நிலைய கட்டிடம் இடிக்கப்பட உள்ளதால், நூலகத்தையும் காலி செய்ய மாநகராட்சி அறிவிப்பு கொடுத்துள் ளது. இதனால், நூலகத்தை எந்த இடத்துக்கு மாற்றுவது என நூலகத்துறை அதிகாரிகள் யோசித்து வருகின்றனர்.

நூலகம் தொடர்ந்து செயல்பட மாநகராட்சியே ஒரு இடத்தை ஒதுக்கித் தர வேண்டும் என, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் உள்ளிட்டோரிடம் நூலகத்துறை அதிகாரிகள் மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை மாற்று இடம் வழங்கப்படாததால், பாதி புத்தகங்களை பேக்கிங் செய்த நிலையில், என்ன செய்வதென்று தெரியாமல் நூலக அதிகாரிகள் தவிக்கின்றனர்.

இதுகுறித்து நூலக வாசகர் வட்ட தலைவர் எம்.பெத்து மாரியப்பன் கூறும்போது, “இந்த நூலகம் இப்பகுதி மக்களுக்கு, குறிப்பாக போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. கட்டிடத்தை இடிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளதால், இந்த நூலகத்துக்கு உடனடியாக மாநகராட்சி நிர்வாகம் மாற்று இடத்தை ஒதுக்கித் தர வேண்டும். மாநகராட்சிக்கு சொந்தமான பல கட்டிடங்கள் நகரில் உள்ளன. அதில் மக்களுக்கு வசதியான ஏதாவது ஒரு கட்டிடத்தில் இடம் ஒதுக்க வேண்டும்” என்றார் அவர்.

நல்ல இடம் ஒதுக்கப்படும்

மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன் கூறும்போது, “நூலகத்துக்கு வசதியான இடத்தை ஆய்வு செய்து வருகிறோம். பழைய மாநகராட்சி கட்டிடத்தின் மாடி உள்ளிட்ட சில இடங்களை பார்த்துள்ளோம். இதில் வசதியான இடம் ஒதுக்கி கொடுக்கப்படும். இந்த நூலகம் தொடர்ந்து செயல்படும். மாற்று இடம் நிச்சயம் ஒதுக்கப்படும். பேருந்து நிலைய கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்குவதற்கு முன் நூலகத்துக்கு உரிய இடம் ஒதுக்கி கொடுக்கப்படும். நவீன பேருந்து நிலைய பணிகள் முடிந்த பிறகு அந்த கட்டிடத்தில் நூலகத்துக்கு இடம் ஒதுக்கவும் ஏற்பாடு செய்யப்படும்” என்றார் அவர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

11 mins ago

தமிழகம்

27 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்