உள்ளாட்சிக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும்: பெண் ஊராட்சி தலைவர்கள் கோரிக்கை

உள்ளாட்சித்துறைக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வேண்டும் என மாவட்ட பெண் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

செங்கல்பட்டில் ஊராட்சி மன்ற பெண் தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் இணைந்து பெண் ஊராட்சி தலைவர்களுக்கான பயிற்சி மற்றும் மாநாட்டை நடத்தின. இதில், மாவட்டம் முழுவதுமிருந்து பெண் ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். பெண் ஊராட்சி தலைவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் மற்றும் சவால்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்பட்டது.

கூட்டமைப்பு உருவாக்கம்

மேலும், ஊராட்சி தலைவர்களுக்கு உள்ள முக்கிய அதிகாரங்கள், பொறுப்புகள் மற்றும் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994-ல் தேவைப்படும் மாற்றங்கள் மற்றும் நிதிவரவு செலவு கணக்கு கையாள்வது உள்ளிட்டவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டது. மாநாட்டின் நிறைவில் பெண் ஊராட்சி தலைவர்களின் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

மாநாட்டில் அரசியல் சாசன 73-வது சட்ட திருத்தத்தின்படி உள்ளாட்சிகளுக்கான 29 துறைகளில் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். மாவட்ட ஆட்சியரின் வரைமுறையற்ற அதிகாரங்கள் நீக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிகழ்ச்சியில், மனித உரிமை மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சித்ரா, பெண்களுக்கான சட்ட சேவை மைய ஒருங்கிணைப்பாளர் அன்னலட்சுமி மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவன அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE