விவசாயிகளுக்கு கைகொடுக்கும் பட்டுப்புழு வளர்ப்பு!

By ஆர்.கிருஷ்ணகுமார்

தண்ணீர்ப் பற்றாக்குறை, விவசாயக் கூலியாட்கள் கிடைக்காதது உள்ளிட்ட பிரச்சினைகளால் வாழை, தென்னை, காய்கறிகள்  உள்ளிட்ட பயிர் சாகுபடியைக் கைவிட்டு, பட்டுப்பழு வளர்ப்பு, அதற்கான மல்பெரி சாகுபடி வளர்ப்பில் ஈடுபட்டேன். கொஞ்சம் பழகிவிட்டால், பட்டுப்புழு வளர்ப்பு விவசாயிகளுக்கு நிச்சயம் கைகொடுக்கும்” என்கிறார் பட்டுப்பூச்சி வளர்ப்பு விவசாயி ஈஸ்வரமூர்த்தி(40).

கோவை மாவட்டம் பூலுவப்பட்டியில் பட்டுப்புழு வளர்ப்புக் கூடம் அமைத்துள்ள இவர், அதற்காக  மல்பெரி செடி சாகுபடியிலும் ஈடுபட்டுள்ளார். அவரை சந்தித்தோம்.

“பூலுவப்பட்டிதான் பூர்வீகம். பெற்றோர் ஆறுச்சாமி-லட்சுமி. பாரம்பரிய விவசாயக் குடும்பம். ஆலாந்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு வரை படிச்சேன். அப்பா காய்கறி, தென்னை விவசாயத்தில் ஈடுபட்டிருந்தார். சின்ன வயசுலயே, அப்பாவுக்கு உதவியாக விவசாய வேலைகளை செய்வேன். காலையில் மாடுகளுக்கு தண்ணீர், தீவனம் வைக்கறது, கட்டுத்தாரையை (தொழுவம்) சுத்தம் செய்வதுனு, பள்ளிக்கூடத்துக்குப் போறதுக்கு முன்னாடி சில வேலைகளை செய்வேன். நாங்கள் செண்டுமல்லி, வாடாமல்லி, கோழிக்கொண்டை சாகுபடியிலும் ஈடுபட்டிருந்தோம். சாயந்திரம் பள்ளிக்கூடம் விட்டுவந்த பின்னாடி, பூக்களை பறிக்கற பணியில் ஈடுபடுவோம்.

தண்ணீர், கூலி ஆட்கள் பிரச்சினை...

பத்தாவது முடிச்சவாட்டி, முழு நேர விவசாய வேலைக்கு வந்துட்டேன். அப்ப தண்ணீர் வசதி இருந்ததால் கரும்பு சாகுபடியில் ஈடுபட்டோம். அப்புறம் வாழை, தென்னை, காய்கறிப் பயிர்கள் சாகுபடி செஞ்சோம். ஒரு கட்டத்துல நிலத்தடி நீர்மட்டம் குறைய ஆரம்பிச்சது. அதேபோல, விவசாய வேலைக்கு ஆட்கள் கிடைக்காத சூழல் உருவானது. விளை பொருட்களுக்கு உரிய விலையும் கிடைக்கலை.

கடந்த 5 வருஷத்துக்கு முன்னாடி, பக்கத்துல ஒருத்தர் மல்பெரி சாகுபடி செஞ்சிருந்தார். இதனால், நானும் மல்பெரி சாகுபடியில் ஈடுபடலாம்னு முடிவு செஞ்சேன். இதுக்காக பட்டு வளர்ப்புத் துறையை அணுகியபோது, நிறைய உதவி செஞ்சாங்க. ஆரம்பத்துல 2 ஏக்கர்ல மல்பெரி செடிகளை நட்டேன். அதேபோல, பட்டுப்புழு வளர்ப்புக் கூடம் அமைக்க ஷெட்டும் போடத் தொடங்கினேன்.

ஆரம்பத்துல 2 ஏக்கர்லயும் மல்பெரி சாகுபடி செஞ்சு, 200 முட்டைத் தொகுதி அளவுக்கு பட்டுப்புழுக்களை வளர்த்தோம். ஆனால், தண்ணீர்ப் பற்றாக்குறை காரணமாக, இப்ப அரை  ஏக்கர்ல மட்டும்தான் மல்பெரி சாகுபடி செய்யறோம்.எங்க பட்டுப்புழு வளர்ப்பு ஷெட் 52 அடி நீளம், 22 அடி அகலம் கொண்டது. இதில் 2 ரேக்குகள் இருக்கு. ஒரு ரேக்குல மட்டும் பட்டுப்புழுக்களை வளர்க்கறேன். இந்த ஷெட் அமைக்க ரூ.2.50 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை செலவானது. இதில், ரூ.87,500 அரசு மானியம் கிடைச்சது. இதேபோல, ரூ.52,500 புழு வளர்ப்பு

உபகரணங்களுக்காக கொடுத் தாங்க. கட்டர், மோட்டார், நெட்ரிக்கா (வலை) எல்லாம் வாங்கி, பட்டுப்புழு உற்பத்தி ஷெட் அமைச்சேன்.

தட்பவெப்ப நிலை முக்கியம்!

பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, தட்பவெப்ப நிலை மிக அவசியம். 20 டிகிரி செல்சியஸுக்கு கீழேயும் வெப்பம் இறங்கிவிடக் கூடாது. 25 டிகிரிக்கு மேலேயும் அதிகரிக்கக்கூடாது. காற்றோட்டம் அவசியம். ஷெட் மேலே ஓடு போட்டிருக்கோம்.

புழுவைத் தாக்கும் ஈக்களைக் கட்டுப்படுத்தவும், வெயில் இறங்காமல் இருக்கவும் மேலே வலை கட்டியிருக்கோம்.நான் முட்டை வாங்கி, புழு வளர்ப்பது கிடையாது. இளம்புழு வளர்ப்பாளர்கள் கிட்ட இருந்து, 7 நாள் வளர்ந்த புழுக்களை வாங்கிக் கொள்கிறேன். முட்டை வாங்கி புழு வளர்த்தால், 45 நாளைக்கு அப்புறம்தான் பலன் கிடைக்கும். இளம்புழு வாங்கும் போது ஒரு மாதத்தில் பலன் கிடைக்கும்.

இப்ப 75 முட்டைத்தொகுதி அளவுக்கு பட்டுப்புழுக்களை வளர்த்துகிறேன்.  மல்பெரி இலையைப் பொறுத்து, 25 முட்டைத்தொகுதி முதல் 200 முட்டைத்தொகுதி வரை வளர்த்த முடியும். ஒரு முட்டைத்தொகுதியில் குறைந்தபட்சம் 400 முதல்  500 புழுக்கள் இருக்கும். 100 முட்டைத்தொகுதியில் சுமார் 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் புழுக்கள் வரை இருக்கும். 100 சதவீதம் அறுவடை கிடைத்தால், 80 கிலோ வரை பட்டுக்கூடு கிடைக்கும். அதிகபட்சம் 65 முதல் 80 சதவீதம் அறுவடை கிடைக்கும்.

இளம்புழு வளர்ப்பாளர்களிடம் இருந்து புழுக்களை வாங்குவதால், ரெண்டு பருவம் முடிந்துதான் எங்கிட்ட வரும். புழுக்களுக்கு காலை, மாலைனு ரெண்டு நேரம் மல்பெரி செடிகளை உணவாகப் போடணும். இந்தப் புழுக்கள் மல்பெரி செடி இலைகளை மட்டும்தான் சாப்பிடும். வேறு எதுவும் சாப்பிடாது. முதல் மூணு நாளைக்கு அப்புறம் தோல் உரிக்கும். அப்போது சுண்ணாம்பு தூவி, புழுக்கள் சாப்பிடு

வதை தடுப்போம். அதுக்கப்புறம் மீண்டும் மூன்றரை நாளில் அடுத்த தோல் உரிப்பு வரும். அப்பவும் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவோம். 25 நாட்கள்ல பட்டுக்கூடு கிடைத்துவிடும். ஷெட்டை தூய்மைப்படுத்தல், கிருமி நீக்கம்னு 5 நாட்கள் தேவைப்படும். ஒரு வருஷத்துல 10 முறை பட்டுக்கூடுகளை எடுக்கலாம்.

அரசு விற்பனைக் கூடம்!

வளர்ந்த பட்டுக்கூடுகளை அரசு பட்டுப்புழு  விற்பனைக் கூடத்துல நேரடியாக விற்பனை செய்துடுவோம். பட்டுக்கூடுவில் உள்ள பட்டின் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்வாங்க. கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டு விற்பனைக்கூடத்துல விலையை நிர்ணயம் செய்து, டீலர்கள் மூலம் வாங்கிக்குவாங்க. பட்டுக்கூடுவைப் பிரித்து நூல் எடுத்து, சாயமேற்று, கடைசியில் ஆடை தயாரிக்க அனுப்புவாங்க. நான் வெண் பட்டு ரக பட்டுப்புழுக்களை வளர்க்கிறேன்.

இப்ப நிறைய பேரு இந்த ரகங்களைத்தான் வளர்க்கிறாங்க.

பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, மாடு வளர்ப்பைவிட அதிக லாபம் கிடைக்குது. கொஞ்சம் பழகிட்டோம்னா, விவசாயிகளுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். பட்டுப்புழு வளர்ப்பை பொறுத்தவரை, செடிகளின் பங்கு 37 சதவீதம். தட்பவெப்ப நிலையின் பங்கு 35 சதவீதம். மீதம் தரத்தைப் பொறுத்தது.

மல்பெரி பயிரை ஒருமுறை நடவு செய்தால், 25 வருஷங்களுக்கு செடிகளை எடுத்து, அதன் இலைகளை உணவாகப் பயன்படுத்தலாம்.  ஆரம்பத்துல நிறைய விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டாங்க. இப்ப தொண்டாமுத்தூர் பகுதியில் 4 விவசாயிகள் மட்டும்தான் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடறாங்க.

பெரும் பிரச்சினை கிருமி நீக்கம்...

இதில் கிருமி நீக்கம்தான் பெரிய பிரச்சினை. பட்டுப்புழுக்களுக்கு 4 வகையான கிருமித்  தாக்குதல் உண்டு. பால் புழு, கரும்புழு, ஊசிப்புழு தாக்குதல்னு கிருமித் தாக்குதல் அதிகம். அதேபோல, குளிர் அதிகமானா புழுக்கள் சாக்பீஸ்போல மாறிவிடும். இதுக்கு மருந்து இருந்தாலும், அந்த முறை பாதிப்பை தடுக்க முடியாது. மீண்டும் அடுத்த முறை பாதிப்பு வராமல் வேண்டுமானால் தடுக்கலாம். கிருமி நீக்கம் செய்வது மிக சிரமமான விஷயம். பிளீச்சிங் பவுடர், கிருமி நீக்கம் பவுடரை பயன்படுத்தி, ஷெட்டை சுத்தம் செய்வோம். ஷெட்டை முழுமையாக மூடிவிட்டு, 2 மணி நேரம் உள்ளே இருக்கணும். கண் எரிச்சல், மயக்கம் எல்லாம் சாதாரணமாக வரும்.

ஒரு வருஷத்துக்கு முன்னாடி பால் புழு தாக்குதல் தொடர்ந்து இருந்தது. இதனால் கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான 4 பேரும், பட்டுப்புழு வளர்ப்பையே முற்றிலுமாக கைவிடலாம்னு யோசிச்சோம். அப்புறம் கூடிப் பேசியும், அதிகாரிகள் ஊக்கப்படுத்தியும் பாதிப்பிலிருந்து மீண்டு வந்தோம்.கிருமி தாக்குதல் மட்டுமில்லாமல், எலி, அணில் தொல்லையும் உண்டு. காலையில் அணிலும்,  இரவு எலிகளும் புகுந்து, கூட்டுப்புழுக்களை விரும்பித் தின்றுவிடும். இதையெல்லாம் சமாளித்துதான் பட்டுப்புழுக்களை வளர்க்கிறோம்.

இதேபோல, பட்டுப்புழு வளர்ப்பாளர்கள் ஒற்றுமையாக இருந்து, தகவல்களை பரிமாறிக் கொள்கிறோம். மார்க்கெட்டுக்கு ஒற்றுமையாகப் போய், இளம்புழுக்களை வாங்குகிறோம். தீனி இல்லைனா, ஒருத்தருக்கொருத்தர் மாத்திக்கிறோம். ஒரு நாள், ரெண்டு நாளைக்கு போதுமான தீனி இல்லைனாகூட, ஒரு மாத உழைப்பும் வீணாகிவிடும். இரண்டு வேளையும் தீனி வைக்கற அளவுக்கு, மல்பெரி செடிகளை வளர்த்து வைத்துக்கொள்வது ரொம்ப அவசியம்.அதிகாரிகள் ஆரம்ப கட்டத்துல நிறைய உதவி செஞ்சாலும், அதுக்கப்புறம் கண்டுக்கறது இல்லை.  அதேபோல, விவசாயிகளோட தேவையை அறிந்து உதவி செய்தால் பயனுள்ளதாக இருக்கும்.

இப்பவெல்லாம் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துபோயிடுச்சு. தண்ணீர் இருந்தா, இன்னும் கூடுதலாக மல்பெரி சாகுபடி செஞ்சு, அதிக எண்ணிக்கையில் பட்டுப்புழுக்களை வளர்த்த முடியும்.

மார்க்கெட்டைப் பொறுத்தவரை, கிலோவுக்கு ரூ.300 கிடைக்குது. நிரந்தரமாக ரூ.350 கிடைத்தால், பட்டுப்புழு வளர்ப்பாளர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தரம் குறைவாக இருந்தால், நிச்சயம் விலை கிடைக்காது. தரம் நல்லா இருக்கணும்னா, மல்பெரி செடி தரமாக  இருக்கணும். அதுக்கு தண்ணீர் தேவை. மழை பெய்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தால் மட்டுமே, எங்களால பட்டுப்புழு வளர்ப்பை தொடர முடியும்” என்றார் ஈஸ்வரமூர்த்தி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 hours ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்