மாயமான புலிகள் பாதுகாப்பாக உள்ளன: அமைச்சர் தகவல்

வண்டலூர் உயிரியல் பூங்காவில் 5 புலிகளும் பாதுகாப்பாக உள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சர் ஆனந்தன் தெரிவித்தார்.

புலிகள் பாதுகாப்பாக உள்ளது சிசிடிவி காமராவில் பதிவாகியுள்ளதாகவும், புலி சிக்கியதும் மயக்க ஊசி அளித்து புலி மீண்டும் கூண்டில் அடைக்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

சென்னை வண்டலூர் அண்ணா உயிரியல் பூங்கா 602 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. யானை, சிங்கம், புலி உட்பட ஏராளமான விலங்குகள், பறவைகள், பாம்புகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன. புலிகள் வாழும் பகுதி 6 ஏக்கரில் பள்ளத்தாக்கு போல அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சுற்றி அகழியும் அதைச் சுற்றி 8 அடி உயரத்துக்கு கருங்கல் சுவர் கட்டப்பட்டுள்ளது.

2 நாட்களுக்கு முன்பு புலிகள் வாழ்விடப் பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் சுமார் 85 அடி நீளத்துக்கு சேதமாகி விழுந்துவிட்டது. இதை பூங்கா ஊழியர்கள் உடனே கவனித்து, அவசரமாக வலை, இரும்பு வேலிகள் அமைத்தனர். சுவர் விழுந்த சந்தர்ப்பத்தில், அங்கிருந்த புலிகளில் நேத்ரா என்ற வங்கத்து பெண் புலி மட்டும் மாயமாகிவிட்டதாக தகவல் பரவியது. அது காட்டுப் பகுதியில் வெளியேறிவிட்டதாகவும், அருகே உள்ள குடியிருப்புப் பகுதிகளில் எந்த நேரத்திலும் நுழையலாம் என்றும் பெருங்களத்தூர், நெடுங்குன்றம், ஓட்டேரி, ஊனமாஞ்சேரி பகுதி மக்கள் மத்தியில் வதந்தி பரவியது.

இந்நிலையில், பூங்காவில் இன்று வனத்துறை அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மாயமானதாகக் கூறப்படும் புலி, வண்டலூர் பூங்காவுக்கு உட்பட்ட காட்டுப் பகுதியில்தான் உள்ளது. அதன் நடமாட்டம் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.புலி சிக்கியதும் மயக்க ஊசி அளித்து புலி மீண்டும் கூண்டில் அடைக்கப்படும்" என தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE