ஓய்வூதியர் நேர்காணலில் முரண்பாடுகள் களையப்படுமா?

By எஸ்.கோவிந்தராஜ்

அரசுத் துறையில் கடைநிலை ஊழியர் பணிக்குக்கூட லட்சக்கணக்கானோர் போட்டியிடுகின்றனர். இவர்களில் முதுநிலைப் பட்டதாரிகள், தொழிற்கல்வி பயின்றவர்களும் உண்டு. காரணம், பணி உத்தரவாதம், உறுதியான சம்பளம், ஓய்வூதியம், விடுமுறை உள்ளிட்ட இதர சலுகைகளே. பணிக் காலத்தில் சம்பளம் பெறுவதுடன், பணி ஓய்வுக்குப் பின் கிடைக்கும் ஓய்வூதியம் அரசு ஊழியர்களுக்கு மிக முக்கியமானதாகும்.

தமிழக அரசின் நிதித் துறை கொள்கை விளக்கக் குறிப்புப்படி, 2018 மார்ச் வரை தமிழகத்தில் 7.48 லட்சம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு, 32 மாவட்ட கருவூலங்கள், 243 சார் கருவூலங்கள் மூலம் ஆண்டுதோறும் ரூ.27ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பட்டுவாடா செய்யப்படுகிறது.

மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர், ஏனைய ஓய்வூதியம் பெறுவோர் என ஓய்வூதியர்களில் பல பிரிவினர் உள்ளனர். ஓய்வூதியம் பெற குறைந்தபட்ச தகுதிக்காலம்  10 ஆண்டுகளாகவும், முழு ஓய்வூதியம் பெற அதிகபட்ச தகுதிக் காலம் 30 ஆண்டுகளாகவும் அரசு நிர்ணயித்துள்ளது. அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும்போது பெற்ற சம்பளத்தில் 50 சதவீதம் அல்லது இறுதி 10 மாத பணிக்காலத்தில் பெற்ற சராசரி ஊதியத்தில் 50 சதவீதம், இதில் எது அதிகமோ அதனடிப்படையில் ஓய்வூதியம் நிர்ணயிக்கப்படுகிறது. ஓய்வூதியதாரர் இறக்கும்போது,  அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கவும் பல விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஓய்வூதியர்கள் ஆண்டுக்கொருமுறை, தாங்கள் உயிர்வாழ்வதை அரசிடம் உறுதிப்படுத்திக் கொள்வது அவசியமானது. இதற்காக,  ஏப்ரல், மே,  ஜூன் மாதங்களில் கருவூலங்களில் ஓய்வூதியதாரர்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது.

நீண்ட நேரம் காத்திருப்பு, அலைக்கழிப்பு உள்ளிட்ட அவஸ்தைகள் நேர்காணலின்போது தவிர்க்க முடியாதவை. ஏப்ரல் முதல் ஜூன்  வரை நேர்காணலுக்கு வராதவர்களுக்கு ஜூலை மாதம் வரை நீட்டிப்பு வழங்கப்படுகிறது. ஜூலை 31-ம் தேதிக்குள் நேர்காணலுக்கு வராத ஒய்வூதியர்களுக்கு ஆகஸ்ட் மாதம் ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது. பிறகு, அவர்கள் எப்போது நேர்காணலுக்கு வருகிறார்களோ, அதன் பின்பே ஓய்வூதியம் வழங்கப்படும். நேரில் வர முடியாத ஓய்வூதியர்கள், அரசு மருத்துவர் அல்லது சான்றொப்பம் தரத் தகுதியான அலுவலரிடம் வாழ்வுச் சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.

ஓய்வூதியம் பெறுவோர் இறந்து விட்டால், அதுகுறித்த தகவலை,  அவர்களது வாரிசுதாரர்கள், குடும்ப உறுப்பினர்கள் கருவூலத்துக்கு உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். ஓய்வூதியதாரர் இறந்தது குறித்து தகவல் தெரிவிக்காமல், அவர்களது வங்கிக் கணக்கில் இருந்து ஓய்வூதியத் தொகையை எடுப்பது குற்றமாகும். ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் நேர்காணல் மூலமே, இதுபோன்ற தகவல் கண்டறியப்பட்டு, முறைகேடுகள் நடக்காமல் தடுக்கப்படுகிறது.

கோவை மண்டலத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, கரூர் மாவட்டங்களில் இந்த ஆண்டு ஜூன் மாத இறுதி வரை சுமார் 5,000 ஓய்வூதியதாரர்கள் நேர்காணலுக்கு வரவில்லை. இவர்களது குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையைக் கணக்கில் கொண்டால்கூட, ஆண்டுக்கு ரூ.5 கோடி அரசுப்  பணம் முறைகேடாகச் செல்வது தடுக்கப்படும்.

இது தொடர்பாக கருவூலத் துறையில் நீண்டகாலம் பணியாற்றி, ஓய்வு பெற்ற அலுவலர்கள் கூறும்போது, “ஓய்வூதியர்கள் இறந்தால், அதுகுறித்த தகவலை உடனடியாக கருவூலத் துறைக்கு தெரிவிக்க வேண்டும். இறப்புச் சான்றிதழ் போன்றவற்றை பிறகுகூட கொடுக்கலாம். ஆனால், ஓய்வூதியத்தை நம்பியிருப்பவர்கள், ஓய்வூதியதாரர் இறப்பதைத் தெரிவிக்காமல் மறைத்துவிட்டு, அடுத்த நேர்காணல்வரை அவர்களது ஓய்வூதியப் பணத்தை எடுத்து, செலவழித்து விடுகின்றனர். எனவே, ஓய்வூதியர் மரணம் குறித்து தகவல் தெரிவிக்காமல் இருந்தாலோ, அவரது ஓய்வூதியத்தை எடுத்து செலவு செய்தாலோ, வழக்குத் தொடரப்படும் என்ற நடைமுறையை கொண்டுவர வேண்டும்.

மேலும், இறந்த ஓய்வூதியதாரர்களின் பணத்தை எடுத்து செலவிட்ட வாரிதாரர்கள், உறவினர்கள் மற்றும் சில முதியோர் இல்லங்களிடமிருந்து பணத்தை வசூலிக்க தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

அரசு விதிப்படி ஓய்வூதியர் இறந்தால், அவரது இணைக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. அதேநேரம், அவர்கள் மறுமணம் செய்தால் ஓய்வூதியம் நிறுத்தப்படும். தொடர்ந்து ஓய்வூதியம் பெற வேண்டும் என்பதற்காக மறுமணம் செய்ததை மறைத்தவர்கள் கூட கண்டறியப்பட்டுள்ளனர். இதேபோல, பல முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன” என்றனர்.

பணிச்சுமையில் அலுவலர்கள்!

கருவூலத் துறை அதிகாரிகள் கூறும்போது, “கருவூலத் துறையில் பணிபுரியும் ஓர் அலுவலர்,  1,000 ஓய்வூதியதாரர்களின் ஆவணங்களை நேர்காணலின்போது பார்க்க முடியும். ஆனால், பணியாளர் பற்றாக்குறை காரணமாக, சராசரியாக 2,500 ஓய்வூதியதாரர்களை நேர்காணல் செய்து, கணக்குகளை பராமரிக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும், ஓய்வூதியம் தொடர்பான அரசு ஆணைகளில் அடுத்தடுத்த திருத்தங்கள் வந்து கொண்டே இருப்பதாலும், பணிப் பளு அதிகரிக்கிறது.

சில நேரங்களில் தவறுதலாக கூடுதல் தொகை ஓய்வூதியதாரர்கள் கணக்குக்கு சென்றுவிடும். கூடுதல் தொகை வரும்போது அதை கருவூலத்துக்கு தெரிவிக்க வேண்டும். சிலர் இதையும் செய்வதில்லை. இதனால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதுடன், சம்மந்தப்பட்ட அலுவலருக்கும் சிக்கல் ஏற்பட்டு விடுகிறது. இதுபோன்ற அனுபவங்களின் விளைவாகத்தான், ஓய்வூதியதாரர்களிடம் சில நேரங்களில் கடுமை காட்ட வேண்டிய நிலை ஏற்பட்டு விடுகிறது” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

தமிழகம்

42 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

மேலும்